நியோமேக்ஸ் – புகார் கொடுத்தே ஆகனுமா ? நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?
நியோமேக்ஸ் – புகார் கொடுத்தே ஆகனுமா ? நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?
நியோமேக்ஸ் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு, இதுவரை வழங்கப்பட்ட பல்வேறு வாய்ப்புகளை தொடர்ந்து இறுதி வாய்ப்பாக அக்-08 ஆம் தேதியை நிர்ணயம் செய்திருக்கிறது, உயர்நீதிமன்றம்.
மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரிலோ, பதிவு அஞ்சல் வழியாகவோ, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்களும்கூட, மின்னஞ்சல் வழியாகவும் புகார் அளிக்கலாம் என்பதாகவும் வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது, நீதிமன்றம்.
இந்த வாய்ப்பையும் பயன்படுத்த தவறுபவர்கள், செட்டில்மெண்டை கோர முடியாது என்பதாகவும், கறார் காட்டியிருக்கிறார் வழக்கை விசாரித்து வரும் நீதியரசர் பரதசக்ரவர்த்தி.
நீதிமன்ற விசாரணையில் நடந்தது என்ன ?
செப்-19 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், நியோமேக்ஸ் தரப்பு உள்ளிட்டு பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அனைவரும், தீர்வு திட்டம் குறித்த தங்களது முன்மொழிவுகளை முன்வைக்குமாறு கோரியிருந்தார் நீதியரசர் பரதசக்ரவர்த்தி. அவரவர்கள் தங்களது கருத்துக்களை மட்டுமே முன்வைக்குமாறும் மற்றவர்களின் கருத்துக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டாமென்றும் கேட்டுக் கொண்ட நீதியரசர், அவ்வாறு மற்றவர்களின் கருத்துக்களை மறுத்து வாதிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில், எல்லோருமே தங்களது தீர்வுத் திட்டங்களை முன்வைத்தார்கள். அரசு தரப்பில், செட்டில்மெண்ட் தொடர்பான வெளியிடப்பட்ட அரசு ஆணைகள் 375 மற்று 377 இன் படி அதில் சுட்டிக்காட்டியுள்ளபடி அதிகாரிகளை தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமித்து செட்டில்மெண்ட் நடைமுறைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இந்த கருத்துக்கு பதில் அளித்த நீதியரசர், இந்த வழக்கில் அவ்வாறு கடைபிடிக்க முடியாது என்பதையும், இதற்கு முந்தைய முன் உதாரணங்கள் எதுவும் வெற்றிகரமாக அமையவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இது 5ஏ செட்டில்மெண்டா?
மேலும், இது 5ஏ செட்டில்மெண்டாகவும் அமையாது. வழக்கமான செட்டில்மெண்ட் முறையாகவும் அமையாது. இரண்டும் கலந்த கலவையான தீர்வுத் திட்டமாகவே அமைய முடியும் என்பதை வலியுறுத்தினார்.
நிலமாக தீர்வுத் திட்டங்களை செயல்படுத்தும்போது எதிர்கொள்ளும் நடைமுறை சிக்கல்கள் குறித்த விவாதத்தின்போது, வில்லங்கங்கள் இல்லாத சொத்துக்களை மட்டுமே பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு பதிவு செய்து கொடுக்க முடியும் என்றார்.
ஒரே நிலத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு செய்யும் நிலை ஏற்படும்போது, என்ன செய்வது என்ற கேள்விக்கு அரசு தரப்பு வழக்கறிஞர் முதலில் முதலீடு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பாண்டுகளின் வரிசைக்கிரமம் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார். நீதியரசரும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டார்.
ஒரே நேரத்தில் செட்டில்மெண்ட் :
அடுத்து, நிலமாக பெற விரும்புவர்களுக்கு உடனடி தீர்வு என்றோ, பணமாக பெற விரும்புவர்களுக்கு சொத்துக்களை ஏலம் விட்டு பணமாக்கிய பிறகுதான் தீர்வு என்றோ தனித்தனியாக நடைமுறைப்படுத்த முடியாது. நிலங்களை தேர்வு செய்யும் உரிமையை வழங்கி அவர்களின் விருப்பத்தை பதிவு செய்து கொள்வோம். மற்ற இடங்களை விற்று பணமாக்கி அதன்பிறகு இரு தரப்புக்கும் அதாவது பணமாக பெற விருப்பம் தெரிவித்தவர்களுக்கும் நிலமாக தீர்வை பெற்றுக் கொள்ள முன் வந்தவர்களுக்கும் ஒரே நேரத்தில்தான் செட்டில்மெண்ட் நடக்கும் என்பதையும் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.
நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சாதகமான உத்தரவுகளை பெற்றுள்ள ஆஸ்ட்ரோனியோ நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் தற்போதைய தீர்வுத் திட்டத்தில் இணைய விரும்பினால், அவசியம் புகார் அளிக்க வேண்டும் என்றார்.
