உயிரைப் பறித்த நியோமேக்ஸ்!
நியோமேக்ஸால் தன் கணவரை இழந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நடுத்தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் கம்பம் ஜெனித்தாவின் அவலக்குரல் அவரைப்போலவே, நான்கு சுவற்றுக்குள்ளாகவே கேட்பாரற்று முடங்கிக்கிடக்கிறது.
உயிரைப் பறித்த நியோமேக்ஸ்!
நியோமேக்ஸ் நிறுவனத்தில் பணத்தை இழந்தவர்களின் பரிதாபக் கதைகளைதான் இதுநாள் வரை கேள்விபட்டிருக்கிறோம். நியோமேக்ஸால் தன் கணவரை இழந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் நிர்க்கதியாக நடுத்தெருவில் நிறுத்தப்பட்டிருக்கும் கம்பம் ஜெனித்தாவின் அவலக்குரல் அவரைப்போலவே, நான்கு சுவற்றுக்குள்ளாகவே கேட்பாரற்று முடங்கிக்கிடக்கிறது.
ஜெனித்தாவின் கணவர் சிவக்குமார். பொறியியல் பட்டதாரியான அவர், பல்வேறு இடங்களில் பல்வேறு வேலைகளில் இருந்து பின்னர் நியோமேக்ஸ் நிறுவனம் பற்றி அறிந்து அன்றிலிருந்து நியோமேக்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவே உளப்பூர்வமாக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வர்களுள் அவரும் ஒருவர். அந்நிறுவனத்தின் பல்வேறு படிநிலைகளை கடந்து, சிபி என்றழைக்கப்படும் ”சென்டர் ஹெட்” ஆக பணியாற்றியவர். நியோமேக்ஸ் நிறுவனத்துடன் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக பயணித்தவர் சிவக்குமார். மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஜெனித்தாவை திருமணம் செய்திருக்கிறார். தற்போது, இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறார். இந்நிலையில்தான், கடந்த பிப்-25 ஆம் தேதியன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார் சிவக்குமார்.
”குடும்ப பிரச்சினையால்தான் என் புருஷன் தூக்கு போட்டுகிட்டாருனு சொல்றாங்க. எங்க குடும்பத்துல எந்த பிரச்சினையுமே இல்லை. நியோமேக்ஸ் நிறுவனத்தில் என் புருஷன் ஏஜெண்டா இருந்தாரு. பூர்வீகமாக இருந்த இரண்டு வீடுகளை விற்றும் அவருடைய சம்பாத்தியத்தை சேர்த்தும் 54 இலட்ச ரூபாயை நியோமேக்ஸில் முதலீடு செய்திருந்தாரு. எங்க அம்மா 3 இலட்சம், எங்க சித்தி 3.5 இலட்சம்னு எங்க சொந்தக் காரங்களையும் இதுல சேர்த்து விட்டிருக்கோம். ஏஜெண்டுங்குற முறையில எங்க வீட்டுக் காரரும் நிறைய பேரை நியோமேக்ஸில் சேர்த்து விட்டாரு.
எனக்குத் தெரிஞ்சு ஒரு வருஷமாகவே பிரச்சினை போயிட்டு இருந்துச்சி. முறையா வட்டிப் பணம் கொடுக்க முடியல. அவரும் நியோமேக்ஸ் எம்.டி. பாலு சாரையெல்லாம் பார்த்து பேசிட்டுதான் வந்தாரு. ஒரு கட்டத்துல எங்க நகைய அடகு வச்சி, எங்கள நம்பி நியோமேக்ஸ்ல முதலீடு செஞ்சவங்களுக்கு வட்டிப்பணத்தை கொடுத்தாரு. அடுத்து அடகு வச்சி கொடுக்க எங்ககிட்ட நகைங்க இல்ல. பிப்-25 ஆம் தேதி வட்டிப்பணம் கொடுக்கனும்னு சொல்லிகிட்டு இருந்தாரு. அதுக்காக பணத்துக்கு அலைஞ்சிட்டு இருந்தாரு. கடைசியா, பிப்-24 ஆம் தேதி தூக்கு மாட்டி செத்துட்டாரு.. நியோமேக்ஸாலதான் எம்புருசன் செத்தாரு.. ஆனா அவரு செத்தப்போ நியோமேக்ஸ் கம்பெனி காரங்க யாருமே கூட நிக்கலை”னு உடைந்து அழுகிறார் ஜெனித்தா.
