செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அறிவு மரபில் நாட்டுப்புறவியலின் கொடை தேசியக் கருத்தரங்கம் !
தமிழாய்வுத்துறையில் இந்திய அறிவு மரபில் நாட்டுப்புறவியலின் கொடை என்னும் மையப்பொருளில் தேசியக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத் தொடக்க விழாவிற்குக் கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. தலைமை வகித்தார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கச் செயலர் மேனாள் தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஞா.பெஸ்கி நோக்கவுரையாற்றினார். 48 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக்கோவை வெளியிடப்பட்டது.
கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. ஆய்வுக்கோவையை வெளியிட்டு தொடக்கவுரையாற்றினார். தம் தொடக்கவுரையில், அறிவு மரபு என்பது அரசவைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் மட்டுமே உருவான ஒன்று அல்ல; அது மக்கள் வாழ்வின் நடுவே, அவர்களின் அன்றாட அனுபவங்களிலும் பண்பாட்டுச் செயல்பாடுகளிலும் இயல்பாக வளர்ந்த ஒரு பரந்த மரபாகும். அந்த மக்கள் அறிவின் உயிர்ப்பான வெளிப்பாடுகளே நாட்டுப்புற மரபுகளாக விளங்குகின்றன. அவற்றை அறிவியல் நோக்கில் ஆய்வு செய்யும் நாட்டுப்புறவியல், இந்திய அறிவு மரபின் அடித்தளத்தைப் புரிந்து கொள்ளும் முக்கியத் துறையாக இன்று மதிக்கப்படுகிறது. என்பதை அடையாளப்படுத்தும் விதமாக எமது கல்லூரித் தமிழாய்வுத்துறை இத்தகு தேசியக் கருத்தரங்கம் நடத்துவதும், அந்தக் கருத்தரங்கில் பகிரப்படும் ஆய்வுக்கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளிக்கொணர்வதும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது எனப் பதிவு செய்தார்.
கல்லூரி முதல்வர் அருள்முனைவர் சி.மரியதாஸ், சே.ச. தம் தலைமையுரையில், இந்தியப் பண்பாடு என்பது ஒற்றை மையத்தில் உருவான ஒன்றல்ல. அது பல இனங்கள், பல மொழிகள், பல வழக்காறுகள், பல வாழ்வியல் அனுபவங்கள் இணைந்து உருவாக்கிய ஒரு பெரும் அறிவுக் களஞ்சியம். அந்தக் களஞ்சியத்தின் பெரும் பகுதி எழுதப்படாத வரலாறாகவும் நாட்டுப்புறக் கதைகள், பாடல்கள், பழமொழிகள் போன்ற வாய்மொழி மரபாகவும், சடங்குகள், நம்பிக்கைகள், கலை வடிவங்கள் போன்ற நிகழ்த்துதல்களாலும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. இவ்வகையில், நாட்டுப்புறவியல் இந்திய அறிவு மரபின் உயிர்நாடியாக விளங்குகிறது. தமிழர்களின் அறிவுக்கொடையை முரசறைந்து அறிவிக்க எமது கல்லூரித் தமிழாய்வுத்துறை இந்திய அறிவு ஒருங்கில் தமிழின் கொடை என்னும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கை நடத்துவது குறித்து மகிழ்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் கவிஞர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தொடக்க விழாவில் பங்கேற்று விழாப் பேருரையாற்றினார். அவர் தம் உரையில், நாட்டுப்புறவியல் என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சங்களின் தொகுப்பு அல்ல; அது சமூகத்தின் சிந்தனை முறையையும் மதிப்பீடுகளையும் வெளிப்படுத்தும் அறிவியல் துறை. விவசாயம், மருத்துவம், சுற்றுச்சூழல், உணவு முறை, தொழில், குடும்ப அமைப்பு, பெண் நிலை, சமூக ஒழுக்கங்கள் போன்ற பல்வேறு தளங்களில், நாட்டுப்புற அறிவு மனித வாழ்வுக்கு வழிகாட்டி வந்துள்ளது. இன்று நாம் “பாரம்பரிய அறிவு” என்று கூறும் பல அறிவுச் சிந்தனைகள், நாட்டுப்புற மரபின் வாயிலாகவே உருவெடுத்தவை என்பதை மறக்க முடியாது என்பதை நாட்டுப்புற வழக்காறுகள் மூலம் பல சான்றுகளோடு விவரித்தார். பணிமுறை இரண்டு தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாக்கிய செல்வரதி நன்றியுரையாற்றினார். தொடக்க விழா நிகழ்வுகளை முனைவர் ஆ.அடைக்கலராஜ் மற்றும் முனைவர் லோ.ரூபா நெறியாள்கை செய்தார்.
