நியோமேக்ஸ் : புகார்தாரர்களின் பட்டியலை வெளியிட்ட EOW போலீசார் !
நியோமேக்ஸ் : புகார்தாரர்களின் பட்டியலை வெளியிட்ட EOW போலீசார் ! மதுரையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவந்த நியோமேக்ஸ் மோசடி தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவின்படி புகார்தாரர்களின் பட்டியலை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.
நியோமேக்ஸ் மற்றும் அதன் 42 துணை நிறுவனங்கள் மீதான மோசடி புகார் மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் இருந்து வருகிறது.
முதல் தகவல் அறிக்கை எண்: 3/2023 இன் படி வழக்கு பதிவு செய்திருப்பதோடு, தலைமையிடத்து எஸ்.பி.யாக பணியாற்றி வந்த டி.எஸ்.பி. மனிஷா நியோமேக்ஸ் வழக்கில் சிறப்பு விசாரணை அதிகாரியாக புலன்விசாரணை நடத்தி வருகிறார்.
நியோமேக்ஸ் தொடர்பான நீதிமன்ற வழக்கு ஒன்றில், சென்னை மதுரைக்கிளை நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி, மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாருக்கு சில வழிகாட்டுதல்களுடன் தீர்ப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதன்படி, நவ-05 ஆம் தேதி பொது அறிவிப்பை வெளியிட வேண்டும்; நவ-05 முதல் நவ-15 ஆம் தேதி வரையில் முதலீட்டாளர்களிடமிருந்து புகார்களை பெற வேண்டும்;
நவ-16 ஆம் தேதியிலிருந்து டிச-05 வரையில் அப்புகார்களை ஆய்வு செய்து, டிச-06 ஆம் தேதி இறுதி செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் பட்டியலை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் இணையதளத்தில் வெளியிட வேண்டும்; டிச-06 முதல் டிச-10ஆம் தேதி வரையில் ஆட்சேபணை இருப்பின் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்ய வேண்டும்; டிச-16 ஆம் தேதி அன்று இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்; டிச-18 ஆம் தேதி வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் என்பதாக நீதிமன்றத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தீர்ப்பின் அடிப்படையில், நவ-04 ஆம் தேதியன்று தமிழில் தினத்தந்தி மற்றும் ஆங்கிலத்தில் தி இந்து செய்தித்தாளிலும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் விளம்பரத்தை வெளியிட்டிருந்தார்கள். டிச-15 ஆம் தேதி வரையில் நேரிலும் தபால் மூலமாகவும் பெறப்பட்ட புகார்களை ஆய்வு செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி டிச-06 அன்று வெளியாகியிருக்க வேண்டிய பட்டியலை ஒருநாள் தாமதமாக டிச-07 அன்று பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். இந்த தாமதம்கூட, தலைமையிடத்தில் தொழில்நுட்பக் காரணங்களாலேயே ஆனதாக சொல்கிறார்கள்.
நாளொன்றுக்கு நேரிலும் தபாலிலும் சராசரியாக 500-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்த நிலையில், இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படி ஒரு பட்டியலை வெளியிட்டிருப்பதே முதலில் வரவேற்கத்தக்க ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஒன்று போனால் மற்றொன்று என்பதாக, உண்மையில் திருகுத்தலைவலி போன்றுதான், நாளும் புதிய திருப்பங்களை கொண்டதாக மாறியிருக்கிறது நியோமேக்ஸ் வழக்கு விவகாரம்.
இந்த வழக்கின் சிறப்பு விசாரணை அதிகாரியாக, பதவியேற்ற நாள் முதலாகவே சவால் நிறைந்த வழக்குகளில் ஒன்றாகவே கருதி, தனிப்பட்ட உடல்நல பாதிப்புகளையும் கடந்து தன்னால் முடிந்த சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார் டி.எஸ்.பி. மனிஷா.
