மிசா காலத்து நினைவுகளைப் பகிர்ந்தார் – மிசா திருச்சி தி.சாக்ரடீஸ் – யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை – 2

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அங்குசம் சமூக நல அறக்கட்டளை – யாவரும்.. கேளீர்… தமிழியல் பொதுமேடை – 2 – மிசா காலத்து நினைவுகளைப் பகிர்ந்தார் – தி.சாக்ரடீஸ்

அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு மாதத்தின் 2ஆம் சனி, 4ஆம் சனிக்கிழமைகளில் யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை – 2 ஆம் நிகழ்வு 27.07.2024ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வுக்குத் திருச்சி ஜமால் முகமது கல்லூரி தமிழ் இணைப்பேராசிரியர் முனைவர் மு.சாதிக்பாட்சா தலைமை தாங்கினார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை - 2
யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை – 2

மிசா காலத்து நினைவுகளை நெருக்கடிகாலத்தில் மிசா கைதியாக இருந்த தி.சாக்ரடீஸ் கூட்டத்தினரிடம் பகிர்ந்து கொண்டார். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் தி.நெடுஞ்செழியன் சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்தார். புரவலர் திருச்சி தூய வளனார் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் ரெ.நல்லமுத்து சிறப்பு விருந்தினர்களுக்குப் பயனாடை அணிவித்துச் சிறப்பு செய்தார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

தலைமை உரையாற்றிய முனைவர் மு.சாதிக்பாட்சா,“50 ஆண்டுகளுக்கு முன் நடந்த நெருக்கடி கால நிலை குறித்தும், உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் ‘மிசா’ குறித்தும் இப்போது பேசவேண்டிய தேவையில்லை என்பது கருத்து. நெருக்கடிகால நிலை குறித்து நாம் பேசினால் அது பாஜக போன்ற காங்கிரஸ் எதிர்ப்பாளர்களுக்கு வசதியாகப் போய்விடும்.

வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள மிசா குறித்து வரலாற்று பார்வையில் பேசலாம். விமர்சனம் செய்து பேசவேண்டிய தேவையுள்ளதா என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். நெருக்கடிக் காலத்தில், எழுத்துரிமை, பேச்சுரிமை, வெளியீட்டு உரிமைகள் என அனைத்து மனித உரிமைகளும் நசுக்கப்பட்டன.

யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை - 2
யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை – 2

ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டதுபோல் அட்டவணை சாதி மற்றும் பழங்குடி மக்களுக்கு நிரப்படாத அரசு வேலைகள் கிடைத்தன என்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் நேரத்திற்கு வந்து அரசுப் பணியில் ஈடுபட்டனர். இரயில் சரியான நேரத்திற்கு இயக்கப்பட்டன என்றும் இப்படியான மெல்லிய சர்வாதிகாரத்தை மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதும் நெருக்கடிகாலத்தில் விளைந்த நன்மைகளும் உள்ளன. என்றாலும் மனிதர்களின் அடிப்படை உரிமைகள் அக் காலத்தில் பாதிப்புக்குள்ளாகப்பட்டது என்பதும் உண்மையே” என்று குறிப்பிட்டார்.

சிறப்புரையாற்றிய மிசா தி.சாக்ரடீஸ்,“1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் நாள் இந்தியாவில் நெருக்கடிகால நிலை அமல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உள்நாட்டு பாதுகாப்பு சட்டமான ‘மிசா’வினால் திமுக. திக, இ.கம்யூனிஸ்ட் மற்றும் ஜனசங்கத்தினர் என நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இக் காலத்தில் பத்திரிகைச் செய்திகள்கூடத் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடும் நிலை இருந்தது.

நான் 1976 பிப்.6ஆம் நாள் கீழக்கல்கண்டார் கோட்டையிலிருந்து, தூவாக்குடியில் உள்ள அரசு கல்லூரியில் பணியாற்றச் சென்றுகொண்டிருந்தபோது எங்கள் ஊர் காரைக்குளம் அருகில் காவல்துறை ‘நீ தானே சாக்ரடீஸ்’ என்று கேட்க, அவர் என் அண்ணன் அவர் வீட்டில்தான் இருக்கிறார் என்று சொல்லிவிட்டுப் பேருந்தில் ஏறினேன்.