புகார் அளிக்க இதுவே இறுதி வாய்ப்பு :
இதுவரை புகார் அளிக்காதவர்களும் இன்னும் இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் இந்த தீர்வுத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தை அணுக வாய்ப்பு இருப்பதை அரசு தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டியதையடுத்து, போதுமான வாய்ப்புகள் வழங்கியிருந்தும் புகார் அளிக்காதவர்களை ஒன்றும் செய்யமுடியாது என்றவர், எதற்கும் இறுதி வாய்ப்பாக 15 நாட்கள் புகார் அளிப்பதற்கான அவகாசம் வழங்கியிருக்கிறார். அதன்படி, அக்-08 ஆம் தேதிக்குகள் புகார்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தியிருக்கிறார். இந்த அறிவிப்பும் கூட, சென்றமுறை போல விளம்பரமாக அல்லாமல், ஊடகங்கள் வாயிலாக செய்தியாக வெளியிட செய்தியறிக்கை அனுப்பி வைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.
எல்லோரையும் சமமாகத்தான் அணுக முடியும் :
பார்ட்டி இன் பெர்சனாக நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் ஒருவர் தான் மட்டுமே ஒரு கோடி முதலீடு செய்திருப்பதாகவும்; தனது நண்பர்கள் உறவினர்களிடத்தில் கடனாகப் பெற்று மேலும் ஒரு கோடி அளவுக்கு முதலீடு செய்திருப்பதாகவும் தெரிவித்தவர், அந்த முதலீடுகளுக்காக இதுவரை எந்த பலன் தொகைகளையும் பெற்றதேயில்லை என்றார். ஆகவே, தன்னை போல அடிபட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார். அந்தக் கோரிக்கையை பரிசீலித்த நீதியரசர் பரதசக்ரவர்த்தி, நீதிமன்றத்தைப் பொறுத்தமட்டில் அவ்வாறு முதலீட்டாளர்களை வகைப்படுத்தி பார்ப்பது சாத்தியமற்றது. எல்லோரையும் சமமாகத்தான் அணுக முடியும் என்பதை பதிலாக தந்தார்.
மிக முக்கியமாக, இதுபோன்ற ஆபத்தான முதலீடுகளில் அவர்கள் சொல்லும் கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பி முதலீடு செய்து விட்டு, தற்போது இதுபோன்ற கோரிக்கைகளை முன்வைக்கிறீர்கள். இதிலும் மீண்டும் இலாபம் பார்க்க நினைக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார்.
ஏலம் விட்டு கிடைக்கும் பணம் முழுவதையும் தீர்வு திட்டத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றவர், கண்டிப்பாக கம்பெனி தரப்புக்கு திரும்பக் கொடுக்க வாய்ப்பில்லை என்றார்.
இதுவரையில் 24, 583 பேர்கள் புகார் அளித்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து 57, 225 பாண்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றின் மதிப்பு சுமார், 2317 கோடிகள். 16 மாவட்டங்களில் முதற்கட்டமாக மதிப்பீடு செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 2429 கோடியாக அமைந்திருக்கிறது.
நியோமேக்ஸ் – புகார் கொடுத்தே ஆகனுமா ? நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?
முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் அதிருப்திகள் :
இந்த பின்னணியில், தற்போதைய நீதிமன்றத்தின் நடவடிக்கை குறிப்பாக மீண்டும் புகார் அளிப்பதற்கான வாய்ப்பு கொடுத்திருப்பது வழக்கை மேலும் இழுத்தடிக்கும் செயல் என்றும்; அதற்கேற்ப மீண்டும் நிலங்களை கண்டறிந்து மீண்டும் அவற்றை மதிப்பீடு செய்து அதன்பிறகு தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய சூழல் என்பது கால தாமதத்தை ஏற்படுத்தும் என்பதாக முதலீட்டாளர்கள் தரப்பில் ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.
நீதிமன்றத்தின் அணுகுமுறை தங்களுக்கு அசல் மட்டுமே கிடைக்கும் என்பதாக தெரிவித்திருக்கிறது. வெறும் அசலை மட்டுமே திரும்பப் பெறுவதற்காகவா? இரண்டு ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்தோம்? என்பதாக மற்றொரு தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
நியோமேக்ஸ் நிறுவனம் முதலீட்டை ஈர்த்த சமயத்தில் சொன்ன வாக்குறுதிகளின் அடிப்படையில் முழு முதிர்வுத்தொகையுடன் தீர்வு வேண்டும் என்றும்; குறைந்தபட்சம் சகாரா வழக்கில் கையாளப்பட்டதைப்போல 16% வட்டியுடனாவது தீர்வுத்திட்டம் கணக்கிடப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைக்கிறார்கள்.