தனக்கு கீழ் பணியாற்றும் மிக சொற்பமான போலீசார் மற்றும் நீதிமன்ற உத்தரவின்படி அயல்பணி அடிப்படையில் ஒதுக்கியிருந்த பிற துறை அலுவலர்களைக் கொண்டு, நீதிமன்ற தீர்ப்பின் படி வெளியிட வேண்டிய தேதிக்கு ஒருநாள் முன்னதாகவே அனைத்துப் பணிகளையும் முடித்திருக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்க அம்சமாகவே கருத வேண்டியிருக்கிறது.
https://tneow.org.in என்ற இணையதளத்தில் பட்டியல் வெளியாகியிருக்கிறது. மொத்த முதலீட்டாளர்களின் பெயர் மற்றும் முதலீட்டு தொகை விவரங்களுடன் பிடிஎஃப் பார்மேட்டில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், 10 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதைப்போல, தனிப்பட்ட முதலீட்டாளர்கள் மட்டுமே விவரங்களை பார்வையிட முடியும் என்ற வகையில் வரம்பிட்டிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக, மேற்படி இணையத்தில் தகவலை சரிபார்க்க விரும்பும் நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தங்களது தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகிய இரண்டையும் பதிவு செய்து தனிப்பட்ட பயனர் கணக்கை உருவாக்கிய பிறகே, உள் நுழைய முடியும். இது எல்லா முதலீட்டாளர்களுக்கும் சாத்தியமா? என்பது கேள்விக்குறியே.
மேலும், அவ்வாறு புதிய கணக்கை பதிவு செய்து கொண்டு உள் நுழைந்தால், புகார் அளித்த முதலீட்டாளர்களின் தொலைபேசி எண் பதிவை கொண்டு மட்டுமே விவரங்களை சரிபார்க்க முடியும் என்பதாகவும் வடிவமைத்திருக்கிறார்கள். நாமும் நமக்குத் தெரிந்த புகார்தாரர் ஒருவரின் தொலைபேசி எண்ணை உள்ளிட்டு விவரங்களை சரிபார்த்தோம்.
அவர் நியோமேக்ஸில் முதலீடு செய்திருப்பது, ஒரு கோடியே இருபது இலட்சத்து சொச்சம். அவரது பெயரில் மட்டுமே 10-க்கும் மேற்பட்ட பாண்டுகளை கைவசம் வைத்திருக்கிறார். அவரது மனைவி பெயரிலும் முதலீடு செய்திருக்கிறார். இரண்டு பெயரில் அளிக்கப்பட்ட புகார்மனுவிலும் ஒரே கைப்பேசி எண்ணை மட்டுமே பதிவு செய்திருக்கிறார். ஆக 15-க்கும் அதிகமான பாண்டுகள்; அந்த பாண்டுகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கஸ்டமர் ஐ.டி. கொண்டதாக இருக்கிறது. அப்படி இருக்கையில், முதல் பாண்டில் உள்ள கஸ்டமர் ஐ.டி.யை மட்டும் குறிப்பிட்டு அவரது முதலீடு வெறும் ஐந்து இலட்சம்தான் என்பதாகவே பதிவாகியிருக்கிறது.
எவர் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில், முதலீட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிடக்கூடாது என்ற நியதியின் அடிப்படையில், கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தால் மட்டுமே உள் நுழைய முடியும் என்பதாக வடிவமைத்திருப்பதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால், ஒரே முதலீட்டாளர்களிடம் ஒவ்வொரு பாண்டிற்கும் ஒவ்வொரு கஸ்டமர் ஐ.டி. இருக்கும் நிலையில், கஸ்டமர் ஐ.டி.யை உள்ளீடு செய்து விவரங்களை சரிபார்க்கும் வகையில் வடிவமைத்திருக்கலாம். அல்லது, ஒரே புகார்தாரரின் மொத்த முதலீட்டையும் ஒரே பக்கத்தில் தோன்றும் வகையிலாவது வடிவமைத்திருக்க வேண்டும். இந்தக் குறைபாடு, நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சாதமாக, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் கணக்கை குறைத்து காட்டுவதற்காக இப்படி செய்துவிட்டார்களோ என்ற தேவையற்ற சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில்தான் அமைந்திருக்கிறது.
