”முருக ராவுத்தரும் – சிவ ராவுத்தரும்”- ராவுத்தர் சன்னதியும் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கி.பி.7 ம் நூற்றாண்டில் பௌத்தமும், சமணமும் வீழ்ந்து கொண்டிருக்க, சைவமும், வைணவமும் அரசர்களின் பேராதரவோடு எழுந்து கொண்டிருந்தது. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியில் பயணிக்கத் தொடங்கினர். ஏறக்குறைய இஸ்லாம் அரேபிய மண்ணில் உருவான காலமும் இதுதான். ஆனால் அதற்கு முன்பே அரபு தேசத்து வணிகர்கள் தமிழக கடற்கரையோரங்களில் வணிகத் தொடர்பை உருவாக்கியிருந்தனர்.

ஆதிகாலத்திலிருந்தே தமிழகத்தின் பொருள் வளங்களும், மக்களின் புதியன வாங்கும் ஆர்வமும் சோனகர் எனப்படும் அரபு வணிகர்கள், பாரசீக வளைகுடா வியாபாரிகளின் கவனத்தை ஈர்த்தன. சோனகரை யவனர் என்றும் தமிழ் நூல்கள் சிறப்பிக்கின்றன. பாலி மொழி பேசும் சொல்லாக ‘சோனகர்’ என்ற சொல் இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு.

இனிய ரமலான் வாழ்த்துகள்

பொன்னுக்கு ‘சொர்ணம்’ அல்லது ‘சோன’ என்ற பெயர் உண்டு. அரபிகள், பொன்னைக் கொடுத்துப் பொருள் பெற்றுச் சென்றதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம். (‘பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ – என்பது சங்க இலக்கியம்) ராஜராஜனின் பெரிய கோயில் கல்வெட்டில் ‘சோனகன் சாவூர்’ என்ற சொல் இடம் பெற்றுள்ளது.  சந்தை இருந்ததாகவும் கூறுகின்றன. அரபு வணிகர்களின் துணிகள், மற்றும் வாசனைப் பொருட்கள் இங்கு ஈர்த்ததுபோல சோனக மண்ணில் நமது முத்துக்களும் இடம்பிடித்தன.

நான்கு வர்ண மக்கள் வாழ்ந்த மண்ணில் நுழைந்த இஸ்லாமியர்களை ஐந்தாவது வர்ண மாகப் பார்த்தவர்கள் என்பதால் இவர்களை அஞ்சு வண்ணத்தார் என்றனர். இது ஒரு கருத்தாகும். ஆனால் ஆசீம் வம்சம் (நபிகள் நாயகம் ஸல் வம்சம்) பக்கிரி வம்சம் (அபுபக்கர் ரலிவம்சம்) பாரூக்கி வம்சம் (உமர் ரலிவம்சம்) உடையாவம்சம் (உதுமான் ரலி வம்சம்) இராணுவயுக்தர் (குதிரை ராவுத்தர் என்னும் குதிரை வணிகர்கள்) இவர்களே அஞ்சுவண்ணத்தார் என்ற கருத்தும் உண்டு.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இஸ்லாமியர்களை துலுக்கர் என்று அழைக்கும் வழக்குண்டு. கம்பன், ஒட்டக்கூத்தர், ஜெயங்கொண்டார் போன்ற பழந்தமிழ்க் கவிகள் இஸ்லாமியர்களைக் குறிக்க ‘துருக்கர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். துருக்கியில் இருந்து வந்தவர்கள் என்று அர்த்தம் வர, ‘துருக்கியர்’, ‘துருக்கர்’ என்ற சொல் பயன்பட்டது. துருக்கரே ‘துலுக்கர்’ என்றாயிற்று.உலகளாவிய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் துருக்கியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டதால் ‘துருக்கர்’ என்று அழைக்கப்பட்டு, பின் மருவி துலுக்கர் என்று பேசப்பட்டனர்.