”போட்ட பணத்தை கொடுனு வீட்டு வாசல்ல நின்னு எவனும் கேட்கிற நிலைமை வந்துட கூடாது. அதுக்கு பதிலா தூக்கு மாட்டி செத்திடலாம்னு சொல்லுவாரு. எனக்கு தெரிஞ்சு எப்படியும் ரெண்டு கோடி ரூபாய்க்கு மேல வசூல் பண்ணி கொடுத்திருக்காரு. வட்டிப்பணமே மாசத்துக்கு மூனு – நாலு லட்சம் கொடுக்கிற மாதிரி இருக்கும். அவரால முடிஞ்ச மட்டும் சமாளிச்சாரு. முடியாத கட்டத்துல இப்படி செஞ்சிகிட்டாரு. அவர் சாவுக்கு நியோமேக்ஸ்தான் காரணம். எவ்வளவு நல்லது கெட்டதுக்குனு அவரே முன்ன நின்னு செஞ்சிருக்காரு. ஆனா, அவரோட சாவுக்கு அஞ்சு மாலைக்கு மேல வரலைனு நினைக்கிறப்போ எனக்கே ரொம்ப வேதனையாத்தான் இருந்துச்சு” என்கிறார், சிவக்குமாரின் நெருங்கிய நண்பரும் அவருடன் நியோமேக்ஸ் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியவருமான ராயர்.
“சிவக்குமார் எனக்கு பள்ளிக்கூட நண்பன். அவனை நம்பித்தான் 15 இலட்சம் முதலீடு செஞ்சேன். ரெண்டு வருஷமாக வட்டிப்பணம் வரலை. நியோமேக்ஸ் நிறுவனம் ஒன்வே மாதிரி. பணம் போட்டா வாங்கிப்பாங்க. வாங்கிக் கொடுத்த ஏஜெண்டுக்குக்கூட திருப்பித் தரமாட்டாங்க. பணம் வாங்கி கொடுத்தவங்களுக்கு மாசா மாசா வட்டிப்பணம் கொடுக்கனும்னு கேட்டா கூட, புதுசா ஆளைப்பிடிங்க. பிசினஸ் பண்ணுங்க. அதில இருந்து வட்டி காச கழிச்சிட்டு மிச்சத்தை கம்பெனில கட்டுங்கனு சொல்வாங்க. ஒரு கட்டத்துல பிசினஸே பண்ண முடியல. ஆனா, வட்டிப்பணம் கொடுத்தாகனும். சிவக்குமார் நகைய அடகு வச்சி கொடுத்தாரு. பிறகு கம்பெனியில வாங்கிக்கிலாம்னு. அதனால, அவர ஏன் சிரமபடுத்தனும்னுதான் வட்டிப்பணம் வாங்கிறத விட்டுட்டேன். கம்பெனில என்னைக்கு தாராங்களோ அப்போ கொடுங்கனு சொல்லிட்டேன்.” என்கிறார் ராயர். தற்போது, 15 இலட்சத்திற்கு வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்பதோடு, கைவசமிருந்த சொந்தக் காரையும் இழந்து வாடகை ஓட்டுநராக வாழ்க்கையை ஓட்டி வருகிறார் ராயர்.
”டியூசன் நடத்தி பிழைப்பை ஓட்டிட்டு இருக்கிறேன். ஏதோ எங்க அம்மா வீட்ல சப்போர்ட்டா இருக்கிறதால என் காலம் ஓடுது. கார், பங்களானு வாழ்ந்துட்டிருந்தோம். இப்போ, மாசம் 3000 வருமானத்தை வச்சிகிட்டு ரேஷன் அரிசிய சமைச்சி சாப்பிட்டிட்டு இருக்கோம். இந்த நிலைமையிலயும் நியோமேக்ஸ் நிறுவனம் எங்களுக்கு ஒத்த ரூபா கொடுத்து உதவல”னு வேதனையோடு விவரிக்கிறார், ஜெனித்தா. அவரை தேற்றுவதற்குத்தான் வார்த்தைகள் இல்லை நம்மிடம்.
-வே.தினகரன்