இந்த நொடிப்பொழுது மட்டுமே உங்களுக்கானது … நாமெல்லாம் இன்னும் நிறைய மாறனும் … MMM முருகானந்தம் சொன்ன மெசேஜ் !
தமிழகத்தின் தலைநகராக TRICHY ஏன் மாற வேண்டும் ? MMM முருகானந்தம் சொன்ன விசயம்!
ஏன் இன்னும் மாறவில்லை?
பன்னாட்டு ரோட்டரியின் நிர்வாக இயக்குநர்களுள் ஒருவரும்; எக்செல் குழுமத்தின் தலைவரும்; திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளருமான MMM முருகானந்தம் வருடம் தோறும் தீபாவளி பண்டிகை காலத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடி அன்பைப் பரிமாறுவது வழக்கம். அதுபோன்றதொரு ஒன்று கூடல் நிகழ்வு, அக்-05 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் பத்து நிமிடங்களுக்கும் குறைவான நேரமே உரையாற்றியிருந்தாலும், சமகால அரசியல் சூழல் குறித்தும் வாழ்வியல் நெறி குறித்தும் நறுக்கென்று தைத்தாற்போல உரையாற்றினார், MMM முருகானந்தம்.

பத்திரிகையாளர்களிடத்தில் அவர் பேசும்போது, “ஒரு நல்ல தருணத்திலே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்னைக்கு காலையில நான் சென்னையில இருந்து இந்த நிகழ்வுக்காக கிளம்பியபோது, என்னோட பொண்ணு ஒரு கேள்வி கேட்டாள். அப்பா வருடம் தோறும் இதுபோன்ற சந்திப்புகளை நடத்துறீங்களே ஏதாவது காரணம் இருக்கா ?
30 வருடங்களுக்கு முன்பாக என்னை பாதித்த விசயம். மரணம் என்பது இயற்கையானது. எதார்த்தமானது. அதை சந்தோஷமாக எதிர்கொள்ள வேண்டும் என்று நாஞ்சில் சம்பத் பேசிய பேச்சு என்னுள் ஆழப்பதிந்து விட்டது.
வாழ்வை எளிமையாக்க இதுவே வழி !
இந்த நொடிப்பொழுது மட்டுமே உங்களுக்கானது. உங்களுக்கு சொந்தமானது. அடுத்த நொடி யாருக்குமே தெரியாது. அதே மாதிரி ஒரு மருத்துவருடைய பார்வையில் 36,500 மற்றும் 29,200 ஆகிய இரண்டு நாட்களுமே மிக முக்கியமான நாட்கள். அது என்ன சார்னு கேட்கிறீர்களா?
முழுவதுமாக 100 வருடங்களை அதாவது 36500 நாட்களை ஒரு மனிதன் கடந்து விடவே முடியாது என்று இந்த உலகம் தெளிவாக சொல்கிறது. இதில், 29200 என்பது 80 வருஷத்துக்கான நாட்கள். ஆரோக்கியமாக ஒரு மனிதன் தனக்கு பிடித்த விஷயங்களை 80 வருடத்திற்குள் செய்ய முடியும்.
இப்போது எனக்கு 51 வயது ஆகிறது. உள்ளூரில் உள்ள குமரேசபுரத்தில் சாதாரண ஆரம்பப் பள்ளியில் படிப்பை தொடங்கியவன். பிட்ஸ் பிலானி வரை பார்த்தவன். சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து உயர்ந்தவன்.
வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு இரண்டு விஷயம் தேவைப்படுகிறது. ஒன்னு வெற்றி என்ற ஒரு விஷயத்தை அவன் அடைய ஆசைப்படுறான். இரண்டாவது, அதன் வழியாக அவனுக்கு மகிழ்ச்சி கிடைக்குமா? என ஆசைப்படுகிறான். இரண்டு வார்த்தைகளில் வாழ்க்கை முடிந்து விடுகிறது. வாழ்வை எளிமையாக்க இதுவே வழி.
மகிழ்ச்சி நீங்கள் வாழ்வதில் இல்லவே, இல்லை !
முக்கியமாக, தீபாவளி சமயத்தில் உங்களை எல்லாம் சந்திக்க நினைக்கும் காரணம் ஒன்று தான். என் மகிழ்ச்சியை நான் இரட்டிப்பாக்கி கொள்கிறேன். இந்த சிந்தனை என் கல்லூரி காலத்தில் இந்த தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பா உமாநாத் வென்றதினால் வந்திருக்கலாம்.
நீங்களும் நானும் இருக்கிற இந்த பூமி மிக முக்கியமாக தமிழ்நாடு அறமும் வீரமும் நிறைந்த மண். தெரிந்தோ தெரியாமலோ நம்முடைய வரலாறு கூட அதிகமாக மறைக்கப்படுகிறது. கரிகால்சோழனுடைய பேரன் ஒருத்தர் வந்து கல்லணைக்கும், தஞ்சை பெரிய கோவிலுக்கும் உரிமை கொண்டாட முடியுமா? இன்று, இது என்னுடைய கட்டுமானம் நீங்கள் நுழைவு கட்டணம் செலுத்திவிட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டும் என்று தடுத்தால் என்ன ஆகும்? அது சாத்தியமா? சாத்தியமில்லை. எட்டு தலைமுறைகளுக்குப் பிறகு யாரும் இந்த உலகத்தில் வாழ்ந்து விடவே முடியாது என்கிறது வரலாறு.
