இந்து அறநிலையத்துறை – 400 மடங்கு வாடகை உயர்வு‌ ! அதிரடியா? அடாவடியா? கதறும் வியாபாரிகள் !

-மெய்யறிவன்

0

 

இந்து அறநிலையத்துறை – 400 மடங்கு வாடகை உயர்வு‌ ! அதிரடியா? அடாவடியா? கதறும் வியாபாரிகள் !

https://businesstrichy.com/the-royal-mahal/

தமிழகத்தில் இந்து சமய அற நிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் 44,729 இந்து சமய மற்றும் சமண சமய திருக்கோயில்கள் உள்ளன. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் இந்து திருக்கோவில்களுக்கும் அவர்களுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. “அறநிலையத்துறையை கலைக்க வேண்டும்” என பா.ஜ.க.வைச் சேர்ந்த ஹெச்.ராஜா தொடர்ந்து கூறி வருகிறார். ஜக்கிவாசுதேவும், “இந்து திருக்கோவில்களை தனியாரிடம் கொடுங்கள்” என முழங்கினார்.

இப்படியாக பலவேறு எதிர்கணைகளுடன் இந்து அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் பி.கே.சேகர்பாபு. பொறுப் பேற்றதும் அவர் செய்த முதல் வேலை, “தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோயில்களின் சொத்து ஆவணங்களையும் இணையத்தில் வெளிப்படையாகப் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புவிசார் குறியீடு செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

திருக்கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும்” எனவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவரது அறிக்கை தெரிவித்தது. இதை பா.ஜ.க.வினரும் வரவேற்றனர்.

“கோயிலின் சொத்துகள் சீரழிக்கப்படக் கூடாது. பல்லாயிரக்கணக்கான கோயில்களில் ஆன்மிகச் செயல்பாடுகளுக்கான நிதி வசதி இல்லாமல் இருப்பதையும், மறுபக்கம் கோயில்களின் நிதி வசதி சுரண்டப்படுவதையும், ஆக்கிரமிக்கப்படுவதையும் பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, கோயில் நிலங்களில் வாடகைக்கு இருப்போர் அதற்குரிய வாடகையைக் கொடுக்காமல் இருப்பதிலும், பல கோயில்களில் வாடகைத் தொகை என்பது மிகவும் குறைவாக வசூலிக்கப்படுவதையும் பார்க்க முடிகிறது” என்றெல்லாம் தமிழக பா.ஜ.க-வின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 22,600-க்கும் மேற்பட்ட கட்டிடங்களும், 33,665 கடைகளும் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இத்துடன் கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்களை குத்தகைக்கு விடுவதால் அறநிலைத்துறைக்கு ஆண்டுதோறும் ரூ.60 கோடி வருவாய் கிடைக்கின்றன. என்றாலும் பெரும்பாலான கடை உரிமையாளர்கள் கோவிலுக்கு உரிய வாடகை தொகையை தருவதில்லை. இதையடுத்து வாடகை வசூலில் கறார் காட்டத் தொடங்கியது அறநிலையத்துறை. இதன் ஒரு பகுதியாக திருச்சி, மலைக்கோட்டை, தாயுமான சுவாமி கோவிலுக்கு சொந்தமான கடைகளுக்கான வாடகை நிலுவைத் தொகை குறித்து அறிவித்தது கோவில் நிர்வாகம்.

திருச்சி, மலைக்கோட்டை, தாயுமானசுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமாக 48 கடைகள் உள்ளன. இக்கடைகள் பல 2016ம் ஆண்டு முதல் ரூ.5.57  கோடி வாடகை நிலுவை உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவிக்கின்றன.  வாடகை நிலுவை குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின்னரும் வாடகை பாக்கி தராத வாடகைதாரர்களின் பெயர் பலகையை கோவில் வாசலில் வைத்தது பெரும் பரப்பிற்குரிய செய்தியானது. பெயர் பட்டியல் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது.

