“மக்களை நிர்க்கதியாக்கும் போர்கள்” – ஈழத்து இயக்குனரின் உள்ளத்து உண்மைப் பேச்சு!
’ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ’ கார்த்திகேயன் சந்தானம் & இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க, இணைத் தயாரிப்பாளராக தெலுங்கு ஹீரோ ராணா டகுபதியின் ‘ஸ்பிரிட் மீடியா’ வும் இணைந்துள்ள படம் ‘நீளிரா’. தமிழ் ஈழத்தின் மட்டக்களப்பில் பிறந்து, வளர்ந்து, அங்கு பள்ளிப்படிப்பையும் இங்கே சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஸன் டிப்பையும் முடித்துள்ள சோமீதரன் என்பவர் இயக்கியுள்ள ‘நீளிரா’ ஈழமண்ணில் நடைபெற்ற விடுதலைப் போர்ச் சூழலில் ஒரு திருமணம் நடந்த போது இருவீட்டாரும் எதிர் கொண்ட சவால்களை பின்னணியாகக் கொண்டது.
இதில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்செண்ட், விது, ரோஹித், கோகாட்டே நவயுகா, சிது குமரசேன, ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு : செல்வரத்னம் பிரதீபன், இசை : கே, எடிட்டிங் : ராதா ஸ்ரீதர், ஆர்ட் டைரக்டர் : மார்ட்டின், பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்.
வருகிற ஏப்ரல்.03-ஆம் தேதி ‘நீளிரா’வை தமிழ்நாடெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் பண்ணுகிறது ஏஜிஎஸ் எண்டெர்டெய்ண்மெண்ட். இதனால் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் மார்ச். 20-ஆம் தேதி நடந்தது.
நிகழ்ச்சியில் பேசிய, படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நவீன் சந்திரா, சனந்த் ’எமகாதகி’ ஹீரோயின் ரூபா கொடுவாயூர், இசையமைப்பாளர் கே உட்பட அனைவருமே, “இந்தப் படம் எங்கள் எல்லோருக்கும் முக்கியத்துவமானது. போர் என்றால் இருதரப்பிலும் ஆயுதங்கள் இருக்கும் என்று தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அங்கே மக்கள் இருப்பார்கள், அவர்களுக்கென்று வாழ்க்கை இருக்கிறது, குறிப்பாக ஈழத்து மண்ணில் நடைபெற்ற போரின் போது மக்களின் துயர நிறைந்த வாழ்க்கை இருந்தது என்பதைப் பேசுகிறது இப்படம்”என்றனர்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசும் போது, “இது எங்களுடைய 18-ஆவது தயாரிப்பு. அதில் இந்த ‘நீளிரா’ மிகவும் ஸ்பெஷலான படம். இதைத் தயாரித்ததற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்தக் கதையைக் கேட்டு இதை நாமே தயாரிக்க வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் சொன்னவுடன் களத்தில் இறங்கிவிட்டோம். இயக்குனர் சோமீதரனுடனான எங்களின் பயணம் பல ஆண்டுகளாக தொடர்கிறது. உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு இது முக்கியமான படம். இது போன்ற படங்களைத் தொடர்ந்து தயாரிக்க மீடியாக்களின் ஆதரவும் ரசிகர்களின் ஆதரவும் தேவை”.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், “இலங்கையில் நடந்த போரைப் பற்றி ஆவணப்படம் இயக்கியவர் சோமீதரன். அது மட்டுமல்ல, அவர் ஒரு பத்திரிகையாளரும் கூட. என்னுடைய ‘காட்சிப் பிழை’ குறும்படம் மூலம் தான் நாளைய இயக்குனர் சீசனில் செலக்ட் ஆனேன். அதில் நாம் இங்கே பார்க்கும், வியக்கும் ஏரோப்ளேனுக்கும் ஈழத்து மண்ணில் பார்க்கும் ஏரோப்ளேனுக்கும் ரொம்பவே வித்தியாசம் உண்டு. இங்கே ஆச்சர்யத்துடன் பார்த்தால், அங்கே திகிலுடன் பார்ப்பார்கள். இதைத் தான் அந்த குறும்படத்தில் சொல்லியிருந்தேன்.
ஈழத்தமிழர்களுக்காக சென்னையில் மனித சங்கிலி போராட்டம் நடந்த போது பெங்களூரிலிருந்து வந்து கலந்து கொண்டேன். ஆயுதங்களைவிட சினிமா வலிமையான ஆயுதம் என்பதால் அந்த மண்ணின், மக்களின் கதைகளை சினிமா மூலம் கொண்டு வர விரும்பினேன். அதான் இந்த ‘நீளிரா’. பண வசூல் என்பதைத் தாண்டி எனக்கு இருக்கும் கடமையாகத் தான் இந்தப் படத்தைத் தயாரித்தேன்.
சோமீதரனின் இந்தக் கதை உங்களை உலுக்கியெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை”.
இயக்குனர் சோமீதரன், “எனது சின்ன வயதில் போர் நடந்து கொண்டிருந்த போது தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் படங்களைப் பார்த்த போது, என்றைக்காவது ஒரு நாள் இந்த பெரிய திரையில் எங்களுடைய மொழியைக் கேட்க முடியாதா?, எங்களின் வாழ்க்கையைப் பார்க்க முடியாதா? என்ற ஏக்கம் இருந்தது. அது இப்போது கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம் ஆகியோர் மூலம் நிறைவேறியுள்ளது.
இந்தக் கதையை நான் சொன்ன போது, ஈழத்துப் போரைப் பற்றி செவி வழிச் செய்தியாக கேட்டு ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்த கார்த்திகேயன் சந்தானம், இதை சினிமாவாக உருவாக்க மேற்கொண்ட முடிவு முக்கியமான தருணம். இந்தக் கதைக்குள் இருக்கும் வாழ்வியல் தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும்.
இன்றைக்கு உலகம் போர்ச் சூழலில் இருக்கிறது. இஸ்ரேலிலும் ஈரானிலும் தினமும் குண்டுகள் விழும் செய்திகளைப் பார்க்கிறோம், கேட்கிறோம். ஆனால் குண்டுகள் விழுகின்ற இடத்தில் அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி, அங்கே மக்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கென்று வாழ்க்கை இருக்கிறது. அந்த மக்களில் பலர் பிறந்த நாளைக் கொண்டாட எண்ணியிருக்கலாம், திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருக்கலாம். ஒரு வீட்டில் மரணம் கூட நிகழ்ந்திருக்கலாம். இவையெல்லாம் குண்டுகள் விழுந்த பிறகு என்னவாகும்? அவர்களின் வாழ்நிலை என்னவாகும்? இதையெல்லாம் பேசுகிற படம் தான் இந்த ‘நீளிரா’. அதே சமயம் ஈழ விடுதலைப் போருக்கும் இப்போது நடக்கும் கொலைவெறிப் போர்களுக்கும் ரொம்பவே வித்தியாசம் உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இது ஈழத்து மண்ணில் நடைபெற்ற போரின் போது ஒரு திருமணம் நடக்கப் போகிறது. அதற்கு முதல் நாள் இரவு அந்தப் பகுதியில் குண்டுகள் விழுகிறது. மரணத்தைவிட கொடுமையானது மரண பயம். அந்த மரண பயத்துடன் நீ…….ண்ட இரவு கழிந்து பொழுது விடியும் போது என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறது நீளிரா. இதற்குள் காதலும் இருக்கு, ஈழத்தமிழர்களின் வாழ்க்கையும் இருக்கு” என தனது உள்ளத்தில் உள்ள உண்மையை பேசினார்.
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.