வீட்டிற்குச் சென்ற காவல்துறையிடம் என் அண்ணன் மதியழகன்,‘தம்பி சாக்ரடீஸ் இப்போதுதான் அரசுக் கல்லூரிக்குச் சென்று கொண்டிருக்கிறார்’ என்று பதில் அளித்தவுடன் ஜீப்பில் வேகமாக வந்து பேருந்தை மறித்து, என்னை மேலக் கல்கண்டார்கோட்டையில் காவல்துறை கைது செய்தது.

மிசா திருச்சி தி.சாக்ரடீஸ்
மிசா திருச்சி தி.சாக்ரடீஸ்

பின்னர் என்னைப் பொன்மலை காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். அங்கே நான் பொய் சொல்லித் தப்பியதை என்னைக் கைது செய்த காவலர் மற்றவர்களிடம் சொல்ல, காவலர் இருவர் என் கன்னத்தில் அறைந்தனர். பின்னர் ஆடைகளைக் களையச் செய்து உள்ளாடையுடன் லாக்-அப்பில் இருக்கவைத்தார்கள்.

எஸ்.ஐ. பொறுப்பில் இருந்தவர் என் தந்தைக்கு முன்பே அறிமுகம் ஆனவர் என்ற முறையில் லாக்-ஆப்பிலிருந்து வெளியே வரச்சொல்லி ஆடைகளை அணிந்துகொண்டு சேரில் அமர செய்தார். எனக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

மாலை 4.00 மணியளவில் திருச்சி நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்குக் காவலர்கள் என்னைப் அழைத்துச்சென்றனர். அங்கே என்னை போட்டோ எடுத்தார்கள். அங்கே ஒரு பெரிய காவல்துறை அதிகாரி,“நீங்கள் தனித்தமிழ்நாடு கேட்டு, திருச்சிக் கூட்டத்தில் பேசியதற்காக நான் கைதுசெய்யப்பட்டேன்” என்று கூறினார். என்னை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல், என்னை மாலை 6.00 மணியளவில் திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சிறையில் திருச்சி, தஞ்சாவூர், கருவூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் பலர் ஜனவரி 31ஆம் நாள் கைது செய்யப்பட்டனர். நான் சிறையில் அடைக்கப்பட்டேன். காலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள கோசி மணி, தாழை மு.கருணாநிதி, மலர்மன்னன், ஏவிக் கிருஷ்ணமூர்த்தி, வழக்கறிஞர் அமு சம்பந்தம் ஆகியோரைச் சந்தித்தேன்.

என்னிடம் திருச்சியில் மக்கள் நெருக்கடியை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துகிறார்களா? என்று கேட்டனர். அப்படி எதுவும் நடக்கவில்லை. மக்கள் இயல்பாகத்தான் இருக்கிறார்கள் என்று பதில் கூறினேன்.

சிறைச்சாலையில் காலையில் கோதுமை தோசை, மதியம் சாப்பாடு, இரவில் சப்பாத்தி அல்லது வரைட்டி ரைஸ் வழங்கினர். என்னைப் போன்ற சிறிய வயதில் கைது செய்யப்பட்டவர்களும் சிறைச்சாலையில் வழங்கப்பட்ட உணவு போதுமானதாக இல்லை என்று, சோறு வடித்த கஞ்சியைச் சிறைச்சாலை உணவுக் கூடத்தில் பெற்று நான் அருந்தினோம்.

இதனைக் கண்ட கோசி மணி, தாழை கருணாநிதி, ஏவிக் கிருஷ்ணமூர்த்தி, மலர்மன்னன் ஆகியோர் சிறைக் கண்காணிப்பாளரைச் சந்தித்து ‘எங்களுக்குரிய பங்கீட்டை எங்களிடம் கொடுத்துவிடுங்கள். நாங்கள் சமைத்து உண்ணுகிறோம். இளைஞர்கள் உணவு போதவில்லை என்பதால் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறோம்” என்று சொல்லி, உணவு பொருள்களை வாங்கி வந்தனர். பின்னர்ப் பசியால் வாடுவது என்ற நிலை மாறியது.

