80 வகை சீர்வரிசை, ரூ.2 லட்சம் பண மாலை! 80 வயது தாயை நெகிழ வைத்த மகள்!
80 வயது தாய்க்கு 80 சீர்வாிசை ! கொண்டாடி தீா்த்த மகள் !
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச்சேர்ந்த 80 வயது மூதாட்டியின் பிறந்தநாள் விழா 80வகை சீர்வரிசை, ரூ.2 லட்சம் மதிப்பிலான பணமாலை, 28 வகையான அறுசுவை விருந்து என வித்தியாசமான முறையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. சத்திரப்பட்டியைச் சேர்ந்த மாசிலாமணி முத்துச்செல்வி தம்பதியருக்கு 4மகள்கள், 4மகன்கள் என மொத்தம் 8 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் தனது தாயார் முத்துச்செல்வியின் 80-வது பிறந்தநாளை நினைவில் நிற்கும் வகையில் பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என வெளிநாட்டில் வசித்துவரும் அவரது மகள் தனலட்சுமி திட்டமிட்டார். இதையடுத்து தாய்வழி உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோரை ஒருங்கிணைத்து சத்திரப்பட்டி கிராமத்தில் பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக முத்துச்செல்வியின் 80 வயதை குறிக்கும் வகையில் 80வகையான சீர்வரிசைத்தட்டுகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
அவற்றில் 8 பவுன் தங்கநகைகள் 8 வகையான வெள்ளிப்பொருட்கள், 8 வகையானஇனிப்புகள், 8 வகையான கேக்குகள், 8 வகையான கார வகைகள், 8 வகையான பழங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றிருந்தன பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்ட 80 சீர்வரிசைத் தட்டுகள் ஊர்வலமாக வந்ததை பார்த்த உறவினர்களும், பொதுமக்களும் வியப்பில் ஆழ்ந்தனர்.
மேலும், ரூ.500 நோட்டுகளை கொண்டு சுமார் ரூ.2 லட்சம் மதிப்பில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட பண மாலை முத்துச்செல்விக்கு அணிவிக்கப்பட்டது. இதனுடன் சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான நாணயங்களால் செய்யப்பட்ட மாலை, ஏலக்காய்மாலை உள்ளிட்ட 8வகையான மாலைகளும் அணிவிக்கப்பட்டன. விழாவில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்ட உறவினர்களுக்காக 28 வகையான அறுசுவை உணவுகள் தயாரிக்கப்பட்டு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.
விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், பிரம்மாண்ட அலங்காரப் பொம்மைகள் உள்ளிட்டவை இடம்பெற்ற ஊர்வலமும் நடைபெற்றது. தனது 80-வது பிறந்தநாளை மகள் இவ்வளவு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்ததுடன் நீண்ட காலத்துக்குப்பிறகு உறவினர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்ததை பார்த்த தாயார் முத்துச்செல்வி உணர்ச்சிவசப்பட்டார். மகளின் அன்பையும் பாசத்தையும் கண்டு அவர் கண்கலங்கிய காட்சி அங்கு கூடியிருந்த உறவினர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. பல லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்ற இந்த வித்தியாசமான பிறந்தநாள் விழா சத்திரப்பட்டி மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பேசுபொருளாகியுள்ளது. 80 வயது தாய்க்கு 80 வகை சீர்வரிசை,ரூ.2லட்சம் பண மாலை, 8 வகையான மாலைகள், 28வகை அறுசுவை உணவு என மகள் ஏற்பாடு செய்த இந்த விழா தாயின்மீது கொண்ட பாசத்தையும் குடும்ப உறவுகளை ஒன்றிணைக்கும் அன்பின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.