தொடர்ந்து முனைவர் ஞா.பெஸ்கி தலைமையில் ஆய்வு அமர்வு நடைபெற்றன. இந்த அமர்வுகளில் கருத்தரங்கப் பேராளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர். அமர்வுகளை முனைவர் ஆ.மரிய தனபால் மற்றும் முனைவர் போ.ஜான்சன் ஒருங்கிணைத்து வழிநடத்தினர். அறம் கலை மையம் சார்ப்பிலும், தமிழாய்வுத்துறை நாட்டுப்புறவியல் மன்றம் சார்பிலும் கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
கருத்தரங்க நிறைவு விழாவிற்குக் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், சே.ச. தலைமை வகித்தார். தம் தலைமையுரையில், நாட்டுப்புறவியலை வெறும் கேளிக்கையாகவோ, பழங்கதைகளாகவோ பார்க்காமல், அதில் பொதிந்துள்ள அறிவியல் மற்றும் சமூகநீதிக் கூறுகளை வெளிக்கொணரும் வகையில் ஆய்வாளர்கள் தங்களது கட்டுரைகளை வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. உங்களின் இந்த உழைப்பு, வருங்காலச் சந்ததியினர் நமது மரபைச் சரியாகப் புரிந்து கொள்ளத் துணையாக இருக்கும். இந்த ஆய்வுக்கோவை ஆய்வுலகில் கவனத்தைப் பெறவும், இந்திய அறிவு மரபை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லவும் உதவும். இம்முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.
இணை முதல்வர் முனைவர் த.குமார் வாழ்த்துரையாற்றினார்.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் கி.பார்த்திபராஜா கருத்தரங்க நிறைவுரையாற்றினார். அவர் தம் உரையில், மண்ணின் மணத்தையும், மக்களின் அறிவையும் போற்றும் சமூகமே வரலாற்றில் நிலைத்து நிற்கும். அந்த அடிப்படையில் நமது நாட்டார் வழக்காறுகளில் பொதிந்துள்ள அறம், மருத்துவம், வாழ்வியல் நுட்பங்கள், மேலாண்மை மற்றும் சூழலியல் அறிவு போன்றவையே உண்மையான தமிழ் மரபை உள்ளடக்கிய இந்திய அறிவு மரபின் அடித்தளம் என்பதை நிரூபிக்க இக்கருத்தரங்கு துணை செய்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, மண்ணின் மக்கள் தங்கள் அறிவுத்திறத்தால் உயர்ந்து நிற்பதை உரையாக வழங்கினார்.
நிறைவில் கருத்தரங்கப் பொருளர் முனைவர் ஜா.சலேத் நன்றியுரையாற்றினார். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் இ.யோகராஜ் மற்றும் முனைவர் ஜா.ஸ்டெல்லாமேரி ஆகியோர் நிறைவு விழா நிகழ்வை நெறியாள்கை செய்தார். தமிழ் ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், தமிழாய்வுத்துறை மற்றும் பிறதுறைப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், மாணவர்கள் உள்பட 376 பேர் இக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.