இது என்னோட ஏரியா… ஒத்தைக்கு ஒத்த வர்றியா? போலீசிடம் பாய்ந்த போதை வழக்கறிஞர் !
இது என்னோட ஏரியா… ஒத்தைக்கு ஒத்த வர்றியா? போலீசிடம் பாய்ந்த போதை வழக்கறிஞர் ! திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் போதையில் இருந்ததாக சொல்லப்படும் வழக்கறிஞர் ஒருவர் போலீசாரிடம் வரம்புமீறி பேசியதற்காக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“எங்களைப் பார்த்தாலே இளக்காரமாக தெரிகின்றதா?” என்று போலீசார் தரப்பிலும்; பதிலுக்கு போலீசார் மீது வழக்கறிஞர்கள் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த பலராமன் (லேட்) என்பவரின் மனைவி மஞ்சு. இவருக்குச் சொந்தமான மாருதி காரை, சில மாதங்களுக்கு முன்பு கமலக்கண்ணன் மற்றும் பைரோஸ்கான் என்பவர்களிடம் ஒரு லட்ச ரூபாய்க்கு அடமானம் வைத்துள்ளார். அடமானமாக வந்த காரை போலி ஆவணங்களை உருவாக்கி அவர்கள் மூன்று லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், அடமானம் வைத்த காரை மீட்க மஞ்சு வந்தபோது, “உனது காரை திருப்பித்தர முடியாது. மீறி கேட்டால் உன்னை ஒழித்து விடுவோம்” என கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள் கமலக்கண்ணனும் ஃபெரோஸ்கானும்.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று முறையிட்ட மஞ்சு, அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு அங்கேயே மயங்கி விழுந்தார்.
வீடியோ லிங்
இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்த திருப்பத்தூர் நகர போலீசார், போலி ஆவணங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்ட கமலக்கண்ணன் ஃபெரோஸ் கான் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது, அவர்களது சார்பாக ஆஜராக இருந்த வழக்கறிஞர் சுரேஷ் என்பவர் கைதான இருவரிடமும் “நீதிபதி கேட்கும் போது எனக்கு நெஞ்சு வலிக்குது” என சொல்லுங்கள் என்றிருக்கிறார்.
இதனை பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் குடியரசன் கண்டித்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர் சுரேஷ் அந்த காவலரை அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் பேசியிருக்கிறார். பெண் போலீசார் ஒருவர் உள்ளிட்டு அங்கிருந்த போலீசார் பலரும் எடுத்து சொல்லியும் கேட்காமல், போலீசாரை சகட்டு மேனிக்கு பேசியிருக்கிறார் சுரேஷ்.
இந்த சம்பவங்களின் செல்போன் காட்சிப் பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, வழக்கறிஞர் சுரேஷுக்கு எதிரான கண்டனங்கள் எழுந்தன.
இதனையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில், வழக்கறிஞர் சுரேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையறிந்த சுரேஷ் தலைமறைவானார். தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், பழனியில் பதுங்கியிருந்த சுரேஷை கைது செய்திருக்கிறார்கள் திருப்பத்தூர் போலீசார்.
இந்த விவகாரம் குறித்து உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஷெனாஸிடம் பேசினோம்.
“புகார் கொடுத்தவுடன் ரசீதைக் கொடுத்துவிடுங்கள். சரியான விசாரணை செய்து, உடனடியாக எப்ஐஆர் போட்டு, வழக்கை நீதிமன்றத்துக்கு அனுப்பிவிட்டால், போலீசார் மீது குற்றம் சொல்ல வழியில்லை.
போலீசார் நீதிபதி வேலையைச் செய்யும் போது பிரச்னை ஆரம்பிக்கிறது. காவல்நிலையத்தில் புகாருக்கு தீர்வு காண முயற்சிப்பது தவறில்லை. கடுமையான சூழலிலும் அங்கேயே தீர்வு காண முயல்வது உரசல்களை ஏற்படுத்தும்.
காவல்துறை தீர்வு சொல்லும் துறையல்ல என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
அதேசமயம், வழக்கறிஞர்கள் காவல் நிலையத்துக்கு சென்று வழக்கு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு செல்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், போலீஸ் வேலையில் குறுக்கிட்டு உங்கள் கட்சிக்காரருக்கு ஆதரவாக செயல்பட போலீசாரை வற்புறுத்தும்போதுதான் பிரச்னை தொடங்குகிறது.
காவல்நிலையத்தில் நியாயம் இல்லையெனில், அவர்களிடம் விவாதிப்பதை தவிர்த்து, மேலதிகாரி அல்லது நீதிமன்றத்தில் தீர்வு காண முடிவு செய்வது நல்லது.
இதை முழுதும் தவிர்க்க வழக்கறிஞர்களால் முடியும், அத்தனை பிரச்னைகளையும் நீதிமன்றத்தில் சொல்லலாம், ஒத்துழைக்காத காவல்துறை மேல் நீதிமன்ற அவமதிப்பு மற்றும் துறை ரீதியான விசாரணைக்கு முயற்சிப்பதே சாலச் சிறந்தது.” என்கிறார் அவர்.
கா.மணிகண்டன்.
வீடியோ லிங்