தமிழகத்தில் நிறைந்திருக்கும் துலுக்கர்கள்பட்டி, துலுக்கன் குளம், துலுக்கன் குறிச்சி, துலுக்கமுந்தூர் போன்ற ஊர்கள் துருக்கர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான உறவைச் சொல்கிறது. துலுக்கரின் ஆட்சி, ‘துலுக்காணியம்’ என்ற புதுச் சொல்லால் குறிப்பிடப்பட்டது. துலுக்கர் நாடு என்று நிலம் இருந்ததை திருவிளையாடல் புராணம் எடுத்தியம்புகிறது.

அரபு வணிகர்களின் வாசனைத்திரவியம் போன்ற பொருட்கள் மக்களை ஈர்த்தன. இது தவிர அரபு வணிகர்கள் குதிரை வணிகமும் புரிந்தனர். ஆனால் இறக்குமதியாகும் குதிரைகளை சேணம் போன்ற கருவிகள் இல்லாமலும் பழக்கத் தெரியாமல் முரட்டுத்தனமாகச் சவாரி செய்ததாலும் குதிரைகள் இறந்தன. இதனால் மன்னர்கள் வணிகர்களான அரபிகளையே நியமித்தனர். இவர்களின் ஆற்றலும் வீரமும் கண்ட மன்னர்கள் குதிரைப் படைத் தலைவர்களாகவும் நியமனம் செய்தனர்.

குதிரை வணிகர்களை ராவுத் என்று அழைத்தனர்.

திருவிளையாடற் புராணம் 59’வது படலத்தில் குதிரைகளை ஓட்டிவந்த குதிரை வணிகர் தலைவர் ராவுத்தர்களைப் போல வெள்ளை ஆடையும் தலைப்பாகையும் தாடியும் கொண்டு வேடமிட்டு வந்ததைக் கூறுகிறது. தமிழ்நாட்டின் ஆதிக்கோயில்கள், பலவற்றில் குதிரை ராவுத்தரின் சிலைகள் உள்ளன. திருப்பெருந் துறைக் கோவில் மண்டபக் குதிரைச் சிலையுடன் கூடிய மண்டபம் குதிரைராவுத்தர் மண்டபம் என்றும், கள்ளக் குறிச்சியில் திரௌபதியம்மன் கோவில் வாசலிலும் தலைப்பாகை- தாடியுடன் கூடிய சிலை முத்தியாலுராவுத்தர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.

அருணகிரிநாதர் தனது கந்தரலங்காரம். கந்தர் கலிவெண்பா நூற்களில் முருகக் கடவுளை

“சூர்க் கொன்ற ராவுத்தனே!

மாமயிலேறும் ராவுத்தனே”

என்று வர்ணிக்கின்றார். இராவுத்தர் என்பது மேதகு என்னும் சொல்லைக் குறிக்கும்.

10-ம் நூற்றாண்டையொட்டிக் குதிரை வணிகம், ஒரு பெரிய சந்தையைத் தமிழகத்தில் உருவாக்கியது. மாணிக்கவாசகர் முன் சிவபெருமான், குதிரை ராவுத்தனாகத் தோன்றினார் என்கிறது திருவிளையாடல் புராணம்.

முதலில் குதிரை வணிகர்களான அரபிகளைக் குறிக்கும் ராவுத்தன் என்ற சொல், பின் வீரர்கள், வீரம் என்று குறிக்கத் தொடங்கியது. குதிரைகளைப் பழக்கியவர்கள் ராவுத்தர், போருக்குச் சித்தமாக இருப்பவர்கள் என்ற பொருளும் ‘ராபித்தூ’ என்ற அரபிச் சொல்லுக்கு உண்டு. இஸ்லாமியத் தமிழர்களைக் குறிக்கும் சொல்லாக இப்போது இது விளங்குகிறது. ராஜராஜசோழன் தன் விருதுப் பெயர்களில் ஒன்றாக ‘ராகுத்த மிண்டன்’ என்பதையும் கொண்டான்.

