நியோமேக்ஸ் அக்யூஸ்டுகள் 126 பேரும் என்ன ஆனார்கள்? எங்கே போனார்கள்?
நியோமேக்ஸ் 126 அக்யூஸ்டுகள் என்ன ஆனார்கள் ? எங்கே போனார்கள் ? அங்குசம் !
நியோமேக்ஸ் வழக்கில் இதுவரையில் 126 நபர்களை குற்றவாளிகளாக போலீசார் அடையாளம் கண்டிருக்கிறார்கள். அவர்களுள் 50 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் வெளி வந்திருக்கிறார்கள். இருவர் சரண்டர் ஆகியிருந்தார்கள். எஞ்சியோர் முன்ஜாமீன் பெற்று வழக்கை எதிர்கொண்டு வருகிறார்கள்.
நியோமேக்ஸ் என்றாலே, பாலா, கமலக்கண்ணன், வீரசக்தி என்பதாக மூவரோடு சுருக்கப் பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாக, பாலா, கமலக்கண்ணனோடு விவகாரம் முடிக்கப்படுகிறது. நியோமேக்ஸ் நிறுவனத்தை தொடங்கியபோது இருந்த, பவுண்டேஷன் டைரக்டர்ஸ் இப்போது எங்கே போனார்கள்? பாளையக்காரர்களைப் போல, ஆளுக்கொரு ஏரியாவை பிடித்து வைத்துக்கொண்டு இயங்கி வந்த ஆர்.எச்.கள் எங்கேப் போனார்கள்? என்ற கேள்வி எழுகிறது. பத்மநாபனை பற்றிய பேச்சுக்களை எங்கேயும் கேட்க முடிவதில்லை.

இவர்களெல்லாம் ஓசையில்லாமல், அடுத்த பிசினஸுக்கு மாறிவிட்டார்கள். அல்லது, நியோமேக்ஸ் நிறுவனத்தின் சைலன்ட் பார்ட்னராக இருந்து கொண்டு வருமானத்தை பார்த்து வருகிறார்கள். நியோமேக்ஸ் நிறுவனத்தின் பவுண்டேஷன் டைரக்டர்களில் ஒருவர், பாபுராமநாதன். இவரது மகன் தனுஷ். இருவரும் கைதாகி சிறை சென்றவர்கள். பாபு ராமநாதனின் மனைவி மகேஸ்வரி கைதாகாமல் முன்ஜாமீன் பெற்றிருந்தார். ஆஸ்ட்ரோனிஸ் பிராப்பர்டிஸ் என்ற துணை நிறுவனத்தின் முக்கிய இயக்குநர்களாக பாபுராமநாதன் குடும்பம் இருந்து வந்தது. இந்நிலையில்தான், இவர்களுக்குச் சொந்தமான கிரீன் ராயல் ரிசார்ட்ஸ் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசால் அடையாளம் காணப்பட்டு அட்டாச் செய்வதற்கான நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆனால், வழக்கில் சிக்கிய இடைப்பட்ட இரண்டாண்டு காலத்தில் எந்த சிக்கலும் இல்லாமல் அந்த ரிசார்ட் இயங்கி வருகிறது. 21 அறைகளோடும், உள்ளேயே 3 நட்சத்திர ஹோட்டலோடும் மாதந்தோறும் இலட்சக்கணக்கான ரூபாய் இலாபம் ஈட்டி வரும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. ஜூபிடர் செல்வம் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மேலாளர்களாக இருந்து கொண்டு அந்த ரிசார்ட்டை நடத்தி வருகிறார்கள். இது எப்படி, சாத்தியம்? சொத்து நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானது? நியோமேக்ஸ் நிறுவனம் வழக்கில் சிக்கியிருக்கிறது. ஆனால், வருமானம் மட்டும் பாபு ராமநாதனுக்கா? என்ற கேள்வியை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் எழுப்புகிறார்கள்.

இதே பாணியில், கம்பம் செல்வக்குமார் மற்றும் பாபு ராமநாதன் ஆகியோருக்குச் சொந்தமான மேடோ வியூ இன் ரிசார்ட் இயங்கி வருவதை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் வீடியோ ஆதாரங்களுடன் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள். 14 அறைகளுடன் இயங்கிவருகிறது, அந்த ரிசார்ட்.
அடுத்து, கம்பம் செல்வக்குமார், பாபுராமநாதன் குடும்பத்தினர், தொட்டுசிக்கு, இளஞ்சி குருசாமி ஆகியோருக்கு சொந்தமான சூர்யா குழும நிறுவனங்களின் நிலை என்ன? சூர்யா ஹோட்டல் என்ற பெயர் அண்ணபூர்ணா ஹோட்டல் என்பதாக மாறி செயல்படுவதாக சொல்கிறார்கள்.
இதுதவிர, வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில் ஏகப்பட்ட சொத்துக்கள் முறைகேடான வகையில் கைமாறியிருக்கின்றன. பெரியகுளம் எண்-1, இணை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த செப்-09, 2021 இல் ஆவண எண்: 2325/2021 இன் படி, நியோமேக்ஸ் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் – தொட்டு சிக்கு பெயருக்கு மாறிய சொத்தின் தற்போதைய நிலை என்ன? ஆவண எண்:2999/2021 இன் படி குருசாமி பெயரில் எழுதி வாங்கிய கிரீன் ராயல் சிட்டி யின் நிலை என்ன?
தேனி மாவட்டம் அழகாபுரியை சேர்ந்த ஆர்.எச். சுந்தர்ராஜன் என்பவர் பெயரில் பெரியகுளம் சின்னமனூர் சப்டிவிசனில் ஆவண எண் 1714/2025 இன் படி 22.04.2025 அன்று பதிவான 482/5 என்ற சர்வே எண் கொண்ட 84 செண்ட் நிலத்தின் நிலை என்ன?
இவையெல்லாம், அடுத்தடுத்து கைமாறியிருக்கிறது. அதுவும் வழக்கில் சிக்கிய இடைப்பட்ட காலத்தில். இதுபோன்ற இடங்களையெல்லாம் கண்டறிந்து, அவற்றையும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் சொத்துப்பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.
— அங்குசம் புலனாய்வுக் குழு.