”மிராய் என்றால் எதிர்காலத்தின் நம்பிக்கை” – தேஜா சஜ்ஜா விளக்கம்!
‘பீப்பிள் மீடியா ஃபேக்டரி’ விஷ்வா தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் கார்த்திக் கட்டம்னேனி டைரக்ட் பண்ணி, வரும் 12-ஆம் தேதி உலகெங்கும் தியேட்டர்களில் ரிலீசாகிறது ‘மிராய்’ என்ற படம். இதில் தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோவான தேஜா சஜ்ஜா, மஞ்சு மனோஜ், ஸ்ரேயா சரண், ஜெயராம், ஜெகபதி பாபு என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. தெலுங்கில் தயாராகி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து இந்திய மொழிகளிலும் சீனா, ஜப்பான் மொழிகளிலும் டப்பாகி வெளியாகிறது.
தமிழில் ஏஜிஎஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் ரிலீஸ் பண்ணுகிறது. படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, ஆகஸ்ட்.01-ஆம் தேதி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதற்காக ஹீரோ தேஜா சஜ்ஜா ஹைதரபாத்திலிருந்து வந்திருந்தார்.
‘மிராய்’-ன் மிரட்டலான டிரெய்லர் திரையிடப்பட்ட பின் பத்திரிகையாளர்களிடம் பேசினார் தேஜா சஜ்ஜா…
“சென்னைக்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நான் நடித்த ‘ஹனுமான்’ படம் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிலும் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்காக தமிழ் மீடியாக்களுக்கும் மக்களுக்கும் நன்றி. இப்போது ‘மிராய்’ மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறேன். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடுவது மிகவும் பெருமைக்குரியது. இதற்காக அர்ச்சனா கல்பாத்திக்கும் ஐஸ்வர்யா கல்பாத்திக்கும் மனமார்ந்த நன்றி.
‘மிராய்’ என்றால் எதிர்காலத்தின் நம்பிக்கை என்று அர்த்தம். இதெல்லாம் நடக்குமா? நடந்தால் நல்லாயிருக்கும்னு நமக்கு சில விஷயங்கள் தோணும். அதெல்லாம் நிஜத்தில் நடக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த சினிமா மூலம் எனது ஆசை நிறைவேறியுள்ளது.
நமது இந்திய சினிமாவின் தொழிநுட்பம் உலகத் தரத்திற்கு உள்ளது. அதனால் இந்தப் படத்தில் வி.எஃப்.எக்ஸ் டைரக்டர்கள் பிரசாந்தும் கார்த்திக்கும் கடுமையாக உழைத்துள்ளார்கள். மற்ற படங்களைவிட இந்தப் படத்தில் அதிவேக சண்டைக் காட்சிகள் இருப்பதால், தாய்லாந்திலிருந்து ஸ்டண்ட் மாஸ்டர்களை வரவைத்துள்ளோம்.
மூன்று வயது குழந்தை முதல் எண்பது வயது முதியவர்கள் வரை அனைவருக்கும் இப்படம் பிடிக்கும். ‘பீப்பிள் மீடியா ஃபேக்டரி’ யுடன் இரண்டாவது முறையாக இணைகிறேன். இதற்காக விஷ்வா சாருக்கு நன்றி. இந்தப் படத்தின் டைரக்டர் கார்த்திக் கட்டம்னேனியால் தான் எல்லாம் சாத்தியமானது.
இப்படத்திற்கு தமிழர்கள் ஆதரவு தரவேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் தேஜா சஜ்ஜா.
— மதுரை மாறன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.