நியோமேக்ஸ் – அக்-08 தான் கடைசி வாய்ப்பு ! புகார் அளிப்பது எப்படி ?
நியோமேக்ஸ் – புகார் அளிப்பது எப்படி ? அங்குசம் !
நீதியரசர் பரதசக்ரவர்த்தி முன்பாக நடைபெற்று வரும் நியோமேக்ஸ் மோசடி வழக்கில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் புகார் அளிப்பதற்கான இறுதி வாய்ப்பாக அக்-08 தேதி என்பதாக கறார் காட்டியிருக்கிறது நீதிமன்றம்.
இது தொடர்பாக, விரிவான செய்திக்குறிப்பு ஒன்றை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் வெளியிட்டிருக்கிறார்கள். அதில், நியோமேக்ஸ் மற்றும் அதன் 44 துணை நிறுவனங்களில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டு இதுவரை மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு குற்ற எண்: 3/2023 சம்பந்தபட்ட வழக்கில் இதுவரை புகாரளிக்காத முதலீட்டாளர்கள் யாரேனும் இருப்பின் வருகின்ற 08.10.2025 ஆம் தேதிக்குள் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு நேரிலோ, தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ உரிய ஆவணங்களுடன் புகார் அளிக்குமாறு தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் வெளிநாட்டிலோ அல்லது தொலைவிலோ இருப்பின் மின்னஞ்சல் முகவரிக்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்பதாகவும் தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.
மிக முக்கியமாக, 08.10.2025 ஆம் தேதிக்கு பின் கொடுக்கப்படும் புகார்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்றும் அதில் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், எப்படி புகார் அளிப்பது? எங்கு புகார் அளிப்பது? எந்த முகவரிக்கு அனுப்பி வைப்பது? எந்த பார்மேட்டில் அனுப்பி வைப்பது என்பது குறித்து பல்வேறு சந்தேகங்களை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் எழுப்பி வருகிறார்கள். நமது அங்குசம் அலுவலக தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்கிறார்கள்.
எப்படி புகார் அளிப்பது ?
வாய்ப்புள்ளவர்கள், மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு அலுவலகத்தில், வேலை நாட்களில், அலுவல் நேரத்தில் உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று புகார் அளிக்கலாம். தபால் வழியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் புகார் அளிக்கலாம்.

கண்டிப்பாக நேரில்தான் புகார் அளிக்க வேண்டுமா ?
வாய்ப்புள்ளவர்கள் நேரில் சென்று புகார் அளிப்பது பாதுகாப்பானது. உத்தரவாதமானது. அதேசமயம், வயது முதிர்ந்தவர்கள் மூத்த குடிமக்கள் அவ்வளவு தொலைவு பயணம் செய்ய முடியாதவர்கள், தொலை தூரத்தில் இருப்பவர்கள் போதுமான ஆவணங்களுடன் முழுமையான புகார் கடிதத்தோடு பதிவுத் தபாலிலும் புகார்களை அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சல் வழியாகவும் புகார்களை அனுப்பி வைக்கலாம். ஆனால், போதுமான ஆவணங்களை இணைத்திருப்பது கட்டாயம். உங்களை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண் பதிவு செய்திருப்பது அவசியம்.

வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் வசிப்பவர்கள் புகார் அளிக்க முடியுமா?
கண்டிப்பாக முடியும். இவர்களையும் இத்தீர்வு திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில்தான், மின்னஞ்சல் வழியாக புகார் அளிப்பதற்கான வாய்ப்பை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. ஆக, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யார் ஒருவரும் போதுமான ஆதாரங்களுடன் உரிய புகார் கடிதத்தோடு மின்னஞ்சல் வழியாகவே எளிதாக புகார் அளிக்க முடியும்.
என்ன ஆவணங்கள் எடுத்துச் செல்ல வேண்டும்?
முதலீட்டாளர்களின் ஆதார் அட்டை. முதலீடு செய்த பாண்டுகளின் நகல். ஏஜெண்டுகள் பற்றிய விவரங்கள், அவர்களின் தொலைபேசி எண்களை குறிப்பிட்டு விரிவான புகார் கடிதம். இடைப்பட்ட காலத்தில் நியோமேக்ஸ் வழங்கியிருந்த ரசீதுகள், அல்லது வேறு வகையான ஆவணங்கள் எது இருந்தாலும் அவற்றுடன் செல்ல வேண்டும்.
நேரில் செல்பவர்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு அலுவலகம் அல்லது அருகாமையில் உள்ள ஜெராக்ஸ் கடைகளில் கிடைக்கும் மாதிரி படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். அவசியம் விண்ணப்பத்தின் முகப்பு பக்கத்தில் உங்களுடை சமீபத்திய புகைப்படம் ஒன்றை ஒட்ட வேண்டும்.
தபால் வழியாக அல்லது மின்னஞ்சல் வழியாக விண்ணப்பிப்பவர்கள், முதலீட்டாளரின் பெயர், முழுமையான முகவரி, தொலைபேசி எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களுடன், முதலீடு செய்த நிறுவனத்தின் பெயர், பாண்டில் உள்ளதுபடி முதலீடு செய்த தேதி, பாண்டு எண், கஸ்டமர் ஐ.டி. , முதலீடு செய்த தொகை மற்றும் அறிமுகப்படுத்திய ஏஜெண்ட் பற்றிய விவரங்களை குறிப்பிட்டு அசல் பாண்டுகளின் நகலை இணைத்து அனுப்பி வைக்க வேண்டும்.