இப்படி ஒரு சூழலில் நமக்கு அவசியமானது இரண்டுதான். முன்பே சொன்னதுபோல, ஒன்னு வாழ்க்கையில் வெற்றி வேணும் அடுத்து அந்த வெற்றியோடு சேர்ந்து ஒரு மகிழ்ச்சி வேணும். அதுதான் உண்மை என்றால், நான் தைரியமாகவே சொல்வேன். மகிழ்ச்சி என்பது நீங்கள் வாழ்வதில் இல்லவே, இல்லை.
மகிழ்வித்து மகிழ் : அதுவே இரட்டிப்பு மகிழ்ச்சி !
மாறு மாற்று என்ற முழக்கத்தை நான் 18 வயதில் முன்வைத்தபோதுகூட இதன் அர்த்தம் என்ன என்று கேட்டார்கள். இந்த வார்த்தைக்கு சொந்தக்காரன் காந்தி.
இந்த மகிழ்ச்சியான சந்தோஷ மாற்றம் எப்பொழுது வரும் என்றால், ஒரே ஒரு வார்த்தை, ஒரே ஒரு நண்பன், ஒரே ஒரு புத்தகம், ஒரே ஒரு இசை, ஒரே ஒரு பயணம் கூட மாற்றிட முடியும். ஆனால், மாற்றம் எப்பொழுது உண்மையாக வரும் என்றால் எப்பொழுதெல்லாம் தலைமைத்துவம் வருகிறதோ அப்போது மட்டும்தான்.
உங்களில் ஒருவனாக உங்களோடு தனிப்பட்ட முறையில் கைகுழுக்கும் ஒவ்வொரு முறையும் அதை நான் உணர்வேன். உங்களுடைய கண்களில், உங்களுடைய வார்த்தைகளில், கரங்களை பற்றி தேங்க்யூ பிரதர் என்று சொல்லுகிற அந்த வார்த்தை போதுமானது. என்னுடைய வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு நகரும்.
இந்த சுவருக்குக்கூட உயிர் இருப்பதாக நான் உணர்கிறேன். எல்லா நேரங்களிலும் மனிதர்கள் பேசமாட்டார்கள். நான் வளர்க்கும் செடி கொடிகள் என்னுடன் உரையாடுகின்றன. நான் வளர்க்கும் நாய் என்னிடம் கண்டிப்பாக பேசும். நம்முடைய உயிரை உண்மையிலேயே உண்மையாக்குவது இதுபோன்று நம்மை சுற்றியிருக்கும் ஆத்மாக்கள்தான்.
நான் திரும்ப சொல்லும் விசயம் இதுதான். வாழ்க்கையின் சந்தோஷத்திற்கு அடிப்படை வெற்றி மட்டுமல்ல; வெற்றியுடன் சேர்ந்த மகிழ்ச்சிதான். நான் வளர்ந்திருக்கிறேன். என்னுடைய மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
எனது மிகப்பெரிய ஆதங்கம் இதுதான் !
இந்த இடத்தில் இன்னொன்றை சொல்லியாக வேண்டும். என்னுடைய மிகப்பெரிய ஏமாற்றம் திருச்சி மேல இருக்கு. திருச்சிக்கு நல்ல எம்.பி. கிடைக்க வேண்டும் என நினைக்கிறேன். திருச்சியில் உள்ள தொழில் திறமைகள் வேறு எங்கும் இல்லை என்று சொல்வேன். உண்மையா சொல்லனும்னா, திருச்சியை இந்நேரம் மாநிலத்தின் தலைநகராக ஆக்கியிருக்கனும். அதை கேட்க இங்கே சரியான ஆட்கள் இல்லை.
ஓசூர் நகரம் வளர்ந்தது போல, சேலம் வளர்ந்தது போல திருச்சி வளராமல் போனது ஏன்? திருச்சியிலிருந்து கொச்சி துறைமுகம் 300 கிலோமீட்டர். விளிஞ்சம் துறைமுகம் 300 கிலோமீட்டர். தூத்துக்குடியும் 300 கிலோமீட்டர். சென்னையும் 300 கிலோமீட்டர். கப்பல் போக்குவரத்துக்கு ஏற்ற மண் இது. அப்படி என்றால், மற்ற மாவட்டங்களைவிட இங்குதான் அதிகளவிலான தொழிற்சாலைகள் அமைந்திருக்கனும். கோயம்புத்தூருக்கு அடுத்து திருச்சிதான் முக்கியமான தொழில் மையமாக இருக்க முடியும். இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் தலைசிறந்த நகரங்கள்னு எடுத்துக் கொண்டால், பூனே, ஹைதராபாத், திருச்சி எல்லாம் இப்போது டாப் 3 இல் இருக்கின்றன. இது நிறைவேறாம போனதுக்கு காரணம் சரியான தலைவர் இங்கிருந்து உருவாகவில்லை. அமைப்பு ரீதியாக இதனை யாரும் முன்னெடுக்கவில்லை.