மரக்கலம் என்பது கப்பல்களையும் படகுகளையும் குறிக்கும். மரக்கலத் தலைவர்கள் மரக்கல ராயர் என்றும் மரைக்காயர் என்றும் அழைக்கப் பட்டனர். மார்க்கப் என்பது மரக்கலத்திற்கான அரபு வேர்ச்சொல் ஆகும்.

மரைக்காயர் என்ற சொல்லும் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரைக் குறிக்கும். கடலின் ஆழத்தையும், காற்றின் பேச்சையும் முதன் முதலில் அறிந்து கடல் வணிகத்தை மேம்படுத்திய அரபியர்கள், பின் நாட் களில் பரங்கிகளின் கடல் கொள்ளையாலும், வலிமையாலும் உள் நாட்டு வணிகத்தை மேற்கொண்டார்கள்.

தமிழக இஸ்லாமியர் கடலோர வணிகம் மேற்கொண்டவர்கள். வங்காளம், இலங்கை, பர்மா ஆகிய அண்டை நாடுகளுடன் அரிசி, தேக்குமரம், கைத்தறித் துணிகள், ஆடு மாடுகள் ஆகியவற்றை மரக்கலங்களில் கொண்டுச்சென்று வியாபாரம் செய்தார்கள். இவர்கள் தோணி, டிங்கி, சாம்பான் என்ற வகையான மரக்கலங்களைப் பயன்படுத்தித் தொழில் செய்தார்கள். மரக்கலராயர்கள் என்ற சொல்லே மரைக்காயர் என்றாயிற்று. ‘லெப்பைகள்’ என்போர் மார்க்கப் பணியில் இருப்பவர்களைக் குறிப்பது.

முகமது நபியின் வரலாற்றைக் கூறும் சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவர் அடக்கம் செய்யப்பட்ட எட்டையபுரத்தில் தர்கா உள்ளது. நீண்ட காலமாக பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்த பிச்சையாக் கோனர் என்பவர் உமறுப்புலவர் தர்காவில் வணங்கி வந்ததால் பிள்ளைப்பேறு கிடைத்ததாகவும், அதற்கு நன்றிக்கடனாக பிச்சையாக் கோனார் கட்டியதே எட்டையபுரம் உமறுப்புலவர் தர்கா. இங்கு தேவர் சாதியினரும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். எட்டையபுரம் பகுதியில் தேவர் சமூகத்தினர் உமறுத்தேவர் என்றும் உமறம்மாள் என்றும் பெயர் வைத்துக் கொள்ளும் வழக்கம் உண்டு.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

எட்டையபுரம் உமறுப்புலவர் தர்கா.
எட்டையபுரம் உமறுப்புலவர் தர்கா.

தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவுலியாக்களின் இறந்தநாள் தான் சந்தனக்கூடு விழாவாக நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு பத்து நாளுக்கு முன்பு கொடி கட்டு விழா நடைபெறும். பௌத்தத்தின் காப்புக்கட்டுதல் போன்றதை ஒத்து இருக்கிறது. இறைச்சியுடன் கூடிய உணவு அவர் இறந்த நாளன்று அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதற்கு கந்தூரி என்று பெயர்.

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தி அருகிலுள்ள மானிக்கபூரில் 1491 ல் பிறந்து, இஸ்லாத்தைப் பரப்பி தஞ்சைக்கு வந்து சேர்ந்த சையது சாகுல் ஹமீது காதர் என்பவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடமே நாகூர் தர்ஹா. கி.பி.1556 ல் சையது சாகுல் ஹமீது காதர் இறக்கிறார். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களின் உதவி இவருக்கு இருந்திருக்கிறது. முதலாம் துளசா என்று அழைக்கப்படும் துக்கோசி மன்னர் (கி.பி.1729-1735) வழங்கிய இடத்தில் அவரது மகன் பிரதாப் சிங் (கி.பி.1739-1763) 11 நிலைகளுடன் கூடிய 131 அடி உயரமுள்ள மினாரை நாகூர் தர்ஹாவில் கட்டியுள்ளார். இளங்கடமனூர் என்ற கிராமத்தையும் கொடையாக வழங்கியுள்ளார்.

