திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து வெளிநாடு பயணமா? தொடரும் குற்றச்சாட்டுகள்

-உபயதுல்லா

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

புது பாஸ்போர்ட்டா? விசிட் விசாவா? ணிசிஸி பாஸ்போர்ட்டா? முதல்முறை வெளிநாட்டுப் பயணமா? திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் வழியாக பயணிக்க வேண்டாம்  என்ற பரவலான கருத்தின் உண்மை நிலை என்ன?

மேற்சொன்ன அனைத்திற்கும் பதிலைப் பார்ப்பதற்கு முன்னர், சற்றுப் பின்னோக்கிச் செல்வோம். பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பாஸ்போர்ட் எடுப்பதே சவாலானது. அதிலும் ECNR  பாஸ்போர்ட் என்றால் அதற்கு தனி மரியாதையே உண்டு! ஏன்? ECNR  என்றால் என்ன? சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து

பொதுவாக பாஸ்போர்ட்டில் இரண்டு வகை உண்டு. ஒன்று குடியேற்ற அனுமதி தேவையற்ற பாஸ்போர்ட் (Emigration Not Re­quired)   மற்றும் குடியேற்ற அனுமதி தேவையுள்ள பாஸ்போர்ட் (Emigration Required) என இரண்டு வகை பாஸ்போர்ட் உண்டு. அதாவது ECNR பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு, வணிகம், சுற்றுலா, விசிட் விசா போன்ற எந்தவகை விசாவாகினும் குடியேற்ற பாதுகாப்பு அதிகாரி (Protector of Emigrants – POE)  அனுமதியின்றி செல்லலாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

ECR பாஸ்போர்ட் என்றால் எவ்வகை விமானப்பயணத்திற்கும் குடியேற்ற பாதுகாப்பு அதிகாரியின் அனுமதி தேவை. எனவே ECNR பாஸ்போர்ட்டிற்கு மதிப்பு கூடுதலாக இருந்தது.  இந்த ECNR மற்றும் ECR பாஸ்போர்ட்கள் எதன் அடிப்படையில் பிரித்துக் காண்பிக்கப்படுகிறது என்பதை முதலில் இங்கே காண்போம். அந்தக் காலங்களில், இதற்கான அளவுகோல் “பட்டப்படிப்பு –

Degree”  ஆக இருந்தது. அதாவது பட்டப்படிப்பு முடித்தவர்கள் தங்களது பாஸ்போர்ட்டில் ECNR வாங்கிக்கொள்ளலாம். மற்றவர்கள் அதாவது பட்டப்படிப்பு முடிக்காதவர்கள், அல்லது முடித்தும், ஒன்றிரண்டு பாடங்களில் தோல்வியுற்றவர்கள் போன்றவர்களுக்கு ECR  பாஸ்போர்ட்டே கிடைக்கும். பின்னர் படிப்படியாக, பட்டயப்படிப்பு – Diploma, , பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்று ECNRக்கான படிப்பின் அளவுகோல் குறைக்கப்பட்டது. இன்றைய அளவில் பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற அனைவருக்கும் ECNR வகை பாஸ்போர்ட் வழங்கப்படும். 2000-ம் தொடக்கத்தில் அதிக அளவு ECR பாஸ்போர்ட்களே இருந்தது. 1995க்கு பின்னரே அப்போதைய முதல்வர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் புதிய கல்விக் கொள்கையால் தொடங்கப்பட்ட தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்லூரிகள் (பாலிடெக்னிக்), மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ITI) போன்றன அதிக அளவில் பட்டதாரிகளையும் தொழில்நுட்ப வல்லுனர்களையும் உருவாக்க ஆரம்பித்த காலம் அது.

முதல் தலைமுறை பட்டதாரிகள் அதிகஅளவில் வரத்தொடங்கிய காலகட்டம் அது. மெல்ல மெல்ல ECR  பாஸ்போர்ட்கள் தமிழ்நாட்டில் ECNR பாஸ்போர்ட்களாக மாறத்தொடங்கியிருந்தன. பொதுமக்களும் அதிக அளவில் பாஸ்போர்ட் எடுக்க ஆரம்பித்திருந்தனர். இதனாலேயே மெட்ராஸில் இருந்து பிரித்து கோயம்புத்தூர் பாஸ்போர்ட் அலுவலகமும், திருச்சிராப்பள்ளியில் இருந்து பிரித்து மதுரை பாஸ்போர்ட் அலுவலகமும் தொடங்கப்பட்டன.