திருச்சி மக்கள் கொடுத்த ஊக்கமான ஆதரவில்தான் இன்று ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குநராக இந்தியாவிலிருந்து தமிகத்திலிருந்து அதுவும் திருச்சியிலிருந்து நான் தேர்வாகியிருக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த இடம் என்பதாலேயே திருச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
நண்பர் கல்யாண்குமார்கூட கேட்டாரு. ஏதாவது புதுசா செய்யணுமா சார்னு. இருக்கும்பொழுது கொடுக்கக்கூட விசயங்களில் மகிழ்ச்சி இல்லை என்றே சொல்வேன். இல்லாது இருக்கும் நிலையிலும் ஒருவன் கொடுக்க நினைக்கிறான் பாருங்கள் அதுதான் உண்மையான மகிழ்ச்சி. என் வாழ்வில் நிகழ்ந்த ஒரு குட்டிக்கதையை சொல்கிறேன்.
மனதை உலுக்கிய பத்மினி ஆண்ட்டி !
சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. என் பொண்ணு பத்தாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தாங்க. அப்போ எனக்கு போன் வருது. உங்க பொண்ணுக்கு உடல்நிலை சரியில்லை உடனே கிளம்பி வாங்கன்னு. நான் உடனடியாக போக முடியாத சூழ்நிலை. என் மனைவிதான் கிளம்பி போனார். ஆனால், அதற்கு முன்னதாகவே எதிர்த்த வீட்டு ஆண்ட்டி பத்மினிதான் என் பொண்ண மருத்துவமனைக்கு கூட்டிட்டு போயிட்டு பார்த்து வீட்ல விட்ருக்காங்க. அதற்காக, அவர்களுக்கு நன்றி தெரிவிக்க போயிருந்தேன். இரவு ஒரு ஏழு மணி இருக்கும். பத்மினி ஆண்ட்டி அவங்க கணவர் இருவரும் இருந்தாங்க. அவங்க மகன் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சிலர் இருந்தார்கள். நானும் நன்றி சொன்னேன். இதுக்கெல்லாம் எதுக்கு நன்றினு பெருந்தன்மையோட சொன்னாங்க. சொல்லிட்டு கீழே இறங்கினேன். என் மனசுக்கு பாரமா இருந்தது. ஏதோ ஒரு தப்பு செய்த மாதிரி தோன்றியது. என்னுடைய மனைவியிடம் சொன்னேன். மீண்டும் அவர்களிடம் போய் பேசுவோம். எனக்கு என்னவோ அந்த வீடு ஒரு நிசப்தமாக இருந்தது. எனக்கு வேறு மாதிரி தோன்றுகிறது என்றேன். மேலே சென்றேன். அவரது கணவரை மட்டும் கீழே வர சொல்லி பேசினேன். எல்லோரும் நல்லாதானே இருக்கீங்க? ஒருவிதமான அமைதியை உங்களிடம் காண்கிறேன். ஏதேனும் பிரச்சினையா என்றேன்.
மூன்று நாட்களுக்கு முன்பாக உங்கள் பொண்ணுக்கு உடல் நிலை சரியில்லை என்று கேள்விபட்டு அவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தோம். அப்போதுதான் உங்களுக்கும் போன் பண்ணினோம். ஆனால், அதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்புதான் எனது மனைவிக்கு கேன்சர் இருக்குனு ஹாஸ்பிடல் ரிப்போர்ட் வந்துச்சு என்றார். கேன்சர்னு கன்பார்ம் ஆன பேப்பரோட என் பொண்ண ஹாஸ்பிடல்ல சேர்த்து பார்த்துருக்காங்க. எல்லாமே இருக்கும்போது செய்றது உண்மையில் மிகப்பெரிய உதவியெல்லாம் இல்லை. இல்லாத நேரத்திலும் கஷ்ட நேரத்திலும் அடுத்தவர்களுக்கு உதவனும்னு நினைக்கிறதுதான் உண்மையான உதவி. அப்படி ஒரு பத்மினிகள் இருக்கும்போது, நாமெல்லாம் இன்னும் நிறைய மாற வேண்டியிருக்கு. இந்த நேரத்தில பத்மினி ஆண்ட்டிக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.
நண்பர்களே மீண்டும் ஒரு முறை சொல்றேன். மகிழ்ச்சி என்பது உங்களிடம் இருப்பது மட்டுமல்ல; எப்பொழுதும் நம்முடைய மகிழ்ச்சி இரட்டிப்பாக வேண்டும் என்றால், அடுத்தவர்களுக்கும் அதை கொடுங்கள். அன்பை விதையுங்கள். அன்பை விதைக்கும் இடத்தில் அன்பும் அறமும் இருக்கும். அந்த இடத்தில் அமைதி பெருகும்.” என்பதாக பொருட்செறிவான உரையாற்றினார்.
— இளங்கதிர். படங்கள் : டி.கே
Comments are closed, but trackbacks and pingbacks are open.