மேலும் மேலும் வாசிப்பது, எழுதுவது, சிந்திப்பது.. இது தான் அறிவு..! – பேரா. சுப.வீரபாண்டியன்
மேலும் மேலும் வாசிப்பது, எழுதுவது, சிந்திப்பது.. இது தான் அறிவு..! – பேரா. சுப.வீரபாண்டியன்
திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழ்த்துறை பேராசிரியரும், திருச்சி எழுத்தாள ருமான முனைவர் ஜோ. சலோ எழுதிய 25 நூல்கள் மற்றும் வெள்ளி விழா மலர் வெளியீட்டு விழா தூய வளனார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் அருள்முனைவர் ஆரோக்கியசாமி சேவியர் தலைமையேற்றார். திருச்சி ராப்பள்ளி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் வெள்ளி விழா மலரை வெளியிட, சென்னை பல்கலைக்கழக இயற்பியல் துறைப் பேராசிரியர் முனைவர் ஸ்டீபன் அருமைநாதன் மலரைப் பெற்றுக் கொண்டார். நூல்களை பேராசிரியர் சுப.வீரபாண்டியன், மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின், கவிஞர் முத்துநிலவன், முதுதமிழ் எழிலரசி கேத்ரின் ஆரோக்கியசாமி, முனைவர் அலெக்ஸ் ரமணி ஆகியோர் வெளியிட முனைவர் செல்வகுமரன், தூய வளனார் கல்லூரித் துணை முதல்வர்கள், ஆகியோர் பெற்றுக் கொண்டனர். விழாவில் தமிழாய்வுத் துறைத்தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி அறிமுகவுரையாற்றினார். மேனாள் துணை முதல்வர் முனைவர் ஆ.ஜோசப் சகாய ராஜ் வரவேற்புரையாற்றினார். நிறைவில் எழுத்தாளர் ஜோ.சலோ ஏற்புரையாற்றினார். பேராசிரியப் பெருமக்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளரின் குடும்பத்தினர், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றுச் சிறப்பித்தனர். இவ்விழாவில் உரை யாற்றிய பெருமக்களின் சிந்தனைத் துளிகள் சில. ..
அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர்
இது படைப்பாளரின் விழா. படைப்பாளிக்கு சமூகம் எடுக்கிற விழா. இளைஞர்களுக்கு படைப்பின் மகத்துவத்தைச் சொல்லி அவர்களை படைப்பாளிகளாக உருவாக்குகிற விழா. கல்வி மனிதம் வளர என்கிற நோக்கத்தோடு செயல்படுகிற இந்த வளாகத்தில் கல்வியை வளர்க்கும் மனிதத்தை போற்றுகிற பேராசிரியரின் நூல்கள் வெளியிடப்படுவது பெருமகிழ்ச்சி.
சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்
சமூகப் பொறுப்பும் கலைநயமும் கொண்ட எழுத்தாளர்களை இந்தச் சமூகம் மதிக்கிறது. எழுத்தாளர்கள் தானாக உருவாகிறார்கள். சமூகத்தின் தேவைகளையும் சமூகத்தின் அடுத்த கட்ட நகர்வையும் சிந்தித்து எழுதுகிற எழுத்தாளர்கள் பலரும் உருவாக வேண்டும் என்பதே என் அவா.
மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின்
எழுத்தாளர் பன்முக ஆற்றலுடன் இருப்பது என்பது சிறப்புக்குரியது. அந்தப் பன்முக ஆற்றல் ஒருமுகப்படுத்தப்பட்ட நோக்கமாக இருக்கும்போது அது தரக்கூடிய வெற்றி என்பதுதான் சமூகத்திற்கு பயன்தரக் கூடியது. அந்த நோக்கம் சலோவின் படைப்பாற்றலின் பல இடங்களில் வெளிப்படுகிறது. படைப்பாளிகள் சலோவைப் பாராட்டுகிறார்கள். இவர் சக படைப்பாளிகளிடம் நன்றி காட்டுகிறார். சக படைப்பாளிகள் அன்பு காட்டுவதும் சக படைப்பாளிகளிடம் நன்றி காட்டுவதும்தான் உண்மையான தமிழ்ப்பண்பாட்டின் அடை யாளம். அந்த வகையில் நடைபெறுகிறது இந்த விழா போற்றுதலுக்குரியது.