இருப்பினும் ECR  பாஸ்போர்ட்கள் அதிகஅளவில் இருந்தன. மேலும் ஒரு ECR பாஸ்போர்ட் பயணியானவர் உதாரணமாக துபாய்க்கு விசிட் விசாவில் செல்ல வேண்டு மெனில் குடியேற்ற பாதுகாப்பு அதிகாரியின் – POE  அனுமதி வாங்கவேண்டும். அந்த அனுமதியானது பாஸ்போர்ட்டில் POE  ன் அனுமதியான

ECRS  (Emmigration Check Required Suspension)  முத்திரை இடப்படும். அதில் பயணியானவர் எந்த நாளில், எந்த குறிப்பிட்ட விமானத்தில், அதாவது விமானத்தின் எண் உட்பட முத்திரையிடப்பட்டிருக்கும். அந்தக் குறிப்பிட்ட நாளில் அந்தக் குறிப்பிட்ட விமானத்தில் தான் பயணிக்க வேண்டும். மாற்றி பயணிக்க இயலாது. இதில் எண்ணிலடங்கா நடைமுறைச் சிக்கல்கள் இருந்தன. ஆண்டிற்கு லட்சக்கணக்கான குடியேற்ற அனுமதி விண்ணப்பங்கள் குறிப்பிட்ட குடியேற்றப் பிரிவு அதிகாரிகளாலேயே கையாளப்பட்டன.

இந்தியாவில் அன்று டெல்லி, பம்பாய், மெட்ராஸ், திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், கல்கத்தா மற்றும் சண்டிகார் என எட்டு குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அலுவலகங்களே இருந்தன. பின்னர் 2012ல் ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு அலுவலகங்களிலும் விண்ணப்பங்கள் மலைபோல் குவிந்தன. மேலும் இன்றுபோல் இணையதள வசதிகளோ ஆன்லைன் வசதிகளோ இல்லை. குறிப்பிட்ட விமானங்களே, அதாவது, ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், எமிரேட்ஸ், ஜெட் ஏர்வேஸ், கல்ப் ஏர் போன்ற சில விமான நிறுவனங்களே இருந்தன. தொலைத்தொடர்பு மற்றும் அஞ்சல் வசதிகளுக்கு “இந்திய அஞ்சல்” மட்டுமே ஒரே வழி.

பல சூழலில், POE  அனுமதிக்கும் நாளில் விமானத்தில் இருக்கைகள் கிடைக்காது அல்லது உயர்வகுப்பு இருக்கைகள் மட்டும் இருக்கும். விமானத்தில் இருக்கை முன்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நாளில் POE ன் ECRS தாமதமாகும். சில சூழலில் POE ECRS தாமதத்தால் விசாவே காலாவதி ஆகும் சூழலும் ஏற்படும். அடுத்ததாக இந்த POE ECRS நடைமுறைகள் எந்த ஒரு தனிநபர் பயணிக்கும் தெரியாது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஏதேனும் ஒரு பயண ஏற்பாட்டாளரையே (டிராவல் ஏஜென்ட்) அணுக வேண்டிய நிரப்பந்தம். அவர்கள் POE ECRS, விமான பயணச்சீட்டு என தனித்தனி சேவைக்கட்டணங்கள் வசூலிப்பர்.  அதிகப்படியான செலவு. இதில் சிலர் நியாயமற்றும் இருப்பர். இம்மாதிரி சிக்கலான நடைமுறைகளால் பயணிகளை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் சம்பாதித்தோரும் உண்டு! சில சூழலில் பயணிகள் ஏமாற்றப்படவும் செய்வர்.

சிலர் பாஸ்போர்ட்டில் போலி ECNR முத்திரை இட்டு பயணிப்பர். அன்று விமானநிலைய குடியேற்றப்பிரிவும் (Aiport Immigration)  கணினிமயமாக்கப்படவில்லை. பயணிகள் கையால் எழுதியே குடியேற்றப்பிரிவு விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர்.

குடியேற்றப்பிரிவு அதிகாரிகளாக அந்தந்த விமானநிலையங்கள் உள்ள உள்ளூர் காவல்துறை அதிகாரிகளே பணியாற்றினர். விமானநிலையத்தில் இம்மாதிரி பல போலி ECNR மற்றும் ECRS முத்திரைகள் கொண்ட பாஸ்போர்ட் பிடிபட்டு பயணிகள் கைதாகினர்.

