அங்குசம் பார்வையில் ‘மிஸ் ஷெட்டி,மிஸ்டர் பொலி ஷெட்டி’
அங்குசம் பார்வையில் ‘மிஸ் ஷெட்டி,மிஸ்டர் பொலி ஷெட்டி’
தயாரிப்பு: யூ.வி.கிரியேஷன்ஸ் வம்சி & ப்ரமோத். டைரக்டர்: பி.மகேஷ்பாபு. ஆர்ட்டிஸ்ட்ஸ்: அனுஷ்கா, நவீன் பொலி ஷெட்டி, முரளி சர்மா, துளசி ஜெயசுதா, நாசர். டெக்னீஷியன்கள்: ஒளிப்பதிவு: நிரவ் ஷா, இசை: ரதன், எடிட்டர்: கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ். தமிழக ரிலீஸ்: ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா. பிஆர்ஓ: யுவராஜ். லண்டனில் உள்ள ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் சீஃப் செஃப்பாக இருக்கார் அனுஷ்கா. தனக்கு ஆறு வயசு இருக்கும் போது அம்மாவை தவிக்கவிட்டு அப்பன் எஸ்கேப் ஆனதால் திருமணத்தின் மீதே அனுஷ்காவுக்கு கடும் வெறுப்பு, தீராத கடுப்பு. அம்மா ஜெயசுதா எவ்வளோ வற்புறுத்தியும் திருமணம் செய்து கொள்வதில்லை என்பதில் உறுதியாக இருக்கும் அனுஷ்காவும் அவரது அம்மா ஜெயசுதாவும் பிறந்த மண்ணான ஆந்திர பூமிக்கு ( நமக்கு தமிழ்நாடு) வருகிறார்கள்.
வந்த இடத்தில் திடீரென ஜெயசுதா இறந்துவிட, இன்னும் கூடுதலாக, தீவிரமாக திருமணத்தை வெறுக்கிறார் அனுஷ்கா. அவரது தோழியும் கம்பல் பண்ணிப் பார்க்க, மசியவில்லை அனுஷ்கா. “சரி கல்யாணம் பண்ணமாட்டேன், ஆனா ஒரு ஆம்பளை மூலமா குழந்தை மட்டும் பெத்துக்கிறேன்” என அனுஷ்கா சொன்னதைக் கேட்டு தலை கிர்ர்ருன்னு சுத்துது தோழிக்கு. இதை சமாளித்துக் கொண்டு கருத்தரிப்பு மையம் ஒன்றிற்கு சென்று விந்தணு டொனேட் பண்ணுபவர் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையை சொல்கிறார் அனுஷ்கா. ஓகே சொல்லும் டாக்டர், டோனர் குறித்த விவரங்களை சொல்லக் கூடாது என்பது சட்டம் என்கிறார்.
“என் வயித்ல வளரும் குழந்தையின் விந்தணுவுக்கு சொந்தக்காரனுடைய ஹைட், வெயிட், கலர், கேரக்டர் இதெல்லாம் தெரியாம எப்படி” என முடிவு செய்து அனுஷ்காவே டைரக்டாக இன்டர்வியூ நடத்தி சலித்துப் போன நேரத்தில் ஒரு பாரில் ஸ்டேண்ட் அப் காமெடி ஷோ நடத்தும் நவீன் பொலி ஷெட்டி யை பார்க்கிறார் . இவன் தான் நம்ம ப்ளானுக்கு சரிப்பட்டு வருவான் என்ற முடிவுடன் நவீனுடன் பழக ஆரம்பிக்கிறார். நவீனோ, அனுஷ்கா தன்னை லவ் பண்ணுவதாக நினைத்து மனசுக்குள் ஜில்லாகிறார். அதன் பிறகு நடக்கும் ‘நான் ஸ்டாப் ‘ காமெடி & குட் ஃபீல் ஷோ தான் இந்த ஸ்கிரீன் ஷோவான ‘மிஸ் ஷெட்டி, மிஸ்டர் பொலி ஷெட்டி’. இரண்டரை மணி நேரப் படத்தை தொய்வே இல்லாத திரைக்கதை மூலம் ஜமாய்த்திருக்கிறார் டைரக்டர் மகேஷ் பாபு.
கடுமையான காரம் தூக்கலான தெலுங்கு சினிமாக்களிடையே அப்பப்ப வரும் குட் ஃபீல் சினிமாவின் லேட்டஸ்ட் உதாரணம் இந்த ஷெட்டி. நவீன் பொலி ஷெட்டி. அடடா பையன் எல்லா ஏரியாவிலும் புகுந்து விளையாடிருக்கார். அனுஷ்கா மட்டும் என்ன சும்மாவா? ஒரு இடத்தில் கூட கிளாமர் காட்டாமல் ( வயசு நாற்பதுக்கும் மேலாகிருச்சு, அது வேற விசயம்) உண்மை அன்புக்கு ஏங்கும் மனக்கிடக்கையை அற்புதமாக திரையில் கொண்டு வந்து விட்டார். தமிழ் வசனம் எழுதிய கே.என்.விஜயகுமார் தான் படத்தின் மெயின் ஆதாரம்.
” டேய் அவகிட்ட, உனக்கு நான் இருக்கேன்னு எப்பவாவது சொல்லியிருக்கியா? அவளுக்கு அன்பு மீது வெறுப்பு இல்லடா, அன்பை அவளுக்குள்ளேயே தேடிக்கிட்ருக்கா. நீ அவளைத் தேடிப் போ. எல்லாம் நல்லா நடக்கும் ” என தனது மகன் நவீனிடம் முரளி சர்மா சொல்லும் இந்த டயலாக் தான் படத்தை செம டச்சிங்கான க்ளைமாக்ஸுடன் முடிக்க உதவியிருக்கு. என்ன தான் தெலுங்கு டப்பிங்னாலும் தமிழுக்கு தனித்துவம் வேணும்ல. நம்பிக்கையுடன் தியேட்டருக்குள் போனால் நல்ல சினிமா பார்த்த திருப்தியுடன் வெளியே வரலாம்.
— மதுரை மாறன்