கவிஞர் முத்துநிலவன்
ஆசிரியர்கள் படித்தவர் களாக இருப்பதைவிட படிக்கின்றவர் களாக இருக்க வேண்டும். தொடர்ந்து படித்துக்கொண்டே எழுதிக்கொண்டே இருக்கிற பேராசிரியரின் விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியைத் தருகிறது. முதுகிற்கு பிறகு ஒரு காரியம் செய்யலாம் தட்டிக் கொடுத்தல் மட்டுமே என்பார்கள். அதைப்போல தம் சக பேராசிரியரை வாழ்த்த வேண்டும் பாராட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில் அரங்கத்தில் நிறைந்திருக்கிற பேராசிரியர்களை, அவர்களுக்குள் நிறைந்திருக்கிற அந்த பாராட்டும் மனநிலையை வளர்த்திருக்கிற இந்தக் கல்வி நிறுவனத்தை மனம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
அவர் எழுதியுள்ள பல நூல்களும் ஹைக்கூ குறித்த கட்டுரையும் அவருடைய கைகளும் அடங்கிய ஒரு நூலை மட்டும் நான் வாசித்தேன். ஹைக்கூ என்பது ஒரு சிறு கவிதைதான். ஆனால் அது பகத்சிங்கின் கையிலிருந்த அணுகுண்டு போன்றது. பகத்சிங் பாராளுமன்றத்தில் வீசிய வெடிகுண்டு என்பது யாரையும் கொல்வதற்காக அல்ல. அதிர்ச்சியுறச் செய்வதற்காக. கவிஞர் பாலா சொல்லுவார். நல்ல கவிதை என்றால் உன்னை மறக்கவிடாமல் ஒரு ஞாபக யுத்தம் செய்யும் என்று. அதைப்போல ஒரு சிறிய நூலில் எண்ணற்ற சமூகக் கருத்துக்களை தந்திருக்கிற பேராசிரியரை பாராட்டுகிறேன். கவிக்கோ போல தமிழ்கூறும் நல்லுலகில் நிலைத்த இடம் நிச்சயம் இவருக்குண்டு.
பேராசிரியர் சுப.வீ
எப்படி ஒருவரால் தொடர்ந்து எழுத முடிகிறது? அவரைத் தொடர்ந்து எழுத செய்யும் அந்த நெருப்பு எது.? படிப்பும் எழுத்தும் குறைந்து போய் விட்டனவோ என்று கவலைப்படுகிற நேரத்தில் ஒரே நாளில் ஒரே மேடையில் 25 நூல்களை கொண்டு வருவது என்பதே ஒரு சாதனைதான். ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்வதற்கு நமக்கு வாய்ப்புகள் பல இருக்கின்றன. கற்றுக் கொள்ளவில்லை என்றால் நாம் கற்றுக்கொள்ள மறுக்கிறோம் என்று பொருள். இதை உணர்ந்துதான் வள்ளுவர் அன்றைக்கே சொன்னார். ‘கற்க’ என்று ஒரு குரலை தொடங்குகிறார். ஆனால் எல்லோராலும் கற்க முடியாது. அப்படியானால் என்ன செய்யலாம்? ‘கற்றிலனாயினும் கேட்க’… பிறகு வள்ளுவருக்கே ஒரு பயம் வருகிறது…
இவன் எதையாவது கேட்டு விட்டு, ‘நீதானே கேட்கச் சொன்னாய்’ என்று சொல்வான் என நினைத்து, ‘எனைத்தானும் நல்லவை கேட்க’.. என்றார்.
எனவே எழுதுவதும் படிப்பது மிகச் சிறந்த குணங்கள். ஆனால் அவை மட்டுமே நம்முடைய பெருமையை சான்றாண்மையைத் தீர்மானித்து விடாது. எதற்காகப் படிக்கிறோம்? யாருக்காக படிக்கிறோம்? என்கிற கவனத்தோடு படிக்க வேண்டும். எழுத வேண்டும். முகத்திற்கு பயன்படுகிற எழுத்துக்கள் மட்டுமே என்றென்றும் வாழும். மேலும் மேலும் வாசிப்பது மேலும் மேலும் எழுதுவது மேலும் மேலும் சிந்திப்பது இதுதான் அறிவு என்றால் எழுத்தாளரின் அறிவுக்குத் தலைவணங்கி வாழ்த்துகிறேன்.
-சலோ