இதில் பல பயணிகளுக்கு தங்கள் பாஸ்போர்ட்டில் இருப்பது போலி முத்திரை என்பது கூடத் தெரியாது. அவர்கள் ஏதோ ஒரு அங்கீகரிக்கப்படாத டிராவல் ஏஜண்ட்டாலோ ஏதேனும் ஒரு இடைத்தரகராலோ ஏமாற்றப்பட்டிருப்பர். இதனால் பயணிகளுக்கும் குற்றவழக்கு பதியப்பட்டு, காவல்துறை, நீதிமன்றம் என அலைச்சல் மற்றும் மன உளைச்சல் உண்டாகும். அத்துடன் குடியேற்றப்பிரிவு அதிகாரிகளுக்கும் இவ்வழக்குகளை கையாளுவது என்பது கூடுதல் வேலைப்பளு. இப்படி எண்ணிலடங்கா விஷயங்கள் 2000ம் காலகட்டத்தில் நடந்தேறின. அதுமட்டுமன்றி, மலேசியா, தாய்லாந்து, துபாய் போன்ற நாடுகளுக்கு முறையான சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மூலமாக (Tour Operators)  சுற்றுலா செல்வதற்கும் ECR  பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் POE ன் ECRS அனுமதி வாங்கவேண்டும். வெளிநாடுகளில் வேலை பார்க்கும் மகன், ஆசையாய் தனது தாய் தந்தையரை வெளிநாட்டிற்கு அழைத்து சுற்றிக்காட்டலாம் என்றாலும், தாய் தந்தையர் ECR பாஸ் போர்ட் வைத்திருக்கும் பட்சத்தில் அவர்களும் POE ன் ECRS அனுமதி வாங்கவேண்டும். வெளிநாடுகளில் வசிக்கும் மகளுக்கோ மருமகளுக்கோ பிரசவம் உள்ளிட்ட மருத்துவ உதவிகள் தேவைப்படும் பட்சத்தில், தாயோ, மாமியாரோ வெளிநாடு செல்லவேண்டிய அவசிய மெனில் அவர்கள் ECR  பாஸ்போர்ட் வைத்திருந் தால் அவர்களும் POEன்ECRSஅனுமதி வாங்கவேண்டும். இப்படி POEன் ECRSஅனுமதி தேவையான பட்டியல் நீண்ட பட்டியலைக் கொண்டது.

வெளிநாடுவாழ் இந்தியர்களின் முக்கியத்துவம் மற்றும் அவர்கள் வெளிநாடுகளில் இருந்து சம்பாதித்து அனுப்பும் பணம் (Foreign Remit­tances) இந்தியாவை பொருளாதார ரீதியாக கட்டமைப்பதில் எத்தகைய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நன்கு உணர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடந்த மே மாதம், 2004ல் பிரத்யோகமாக, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அமைச்சகம்

(Ministry of Oveseas Indian Affairs) என்ற புதிய அமைச்சகத்தை “ஜெகதீஷ் டைட்லர்” அவர்களை அமைச்சராகக் கொண்டு தொடங்கினார்.

இந்த அமைச்சகம் தான் அன்று POE -ஐ கட்டுப்படுத்தியது. (இந்த அமைச்சகம் தற்போதைய பிஜேபி ஆட்சியில் “வெளிவிவகாரத்துறை அமைச்சகத்துடன் Ministry of External Affairs)” இணைக்கப்பட்டது).

இந்நிலையில், வளைகுடா நாடுகளில் அதிகரித்த வேலைவாய்ப்புகளால், இந்தியா விற்கும், வளைகுடா நாடுகளுக்குமிடையே அதிகரிக்கும் விமானபயணிகள் எண்ணிக்கை, வளைகுடாநாடுகளில் அதிகரிக்கும் இந்தியர்களின் குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாட்டினரின் குடியேற்றங்கள், அதிகரிக்கும் POE தேவைப்படும் விண்ணப்பங்கள், வேலைப்பளுவால் தாமதமாகும் POE விண்ணப்பங்கள் உள்ளிட்ட காரணங்களால் இந்திய விமான நிறுவனங்களின் வளத்தை (Traffic) (ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் மட்டுமே அப்போதிருந்த இந்திய விமான நிறுவன ங்களாகும்) வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தட்டிப்பறித்தன.

இன்று வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவில் சேவை வழங்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் போன்ற விமான நிறுவனங்கள் எல்லாம் அன்று பறக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் வேலைபார்க்கும் இந்தியர்களில் புதிதாய் திருமணமானவர்கள் குடும்பம் நடத்த மனைவியை வெளிநாட்டிற்கு அழைப்பதில் உள்ள சிக்கல்கள், தாமதங்கள், விடுமுறையில் மனைவி குழந்தைகளை வெளிநாட்டிற்கு அழைப்பதில் உள்ள ECR, POE சிக்கல்கள், (சில சூழலில் POE முடித்து விமானத்தில் இடம் கிடைப்பதற்குள் விடுமுறையே முடிந்துவிடும்) சூழ்நிலையைப் பயன்படுத்தி அதிகாரிகள் மட்டத்தில் அதிகரித்த சட்ட மற்றும் விதிமீறல்கள் (Malpractice), அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்புகள், பரவலான போலி ECNR மற்றும் POE ன் ECRS முத்திரைகள், இதனால் அதிகரித்த வழக்குப்பதிவுகள் மற்றும் வழக்குச்செலவுகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, கடந்த 26.09.2007 அன்று  மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பொன்று இந்திய விமானத்துறை வரலாற்றையே புரட்டிப்போட்டது.

அது என்ன…  அடுத்த இதழில் பார்ப்போம்…

 

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.