அங்கன்வாடி பணியாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தர்ணா !
சேலத்தில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் 1000 த்திற்கும் மேற்பட்டோர் மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் மாநிலம் தழுவிய அளவில் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அங்கன்வாடி ஊழியர்களுக்கு
மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியரகளை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், பணிக்கொடையாக ஒவ்வொரு ஊழியர்களுக்கும் தலா 10 லட்சம் ரூபாயும், உதவி ஊழியர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாயும் வழங்கிட வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பென்ஷன் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி , தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பேரணியாக வந்து தமிழக அரசை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து தரையில் அமர்ந்தும் முழக்கங்கள் எழுப்பினர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட தமிழக அரசு முன்வர வேண்டும், நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என்றும் அடுத்த கட்டமாக மாநிலம் தழுவிய அளவில் சென்னையில் மாபெரும் போராட்டத்தை அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் நடத்துவார்கள் என்றும் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சரோஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-சோழன் தேவ்