சிறையில் எனக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தீவிரவாதி என்று கைது செய்யப்பட்ட பெண்ணாடம் கலியபெருமாள் அவர்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்து.

பின்னர் அவர் ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்துப் படிக்கச்சொன்னர்.  சிறை மருத்துவமனையிலிருந்து டிஜ்சார்ஜ் செய்யப்பட்டு என் அறைக்கு வந்தேன். உடன் கலியபெருமாள் கொடுத்துப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.

சிறையில் இருந்து கரூவூர் சுபா. இராஜகோபால், என்ன புத்தகம் படிக்கிறாய் என்றவுடன் பெண்ணாடம் கலியபெருமாள் கொடுத்த நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன் என்றவுடன் சுபா இராஜகோபால் பதறிக்கொண்டு,“அந்தப் புத்தகம் உன் கையில் இருந்தால் நீ… தீவிரவாதி என்று கைது செய்யப்படுவாய் என்று எச்சரித்தபோது, சிறை காவலர்கள் எல்லா அறைகளையும் சோதனையிட்டனர்.

சுபா இராஜகோபால், அந்தப் புத்தகத்தைப் படுக்கக் கொடுத்த பெட்-ஐக் கிழித்துப் புத்தகத்தை உள்ளே வைத்தார். காவலர்கள் சோதனையில் இந்தப் புத்தகம் கிடைத்திருந்தால் நான் தீவிரவாதியாக எண்ணப்பட்டிருப்பேன்.

யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை - 2
யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடை – 2

சிறைச்சாலையின் அறைகளிலிருந்து காலை 6 மணிக்குத் திறந்துவிடுவார்கள். மாலை 6 மணிக்கு மீண்டும் சிறையின் அறையில் அடைத்துவிடுவார்கள். அந்த உளவியல்தான் மனஉலைச்சலை தந்தது. பிறகு எப்போது விடுதலை செய்யப்படுவோம் என்று யாருக்கும் தெரியாது என்பதால் வயது முதிர்ந்த கட்சியினர் அதற்காக வருந்திக் கொண்டிருந்தார்கள். எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

சில திமுக முன்னணியினர் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்து விடுதலை அடைய முயற்சிகளை மேற்கொண்டனர். நான், பி.ஆர்.குப்புசாமி, தாராநல்லூர் சுப்பிரமணியன், இராபி போன்றவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்க மறுத்தோம்.

சிறைச்சாலையில் இருந்த எனக்கு வேலைவாய்ப்புக்கான தேர்வெழுத என்னைக் கையில் விலங்கிட்டுத் திருச்சி தேசியக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். தேர்வெழுத வந்த எல்லாரும் கைவிலங்கோடு இருக்கும் என்னைப் பதற்றத்துடன் பார்த்தனர்.

பின்னர்க் காவல்துறை புடைசூழ நின்றுகொண்டிருக்க, தனி அறையில் தேர்வை எழுதினேன். நான் எழுதிய இரயில்வே பணிக்கான தேர்வில் வெற்றிபெற்று, பணியில் சேர ஆணையும் அனுப்பப்பட்டது.

நான் இந்திய அரசின் உள்நாட்டு பாதுகாப்பு அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பதால் பணியில் சேரமுடியாது என்று சிறை கண்காணிப்பாளர் உறுதியாகத் தெரிவித்தார். இதனால் இரயில்வே பணி கிடைக்காமல் போனது. பின்னர் 1977ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டோம்.” என்று நினைவலைகளைப் பகிர்ந்து உரையை முடித்தார்.

நிகழ்வில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு அங்குசம் சமூக நல அறக்கட்டளை தலைவர் ஜெ.டிஆர் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தார். கூட்டம் திட்டமிட்டபடி சரியாக இரவு 8.00 மணிக்கு நிறைவுபெற்றது.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.