இதில், கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் நாம் குறிப்பிட்டு சொன்னது போல, சம்பந்தபட்ட முதலீட்டாளர் நியோமேக்ஸில் முதலீடு செய்தது 1 கோடியே இருபது இலட்சத்து சொச்சம். தற்போது இணையத்தில் காண்பித்திருப்பது வெறும் ஐந்து இலட்சம். அவரது கைப்பேசி எண்ணில்தான் அவரது மனைவிக்குமான புகாரையும் பதிவு செய்திருந்தார்.
அவரது மனைவியின் பதிவையும், அவரது விடுபட்ட மற்ற முதலீட்டு விவரங்களையும் அவர் சரிபார்ப்பது எப்படி? அதற்கான வழிமுறை என்ன? அடுத்து அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும், அதே இணைய தள பக்கத்தின் வழியாகவே, தெளிவான தகவலை பதிவு செய்ய வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.
இணையத்தில் பதிவு செய்து தகவல்களை சரிபார்ப்பது எப்படி?
1. https://tneow.org.in இணைய பக்கத்தில் செல்க.
2. திரையில் ஸ்க்ரோல் முறையில் தோன்றும் “Madurai EOW crime.no 3/2023Neomax Case Complaint Status” என்ற ஆப்சனை கிளிக் செய்து, Sign Up ஆப்சனை தேர்ந்தெடுத்து உள்நுழைய வேண்டும்.
3. இதனைத் தொடர்ந்து தோன்றும் திரையில், பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பாஸ்வேர்டு (நீங்களே செட் செய்து கொள்ள வேண்டியது) ஆகிய விவரங்களை பதிவு செய்து Register பொத்தானை அழுத்த வேண்டும். இப்போது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு OTP வந்துசேரும். அந்த OTP -ஐ உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ள வேண்டும். (* OTP இன்பாக்ஸ்-இல் வரவில்லை என்றால், spam – இல் இருக்கிறதா, என்பதை ஒருமுறை பார்த்துக் கொள்ளுங்கள்.)
4. தற்போது மீண்டும், திரையில் ஸ்க்ரோல் முறையில் தோன்றும் “Madurai EOW crime.no 3/2023Neomax Case Complaint Status” என்ற ஆப்சனை கிளிக் செய்து, login ஆப்சனை தேர்வு செய்து முந்தைய கட்டத்தில் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரி மற்றும் பாஸ்வேர்டை மட்டும் உள்ளீடு செய்ய வேண்டும்.
5. தற்போது திரையில் “Enter Petitioner Mobile Number” என்பதாகவும் அதன் கீழே மொபைல் எண்ணை பதிவிடுவதற்கான இடமும் அதனைத் தொடர்ந்து Submit என்ற பொத்தானும் இடம்பெற்றிருக்கும். இதில் மொபைல் எண்ணை பதிவு செய்து Submit கொடுத்தால், உங்களது புகார் பற்றிய விவரம் திரையில் தோன்றும்.
6. நிறைவாக, அதன் இறுதி பகுதியில் Print என்ற ஆப்சனை பயன்படுத்தி பி.டி.எஃப். கோப்பாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.
Neomax case complaint. In the new website, I am unable to register my name. Upto OTP stage reached and then entered my OTP received through my spam message to my mobile number. Thereafter no message regarding registration is successful is received. If I attempt login button to proceed further, the website is not working or responding properly. Due to this technical error, I am unable to see my particular as an investor in Neomax company
niyomax
hiii
Very good
Paisa varanum
Pl publish my email address