மூன்றெழுத்து நடிகை மீது கொண்ட மோகம் ! மோசடி மன்னர்கள் – பாகம் 04
மூன்றெழுத்து நடிகை மீது கொண்ட மோகம் ! 💃 குடுமியான்மலை ரவிச்சந்திரன்
தன்னை ஊரே திரும்பிப்பார்க்கும் அளவுக்கு உச்சாணிக் கொம்பில் உட்காரனும்னு குடுமியான்மலை ரவிச்சந்திரனுக்கு அப்படி ஒரு ஆசை. அந்த விளம்பரத்தை எப்படி வியாபாரமாக மாற்றனும் என்கிற வித்தையையும் கைவசம் வச்சிருந்தாரு. அவர் நினைச்ச மாதிரியே காசு, பணம், புகழ்னு அடுத்தடுத்து ஒன்று சேர பார்வையை சினிமா பக்கம் திருப்பியிருக்காரு. சொந்த காசை போட்டு சினிமா எடுக்கிற அளவுக்கு அப்படி ஒரு மோகமா இருந்திருக்காரு.
ஆரம்ப காலத்துல, தன்னுடைய மோசடி திட்டங்களை கடை விரிப்பதற்காக, ஒரு கவர்ச்சிக்காகத்தான், தன் மீது மற்றவர்களின் பார்வை திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் பல்வேறு விழாக்களை நடத்தினாரு. அந்த விழாக்களுக்கு நடிகர், நடிகைகளை கூட்டிட்டு வந்தாரு. பட்டணத்துல இருக்கிற நடிகர் – நடிகைகளை, புதுக்கோட்டை மாவட்டத்தின் பட்டிக்காட்டுக்கே கூட்டி வந்து விழா நடத்துறது அவ்வளவு லேசுப்பட்ட காரியமா என்ன? எவ்வளவு மெனக்கெட்டு இருப்பாரு? எத்தனை பேரை சிபாரிசுக்கு அணுகியிருப்பாரு? எவ்வளவு செலவு செய்திருப்பாரு? இந்த அனுபவத்துல அவருக்கு பல தொடர்புகள் புதிதுபுதிதாக கிடைக்கிறது.
நடிகர்கள் ராதாரவி, வடிவேலு, சார்லி, டில்லி கணேஷ்னு பலரை கூட்டி வந்திருக்காரு. நடிகர்கள் மட்டுமா? நடிகைகளும்தான். அதுவும் மார்க்கெட் போன நடிகைகள் கிடையாது. அன்றைய காலகட்டத்தில் உச்சத்தில் இருந்த நமீதா தொடங்கி சினேகா வரையில் நடிகைகளை கூட்டி வந்திருக்காரு.
ஊருக்குள்ள நடிகைகளை கூட்டிட்டு வருவதே பெரிய விசயம். அதிலும் அவர்கள் கையாலேயே நலத்திட்ட உதவிகளையும் வழங்கினால் எப்படி? அதுவும் போதாதென்று, வந்தவர்கள் மைக் பிடித்து குடுமியான்மலை ரவிச்சந்திரனை பற்றி ஆஹா, ஓஹோ என்று வியந்து பேசினால் எப்படி இருந்திருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்துதான் பாருங்களேன்.
மற்ற நடிகர்களை ஒப்பிடுகையில், நடிகர் சார்லி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று பார்த்ததில்லை. அவரது இலக்கியத்தரமான பேச்சுகளை கேட்டிருக்கிறோம். அந்த மனுசனே நேர்ல வந்து, “பியூ சின்னப்பா எனும் மாமனிதனை திரையுலகம் தந்த புதுக்கோட்டை, தயாரிப்பாளராக ரவிச்சந்திரனை தந்திருக்குதுன்னு” பேசினால் கேட்போர் புல்லரித்து போகாமல் என்ன செய்வார்கள்?
“இப்படி தர்ம சிந்தனை படைத்தவர்களை பார்ப்பது அரிது. தர்மம் தலைக்காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும்”னு தன்னோட பாணியில் வைகைப்புயல் வடிவேலு பாடியும் ஆடியும் கொடுத்த பில்டப்பில் வாயடைத்து போனார்கள்.
“முதல்ல ஜோசியர் ரவிச்சந்திரனை எனக்கு யாருனே தெரியாது. அவரு இந்த விழாவுக்கு இன்விடேஷன் கொடுக்க வரும்பொழுதுதான் அவரோட தாராள மனச நான் புரிஞ்சுக்கிட்டேன். அன்னையில இருந்து அவருக்கு நான் ஃபேனா மாறிட்டேன்னு” நடிகை சினேகா சொன்னபோது ஊரே உள்ளம் பூரித்து கிடந்தது.
அதோட விட்டாரா? அங்கேயே, மைக்கை வாங்கி பேசிய குடுமியான்மலை ரவிச்சந்திரன், “நான் ஏதோ பெருசா சாதனை பண்ணிட்டேன்னு என்னை எல்லோரும் பாராட்டுனாங்க. இந்த பாராட்டுக்கெல்லாம் காரணம் நான் இல்லை. எனக்கு சினேகாவை ரொம்ப பிடிக்கும். சினேகாவோட படத்தை போட்டுதான் நான் ஜோசியத்தை ஆரம்பிச்சேன். இன்னைக்கு அமோகமா வளர்ந்துருக்கிறேன். நான்தான் அவருக்கு ஃபேன்”னு சரண்டர் ஆனாரு. அதற்கு பரிகாரமாக வைர மோதிரத்தை மேடையிலேயே பரிசளித்து பேரானந்தம் அடைந்திருக்கிறார், ரவிச்சந்திரன்.
அதே ஜூட்டோடு, கோடம்பாக்கம் கிளம்பிப்போனவர் சினிமா எடுக்கிறேன்னு, ஈ.சி.ஆர். ல ஒரு பங்களாவை வளைச்சிப் போட்டுட்டு பண்ணுன சேட்டைகள் கொஞ்சம் நஞ்சமல்ல என்கிறார்கள். கடற்கரை பங்களாவில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் நடிகைகள் கூட்டம் அலைமோதியிருக்கிறது. ஆட்டம் பாட்டத்துக்கும் குறைவில்லையாம். மூன்றெழுத்து நடிகைக்கு வைர நெக்லஸ் பரிசளித்ததாகட்டும்; கச்சேரி பாடகி ஒருவரோடு ஊர் ஊராக சுற்றித்திரிந்ததாக கிளம்பிய டாக் ஆகட்டும் சினிமாக் காரனுக்கே உரிய லைம் லைட் வெளிச்சத்தில் மிதந்திருக்கிறார், குடுமியான்மலை ரவிச்சந்திரன்.
ஆனாலும், அண்ணனுக்கு ஏதோ ஒன்னு குறையாக இருப்பது போலவே உணர்ந்திருக்கிறார். வாழும் காலத்தில் மட்டுமல்ல; நம் தலைமுறைக்கும் நம் புகழ் பரவிக்கிடக்க வேண்டுமென்று நினைக்கிறார். அதுக்காக, தஞ்சாவூர் கல்வெட்டில் எல்லாம் பெயர் பதிக்க முடியாது அல்லவா? ஆனால், கொஞ்சம் காசு செலவு செஞ்சா புத்தகம் அச்சடிக்கலாமே. அந்த முயற்சியில் களம் இறங்குகிறார், குடுமியான் மலை ரவிச்சந்திரன்.
தொடர்ந்து பேசலாம்.
— ஆதிரன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.