இந்தியா முழுவதும் அறியப்பட்ட கல்யாண் ஜூவல்லர்ஸ், ரூ.1.87 கோடி, 100 ஆண்டுகளுக்கு மேல் கடை நடத்தி வரும் எம்.என்.நாகேந்திரன் அன் சன்ஸ்  ரூ.1.04 கோடி, 1965ம் ஆண்டு முதல் கடை நடத்தி திருச்சி மாவட்டத்தில் புகழ் பெற்ற அமர் ஜீவல்லர்ஸ் ரூ.54 லட்சம் என அதிக தொகை வாடகை பாக்கி வைத்துள்ள முதல் 10 கடைகளின் பெயர், பட்டியலில் வெளியானது. வாடகை பாக்கி தராத இரண்டு கடைகளை சீல் வைத்தது கோவில் நிர்வாகம். இதையடுத்து ஒரே நாளில் ரூ.70 லட்சம் வாடகை வசூலானது. தொடர்ந்து அடுத்தடுத்து கடைகளும் தங்களது வாடகை பாக்கியை தரத் தொடங்கினர்.

இந்நிலையில் மலைக்கோட்டை நுழைவாயிலில் 130 ஆண்டுகளுக்கு மேல் கடை நடத்தி வரும் எம்.என்.நாகேந்திரன் அன் சன்ஸ் என்ற பட்டு ஜவுளிக் கடை உரிமையாளர் எம்.விஷால் தனது வாடிக்கையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு, வாடகை பாக்கி குறித்து தன்நிலை விளக்கம் ஒன்றை வாட்ஸ்அப் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தி வருகிறார். இது குறித்து நாம் அவரை சந்தித்து பேசினோம். அப்போது அவர்,

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

“1890ம் ஆண்டு முதல் 5வது தலைமுறையாக இங்கே கடை நடத்தி வருகிறோம். இது போன்ற ஒரு அவப்பெயரை நாங்கள் பெற்றதில்லை. ஒரு மாதம் கூட நாங்கள் வாடகை பாக்கி வைத்ததில்லை. மார்ச் 2022 வரை வாடகை செலுத்தியுள்ளோம்.

கடந்த 2020ம் ஆண்டு கொரோனா ஊரடங்கிற்கு பின் ஆகஸ்ட் 2020ல் நாங்கள் கடை திறந்த போது, கோவில் நிர்வாகம், “2016லிருந்து வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே வித்தியாச தொகை உடன் கட்ட வேண்டும்” என கேட்டார்கள்.

பொதுவாக, அரசாணைப்படி ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை கட்டும் வாடகையில் இருந்து 15% சதவீதம் உயர்த்தி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வாடகைத் தொகை செலுத்த வேண்டும். அதன்படி நாங்கள் இதுநாள் வரை வாடகை செலுத்தி வருகிறோம்.

கடந்த 2016ம் ஆண்டு முதல் எங்களது வாடகையானது 15 சதவீதத்திற்கு பதிலாக 400 சதவீதம் உயர்த்தி அதாவது, ரூ.35210லிருந்து (2016-2019) ரூ.40,500 ஆக என உயர்த்துவதற்கு பதிலாக ரூ.1,76,050 என உயர்த்தி அறிவிக்கிறார்கள். 2019-2022ற்கு ரூ.2,02,457 என வாடகை நிர்ணயித்து பாக்கியை கட்டச் சொல்லி வற்புறுத்தினார்கள்.

எதன் அடிப்படையில் இப்படியான தொகையை உயர்த்தி அறிவித்தார்கள் என்பது இது நாள் வரை எங்களுக்கு கோவில் நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இது குறித்து நாங்கள் அறநிலையத்துறைக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதினோம். பதிலில்லை. பின்னர் நாங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். கூடுதல் வாடகை கேட்டு கோவில் நிர்வாகம் அழுத்தம் கொடுக்காமல் இருக்க ‘ஸ்டே’ வாங்கியுள்ளோம்.