இருதரப்பும் ஒப்புக்கொள்கிற சமரச முயற்சி :
இதுபோன்ற கோரிக்கைகளால்தான், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் ஐநூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன என்பதை சுட்டிக்காட்டிய நீதியரசர், குறைந்தபட்சம் முதலீடு செய்த அசல் பணத்தையாவது உடனடியாக பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு திருப்பித்தரவே இந்த நீதிமன்றம் விரும்புகிறது என்பதாக தெரிவித்தார். மேலும், ஒரு சேவை மனப்பான்மையுடனே இந்த விவகாரத்தை தான் அணுகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

மிக முக்கியமாக, இது வழக்கை நடத்துவதற்கான நீதிமன்றம் அல்ல. இங்கே பல விசயங்களை முழுமையாக விவாதிக்கவும் இயலாது. இருதரப்பும் ஒப்புக்கொள்கிற சமரச முயற்சியாகவே இத்திட்டத்தை செயல்படுத்த விரும்புகிறோம். இதில் உடன்படுபவர்கள் இங்கே தீர்வை பெற்றுக் கொள்ளலாம். விருப்பம் இல்லாதவர்கள், டான்பிட் நீதிமன்றத்தில் தாராளமாக வழக்கை எதிர்கொண்டு அவர்கள் விரும்பும் தீர்வை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார். இத்தீர்வு திட்டத்தில் இடம்பெற புகார் அளித்திருப்பது கட்டாயம் என்பதோடு, அக்-08 ஆம் தேதி வரையில் வழங்கப்படும் அவகாசமே இறுதியான வாய்ப்பு என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் நீதியரசர் பரதசக்ரவர்த்தி.
எப்படி புகார் அளிப்பது?
மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகத்தில் அலுவல் நேரத்தில் வேலை நாட்களில், உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று புகார் அளிக்கலாம்.
என்ன ஆவணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்?
முதலீட்டாளர்களின் ஆதார் அட்டை. முதலீடு செய்த பாண்டுகளின் நகல். ஏஜெண்டுகள் பற்றிய விவரங்கள், அவர்களின் தொலைபேசி எண்களை குறிப்பிட்டு விரிவான புகார் கடிதம். இடைப்பட்ட காலத்தில் நியோமேக்ஸ் வழங்கியிருந்த ரசீதுகள், அல்லது வேறு வகையான ஆவணங்கள் எது இருந்தாலும் அவற்றுடன் செல்ல வேண்டும்.
ஒரே குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பலரின் பெயரில் பாண்டுகள் வைத்திருப்பவர்கள் என்ன செய்வது?
பொதுவாக முதலீடுகள், தாய், தந்தையர் தங்களது பெயரில் சில முதலீடுகளை செய்திருந்தாலும் தங்களது பிள்ளைகள் பெயரிலும் முதலீடு செய்திருக்கிறார்கள். அதுபோன்று உள்ளவர்கள், தங்களது குடும்பத்தின் சார்பில் ஒருவர், மற்ற அனைத்து பாண்டுகளையும் குறிப்பிட்டு புகார் அளிக்கலாம்.
கண்டிப்பாக நேரில்தான் புகார் அளிக்க வேண்டுமா?
வாய்ப்புள்ளவர்கள் நேரில் சென்று புகார் அளிப்பது பாதுகாப்பானது. உத்தரவாதமானது. அதேசமயம், வயது முதிர்ந்தவர்கள் மூத்த குடிமக்கள் அவ்வளவு தொலைவு பயணம் செய்ய முடியாதவர்கள், போதுமான ஆவணங்களுடன் முழுமையான புகார் கடிதத்தோடு பதிவுத் தபாலிலும் புகார்களை அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல் வழியாகவும் புகார்களை அனுப்பி வைக்கலாம். ஆனால், போதுமான ஆவணங்களை இணைத்திருப்பது கட்டாயம். உங்களை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண் பதிவு செய்திருப்பது அவசியம்.
வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் புகார் அளிக்க முடியுமா?
கண்டிப்பாக முடியும். இவர்களையும் இத்தீர்வு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில்தான், மின்னஞ்சல் வழியாக புகார் அளிப்பதற்கான வாய்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஆக, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யார் ஒருவரும் போதுமான ஆதாரங்களுடன் உரிய புகார் கடிதத்தோடு மின்னஞ்சல் வழியாகவே எளிதாக புகார் அளிக்க முடியும்.
புகார் அளிப்பதற்கான முழுமையான அஞ்சல் முகவரி :
சிறப்பு விசாரணை அதிகாரி – (நியோமேக்ஸ்),
பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகம்,
க.எண் 4/425A,
சங்கரபாண்டியன் நகர்,
பார்க் டவுன்,
தபால்தந்தி நகர் விரிவாக்கம்,
மதுரை- 6250017.
மின்னஞ்சல் முகவரி :
Eowmadurai2@gmail.com
— அங்குசம் புலனாய்வுக்குழு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.