நியோமேக்ஸ் மீது 466 புகார்கள் ! 92 பேர்மீது வழக்கு 752 வங்கி கணக்குகள் முடக்கம் ! வேகமெடுக்கும் வழக்கு!
நியோமேக்ஸ் மீது 466 புகார்கள் … 92 நபர்களுக்கு எதிராக வழக்கு … 752 வங்கி கணக்குகள் முடக்கம் … வேகமெடுக்கும் மோசடி வழக்கு !
நியோமேக்ஸ் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து போட்ட பணம் திரும்பக் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்கு வசதியாக தமிழகத்தின் மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கெனவே இரண்டு முறை மனு மேளாவை மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் நடத்தியிருந்த நிலையில், தற்போது செப்டம்பர்-08 அன்று மதுரை ஆயுதப்படை மைதானத்தில் மூன்றாவது மனு மேளாவை நடத்தி முடித்திருக்கின்றனர்.

இந்த மூன்றாவது மனு மேளாவில், முந்தைய இரண்டு மனு மேளாக்களை காட்டிலும் அதிகமாக 117 புகார் மனுக்கள் பெறப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 17 மாவட்டங்களிலிருந்து வந்திருந்த பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இந்த புகார் மனுக்களை பெற்றிருப்பதாகவும், நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களான 23 நிறுவனங்களுக்கு எதிரான இப்புகார் மனுக்களின் படி தோராயமாக 17.25 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி நடைபெற்றிருப்பதாக தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, 349 புகார்கள் பெறபட்ட நிலையில், தற்போதைய புகாரையும் சேர்த்தால் ஆக மொத்தம் 466 புகார் மனுக்கள் பெறப்பட்டிருக்கின்றன.

மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவில், குற்ற வழக்கு எண்:3/2023 இன்படி, கடந்த 20.06.2023 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணையை தொடர்ந்து வருகின்றனர். முதல் தகவல் அறிக்கையில் 5 நிறுவனங்கள், 3 இயக்குநர்கள், மற்றும் 3 டீம் ஹெட் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற புலன்விசாரணையில், மேலும் 20 நிறுவனங்கள் மற்றும் 61 நபர்கள் கண்டறியப்பட்டு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆக மொத்தம் இதுவரை 25 நிறுவனங்களுக்கு எதிராகவும்; 67 தனிநபர்களுக்கு எதிராகவும் வழக்கின் விசாரணை நடைபெற்று வருவதாகவும், 9 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், இவ்வழக்கின் குற்றவாளிகள் மற்றும் நிறுவனத்திற்கு சொந்தமான 752 வங்கிக் கணக்குகளில் உள்ள தொகை சுமார் ரூ15 கோடி முடக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரக்குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் திருமதி பாலநாகதேவி ஐ.பி.எஸ். மற்றும் காவல்துறை தலைவர் திருமதி சத்யபிரியா ஐ.பி.எஸ். அவர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டுதலின்படி, இம்மூன்றாவது மனுமேளாவை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு வடக்கு மண்டலத்தின் காவல் கண்காணிப்பாளர் கே.ஜோஷ் தங்கையா மற்றும் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி மனிஷா அர்ஜூனன் மற்றும் இன்ஸ்பெக்டர் திருமதி ராஜநளாயினி ஆகியோர் முன்னிலையில் இந்த மூன்றாவது மனுமேளாவை நடத்தி முடித்திருக்கின்றனர்.

ஏற்கெனவே, இதுவரை மோசடி நிறுவனங்களாக அறியப்பட்ட நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் மிரட்டலுக்கு பயந்தோ அல்லது பொய்வாக்குறுதிகளை நம்பியோ மீண்டும் மோசம் போகாமல், முறையாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரை அணுகி புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்ற வேண்டுகோளை பாதிக்கப்பட்டவர்களிடம் முன்வைத்திருக்கின்றனர்.
காவல் துணைக் கண்காணிப்பாளர், பொருளாதாரக் குற்றப்பிரிவு, 4/425-ஏ, முதல் தளம், சங்கர பாண்டியன் நகர், தபால் தந்திநகர் விரிவாக்கம், மதுரை – 625017. என்ற முகவரியிலும்; eowmadurai2@gmail.com என்ன மின்னஞ்சல் முகவரியிலும்; 0452 – 2562626 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் புகார் அளிக்கலாம் என மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
வே.தினகரன், ஷாகுல், படங்கள்: ஆனந்த்.
ஏன் இன்னும் அண்ணாமலையை பார்த்து நேரம் பேசவில்லை போலும். இல்லையெனில் ஆருத்ரா கோல்டு மோசடி அதிபர்கள் பாணியில் பாஜகவில் சேர்ந்து வெளிநாடு தப்பித்து விடலாம் இல்லை காவல்துறை விசாரணை வளையத்தில் சிக்காமல் “என் பேரு மீனா குமாரி” கேரவன் பேருந்து பாதயாத்திரைக்கு ஸ்பான்சர்ஷிப் செய்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும் ….
ஒழுங்கா கம்பெனி விதிப்படி தொழில் பன்றவன கொடுத்ததே அரசுதான்…