ஒரே குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பலரின் பெயரில் பாண்டுகள் வைத்திருப்பவர்கள் என்ன செய்வது?
பொதுவாக முதலீடுகள், தாய், தந்தையர் தங்களது பெயரில் சில முதலீடுகளை செய்திருந்தாலும் தங்களது பிள்ளைகள் பெயரிலும் முதலீடு செய்திருக்கிறார்கள். அதுபோன்று உள்ளவர்கள், தங்களது குடும்பத்தின் சார்பில் ஒருவர், மற்ற அனைத்து பாண்டுகளையும் குறிப்பிட்டு புகார் அளிக்கலாம். ஒரே ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் பெயரில் ஒரே புகாராக பதிவு செய்யலாம். ரேஷன் கார்டில் பெயர் இல்லாத குடும்ப உறுப்பினர்களின் புகாரை தனியாகத்தான் பதிவு செய்து வழங்க வேண்டும்.
அசல் பாண்டுகளை புகாரோடு இணைத்து அனுப்ப வேண்டுமா?
கண்டிப்பாக, கூடவே கூடாது. நேரில் புகார் அளிப்பவர்கள் அசல் பாண்டுகளை எடுத்து செல்வது நல்லது. போலீசார் அதனை ஒருமுறை பரிசோதித்துப் பார்க்க வாய்ப்பு இருக்கிறது. அப்போதே, போலீசார் ஒப்புகை ரசீது வழங்கும்பட்சத்தில் நேரில் ஒப்படைக்கலாம். மற்றபடி, புகாரின் போது ஒரிஜினல் பாண்டுகளை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தபாலில் அனுப்புவர்கள் ஒரிஜினல் பாண்டுகளை அனுப்பவும் தேவையில்லை. நகல் மட்டும் போதுமானது. புகாரை பெற்றுக்கொண்டதும், குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களை மீண்டும் போலீசார் அழைக்கும்போது அல்லது அதன் உண்மைத்தன்மையை நீதிமன்ற வழிகாட்டுதலில் பரிசோதனைக்குட்படுத்தும்போது சமர்ப்பித்தால் போதுமானது.
ஒரிஜினல் பாண்டுகளை, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரை தவிர வேறு யார் ஒருவரிடம் வழங்காதீர்கள். எச்சரிக்கை. பல இடங்களில், ஏஜெண்டுகளே புகார் அளிக்க உதவி செய்வது போல நடித்து, ஒரிஜினல் பாண்டுகளை ஏமாற்றி வாங்கிச் சென்றுவிட்டதாக பலர் புகார் அளித்திருக்கிறார்கள்.
புகார் அளிப்பதற்கான முழுமையான அஞ்சல் முகவரி :
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
பொருளாதாரக் குற்றப்பிரிவு,
நியோமேக்ஸ் சிறப்பு விசாரணைக் குழு,
க.எண் 4/425A,
சங்கரபாண்டியன் நகர்,
தபால்தந்தி நகர் விரிவாக்கம்,
பார்க் டவுன் பேருந்து நிலையம் அருகில்,
மதுரை- 6250017.
மின்னஞ்சல் முகவரி : eowmadurai2@gmail.com
நியோமேக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் :
நியோமேக்ஸ் மற்றும் கீழ்கண்ட அதன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பவர்கள் அனைவரும் புகார் அளிக்கலாம். இந்த பட்டியலில் இடம்பெறாத, நியோமேக்ஸின் துணை நிறுவனங்களில் முதலீடு செய்திருந்தாலும் புகார் அளிக்கலாம்.
1) Garlando Properties Pvt Ltd
2) Transco Properties Pvt Ltd
3) Trides Properties Pvt Ltd
4) Glowmax Properties Pvt Ltd
5) Neomax Realtors Properties Private Limited
6) Neomax Developers Private Limited
7) Centrio Properties Private Limited
8) Recario Properties Private Limited
9) Adventas Global Properties Private Limited
10) Explora Retail Private Limited
11) Safro Properties Private Limited
12) Adlandino Developers Private Limited
13) Lomy Properties Private Limited
14) Robaco Properties Private Limited
15) Libertas Properties Private Limited
16) Astonis Properties Private Limited
17) Milliona Developers Private Limited
18) Livpride Properties Private Limited
19) STCS Logistics Private Limited
20) Green Royale Retails Holdings Pvt. Ltd
21) Silvercorp Properties Pvt. Ltd
22) tedra global Properties Pvt Ltd
23) Livsmart Properties Pvt., Ltd
24) Ventura Developers India Pvt. Ltd
25) Auro Chits Pvt. Ltd
26) Green Wealth Agro India Ltd
27) Amaze Properties India Ltd
28) Neomax Promoters Pvt Ltd
29) CaptivaMagnificio Properties Pvt Ltd
30) Promax Promoters Pvt Ltd
31) South Field Properties Pvt Ltd
32) Safro Realty Pvt Ltd
33) Astronio Properties Pvt Ltd
34) Exubera Retail Pvt Ltd
35) Leoneo Properties Pvt.Ltd
36) Western Valley Properties Pvt Ltd
37) Tetra Global Properties Pvt. Ltd
38) Glenmax Properties Pvt Ltd
39) Neosco Developers Pvt Ltd
40) Sanspolo Properties Pvt Ltd
41) Zeneca Developers Pvt Ltd
42) Skylaa Retail Mall Pvt Ltd
— அங்குசம் புலனாய்வுக்குழு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.