நாகூர் தர்ஹா
நாகூர் தர்ஹா

தஞ்சை மராட்டிய மன்னர்களின் குடும்பத்திற்காக இங்கு பாத்தியா ஓதப்படுகிறது. கந்தூரி விழாவிற்கு தஞ்சை மராட்டிய மன்னர் குடும்பத்திலிருந்து சந்தனமும், பட்டுச் சால்வையும் அனுப்பி வைக்கின்றனர்.நாகூர் தர்காவின் கந்தூரி விழாவில் கொடி ஊர்வலத்தின் போது செட்டியார் சமுகத்தை சேர்ந்த செட்டி பல்லாக்கு இடம்பெறும்.  நாகூர் ஆண்டவர் சமாதியின் மீது போர்த்தப்படுகின்ற சால்வை பழனியாண்டி பிள்ளை என்ற பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர்களின் வாரிசுகளே இன்றளவும் வழங்கி வருகின்றனர்.

தஞ்சாவூர் மன்னர் செப்பேடு 1983 தொல்லியல் கருத்தரங்கு (பக் 3) என்ற ஆவணத்திலிருந்து கிபி 1614ம் ஆண்டு பட்டயம் ஒன்றில் பார்ப்பனப் பெண் ஒருவர் வல்லத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் காட்டுபாதையில் கள்ளர்கள் வழிமறிக்கப்படுகிறார். அப்பெண் அந்த வழியே வந்த ஒரு பக்கீரிடம் அடைக்கலம் கேட்கிறாள். அந்த பார்ப்பனப் பெண்ணுக்காக கள்ளர்களிடம் பரிந்து பேசி அவளுக்கு ஊறு இழைக்க வேண்டாமென்று பக்கீர் கெஞ்சுகிறார். ஆனால் கள்ளர்கள் பக்கீரை கொன்று விடுகிறார்கள். அந்த பெண் நாக்கை பிடுங்கிக் கொண்டு செத்துப் போனார் என்று அந்த பட்டயம் குறிப்பிடுகின்றது.

ஏழு கள்வர்களிடமிருந்து பார்ப்பனப் பெண் ஒருவரைக் காப்பாற்றும் முயற்சியில் உயிர் துறந்த பக்கீர்சாய்புவின் தர்கா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மேற்கில் உள்ளது. பார்ப்பனப் பெண்ணைக் காப்பாற்றும் முயற்சியில் இறந்த பக்கிரிசாய்பும், அந்தப் பார்ப்பனப் பெண்ணும் இந்த தர்காவுக்குள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். “இஸ்மாயில் ஷா தர்கா” என அழைக்கப்படும் இத்தர்காவில் முஸ்லிம் அல்லாதவர்களும் வழிபடுகின்றனர்.

பாபாசேக் அலாவுதீன் என்பவரும், அவரது சீடர் தஸ்தகீர் என்பவரும், இஸ்லாத்தைத் தழுவிய ஹபிஸ் அம்மா என்ற பார்ப்பன பெண் ஒருவரும் அடக்கம் செய்யப்பட்டுள்ள தர்கா நாகப்பட்டினத்திற்கும், வேளாங்கண்ணிக்கும் இடையில் இருக்கிறது. இதற்கு “பாப்பா கோவில் தர்கா” என்று பெயர். அனைத்து மதத்தினரும் வழிபடும் இடமாகவும் உள்ளது.

இந்தியாவின் முதல் பள்ளிவாசல் இன்றைய கேரளத்தின் கொடுங்களூரில் கி.பி.612 ல் கட்டப்பட்ட சேரமான் பள்ளிவாசல் தான்.

இந்தியாவின் முதல் பள்ளிவாசல் - சேரமான் பள்ளிவாசல்
இந்தியாவின் முதல் பள்ளிவாசல் – சேரமான் பள்ளிவாசல்

சேர மன்னன் பாஸ்கர ரவிவர்மா இஸ்லாத்தை தழுவியதையொட்டி உருவாக்கப்பட்ட மசூதி. இன்றைய தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் பள்ளிவாசல் கி.பி.738 ல் திருச்சி ரயில் நிலையம் அருகே உள்ள கல்லுப்பள்ளி.

