மிஸ்டர் ஸ்பை – (மார்ச் 29 அங்குசம் இதழில்)
அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் மகன் வினீத் நந்தன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் 20ஆம் தேதி திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு பல்வேறு தரப்பினரும் நாளிதழ்களில் திருமண வாழ்த்து விளம்பரங்கள் கொடுத்திருந்தனர். அதில் திருச்சியில் உள்ள ஒரு நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் புகைப்படத்துடன் திமுக விளம்பரம் ஒன்று வெளியானது.
இதைத் தொடர்ந்து நகராட்சி தலைவரின் கணவர் நகராட்சி கமிஷனரிடம் நாளிதழ்களில் நகராட்சியின் சார்பில் விளம்பரம் வெளியிட்டு இருக்கிறோம். அதற்கான தொகையை தாருங்கள் என்று கேட்க…. “இது ஒன்றும் டவுன் பஞ்சாயத்து கிடையாது சார், மேலும் விளம்பரம் கொடுக்க இது அரசு நிகழ்ச்சியும் கிடையாது, இதற்கு பணம் ஒதுக்க முடியாது, நான் எப்படி இதற்கு கணக்கு காட்ட முடியும், அதனால் இதற்கு பணம் ஒதுக்கமாட்டேன்”. என்றாராம். இதனால் நகராட்சி தலைவரின் கணவர் கடுப்பாகி கமிஷனரிடம் மிரட்டலாக பேச, கமிஷனரோ என்னால முடியாது. நகராட்சியில தீர்மானம் போட்டு எல்லோரும் கையெழுத்து போட்டு கொடுங்க… “நான் மூட்டைகட்டி தயாராகத்தான் இருக்கிறேன், அதனால் எனக்கு டிரான்ஸ்ஃபர் பற்றி எல்லாம் கவலை இல்லை” என்று கூலாக கூறி சென்று விட்டாராம்.