ஆனாலும், நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக, வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் வேலையில், கோவில் அலுவலர்கள் எங்கள் கடையின் மின்இணைப்பை துண்டிப்பது, வாடகை கேட்டு சத்தம் போடுவது, பூட்டி சீல்வைக்கப் போகிறோம் மிரட்டுவது என பலவாறாக அச்சுறுத்தி வருகின்றனர். இதுநாள் வரை நேர்மையாக இங்கு கடை நடத்தி விட்டோம். சரி நாங்கள் காலி செய்து கொள்கிறோம் என்று கூறினாலும், உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள வாடகை பாக்கியை கட்டிவிட்டு கடையை காலி செய்து கொள்ளுங்கள் என்கின்றனர்.

குடோன் பயன்பாட்டிற்காக 300 சதுர அடி கொண்ட ஒரு இடத்தை வைத்திருக்கும் ஒரு பேக்கரி நிறுவனத்திற்கு ரூ.28 லட்சம் வாடகை பாக்கி என நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்கள் என்றால் கோவில் நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். நான், கொங்கு தங்க மாளிகை, கிருஷ்ணா ரெடிமேட்ஸ், அமர் ஜூவல்லர்ஸ் உள்ளிட்ட சிலர் ஒரு அமைப்பாக ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். இங்கே மற்றொரு விஷயத்தையும் உங்களிடம் கூறிக் கொள்கிறேன். கோவில் நிர்வாகத்தின் கீழ் சுமார் 2000 வீடுகள் உள்ளன. அவற்றிற்கு 2016 முதல் வாடகையை உயர்த்தி பெற்று வருகிறார்கள். ஆனால் எங்களுக்கு வாடகை குறித்தை அறிவிப்பை 2020ல் தான் தெரிவிக்கிறார்கள். ஏன் என்று கேட்டால், 2016 முதல் அவர்களுக்கு வாடகை உயர்த்தி பெற்று வருகிறோம். உங்களிடம் இப்போதிருந்து உயர்த்தினால் வீட்டு உரிமையாளர்கள் கேள்வி கேட்பார்கள். அதனால் தான் அவர்களைப் போல் உங்களிடமிருந்தும் 2016லிருந்து உயர்த்தி கேட்கிறோம்” என்கிறார்கள். இது எந்தவிதத்தில் சரியாகும்” என்றார்.

இது குறித்து இந்து அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சனை தொடர்பு கொண்டு கேட்ட போது, “திருச்சி மலைக்கோட்டை கோவில் கடை வாடகை பிரச்சனைகள் குறித்து நீங்கள் திருச்சியில் உள்ள அதிகாரியிடம் விசாரித்து கொள்ளுங்கள்” என்று முடித்துக் கொண்டார்.

இது குறித்து மலைகோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவில் உதவி ஆணையர் விஜயராணியிடம் கேட்டோம். “பொதுவாக கோவில் கடைகளுக்கு வாடகை நிர்ணயிப்பதற்கென்று ஒரு குழு உள்ளது. அவர்கள் தான் வாடகையை நிர்ணயிப்பார்கள். பொது மக்கள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் உள்ள கடைகளுக்கு வாடகையும் அதிகமாகத் தான் இருக்கும். மேலிடத்திலிருந்து, நிர்ணயித்த வாடகையை வசூலிக்க வலியுறுத்தும் போது நாங்கள் கேட்கத் தான் செய்வோம். அவர்கள் தரப்பில் நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள் என்பது அவர்களது விருப்பம். இது குறித்து அவர்கள் தரப்பில் ஏதாவது தெரிவிக்க வேண்டும் என்றால் என்னிடம் நேரிடையாக வந்து பேசி தெரிவித்தால் நான் மேலிடத்தில் அவர்களின் கோரிக்கையை தெரிவிப்பேன். அவ்வளவு தான் என்னால் செய்ய முடியும்” என்றார்.

திடீரென 400 மடங்கு வாடகை உயர்வு என்பதும், வாடகை கட்டி முடித்த ஆண்டுகளுக்கு சேர்த்து கொடுக்க வேண்டும் என்பதும், கொரானா கால கட்டத்திலிருந்து மீண்டுவரும் இந்த நேரத்தில் சாத்தியமா என்பதை துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளும், அரசாங்கமும் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதே வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.