உறையூர் துறைமுக நகராக இருந்த போது வியாபாரத்திற்கு வந்த அரபு வணிகர்களால் கட்டப்பட்டது. காவிரி பெரு வெள்ளத்தில் உறையூர் அழிந்தது.

உலகின் முதல் பள்ளிவாசல் மதினாவில் தோற்றுவிக்கப்பட்டது. அஸ்கர் அலி எஞ்ஜினியர் என்ற இஸ்லாமிய வரலாற்று அறிஞர் இப்பள்ளிவாசலின் தோற்றம் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்.

“தீர்க்கதரிசி (முகமது நபி) பாதுகாப்புக் காரணங்கருதி நஜ்ஜர் குலக்குழு மக்களுக்கான இடத்தில் தங்கி இருந்தார். அது ஒரு தரிசு நிலம். ஒரு வேளை ஒரு பகுதியில் மட்டும் சாகுபடி செய்யப்பட்டிருக்கலாம். சில மரக்கூட்டங்களும் பேரீச்சை மரங்களும் அகற்றப்பட்டு கட்டட வேலை தொடங் கியது. தீர்க்கதரிசியின் (முகமது நபி)யும் இக்கட்டட வேலைகளைச் செய்தார்.

திருச்சி - கல்லுப்பள்ளி.
திருச்சி – கல்லுப்பள்ளி.

இக்கட்டடம் தான் முதல் மசூதி என்று முஸ்லீம் மரபில் கருதப்படுகிறது. இதைக் குறிக்கும் சொல் நபாட்டியன் மற்றும் ஸிரியன் வடிவில் மஸ்ஜித என்று வழங்கப்படுகிறது. இதற்கு மக்கள் கீழே விழுந்து வணங்குகிற இடம் அதாவது வழிபாடு செய்யும் இடம் என்று பொருள். இக்கட்டடத்தில் நீண்ட சதுர வடிவில் பெரிய முற்றம் ஒன்று இருந்தது. தீர்க்கதரிசியின் இரண்டு மனைவியருக்குமாக எல்லா நடவடிக்கைகளுக்கும் மையமாயிற்று. முஹம்மத் (நபி) தனது சமுதாய விவகாரங்களையும் பொதுக் கூட்டங்களையும் நடத்திய இந்த இடம் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்தப்பட்டது. ஏழைத் தோழர்கள் இரவில் படுத்து உறங்கினர்.

இஸ்லாமிய காலண்டர் ஆண்டு மெக்காவி லிருந்து தோழர் அபூபக்கருடன் மதீனாவிற்கு (குபா குடியிருப்புக்கு) சென்று சேர்ந்த நாளி லிருந்து தொடங்குகிறது. அரேபியர்கள் அதுவரை தங்களுக்கென ஒரு ஆண்டுக் கணக்கினைக் கொண்டிருக்கவில்லை. ஒரு பொதுவான தேதிக் கணக்கு முறை இல்லை யெனில் மக்காவின் வர்த்தக நடைமுறை களில் குழப்பம்தான் ஏற்படும். தேவை என்று கருதிய போது கி.பி.622 ஜூலை 16-ஆம் தேதியை ஆண்டுத் தொடக்கமாக வைத்துக் கொண்டனர்.

அந்த நாளில் தான் முஸ்லீம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்குப் புறப்பட்டுச் செல்லத் தொடங்கினார்கள். இந்த ஆண்டுமுறையில் தேதிகள் சந்திரமாத அடிப்படையில் கணக்கிடப்பட்டு ஹஜ்ரி ஆக விளங்குகிறது. தர்கா வழிபாடு என்பது இங்கிருந்த நாட்டுப்புற வழிபாட்டு முறையின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

(“நான் எழுதிய ” காவிரி நீரோவியம்” நூலின் ஒரு அத்தியாயத்திலிருந்து…)

 

—     சூர்யா சேவியர்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.