நியோமேக்ஸ் : பரிதவிப்பில் முதலீட்டாளர்கள் ! கார் பங்களாவோடு சொகுசு வாழ்க்கையில் ஏஜெண்டுகள் !
நியோமேக்ஸ் மோசடி வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து ஓராண்டை கடந்துவிட்டது. உள்ளே, வெளியே ஆட்டம் போல, அம்மோசடி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் அடையாளம் காணப்பட்டு அடுத்தடுத்து கைது செய்யப்படுவதும் கைது செய்யப்பட்டவர்கள் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி பிணையில் வெளியில் வந்து சொகுசு வாழ்க்கை வாழ்வதுமாக வழக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது.
நியோமேக்ஸில் கிட்டத்தட்ட மூன்றரை இலட்சம் பேர் வரையில் முதலீடு செய்திருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படும் நிலையில், இதுவரை 8000-க்கும் அதிகமான புகார்களே வரப்பெற்றிருக்கின்றன. எஞ்சியவர்கள் இன்னும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் நம்பகமான வார்த்தைகளை நம்பி புகார்கூட கொடுக்க முன்வராத நிலையில்தான் இருந்து வருகிறார்கள். அதிலும் சிலர், புகார் என்று போனால் கோர்ட் கேசு என்று அலைய வேண்டி வரும். பணத்தைத் திரும்பப் பெறுவதில் காலதாமதம் ஆகும் என்றெண்ணியே, புகார் கொடுக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.
நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவாகி, முன்னணி இயக்குநர்கள் கைதாகி, அதன் சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு அடுத்தடுத்து அவையெல்லாம் கைப்பற்றப்பட்டு வரும் நிலையிலும்கூட, பினாமி பெயர்களில் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை ஓசையின்றி விற்று வருகிறார்கள் என்பதாக ஆதாரப்பூர்வமாக குற்றஞ்சாட்டி வருகிறார்கள், நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள்.
மேலும், அதன் முன்னணி இயக்குநர்கள் உள்ளிட்டு, முக்கியப் பொறுப்புகளில் அமர்த்தப்பட்ட முன்னணி ஏஜெண்டுகள் இன்றளவும் அத்தகைய பினாமி சொத்துக்களை வைத்துக் கொண்டு எப்போதும் போலவே ஆண்டு அனுபவித்து வருவதாகவும் சொல்கிறார்கள்.

நியோமேக்ஸில் பணத்தை போட்டு ஏமாந்த முதலீட்டாளர்கள் இவ்வாறு குற்றஞ்சாட்டுவதில் நூறு சதம் உண்மை இருக்கிறது என்பதற்கு எடுப்பான உதாரணங்களாகவே, இன்றளவும் நியோமேக்ஸ் முன்னணி இயக்குநர்களால் முன்னெடுக்கப்படும் 27-க்கும் அதிகமான புராஜெக்டுகளை கமிஷன் அடிப்படையில் விற்பணை செய்வதாக சொல்லப்படும் விசயம் பார்க்கப்படுகிறது. பினாமி பெயரில் அமைந்த சொத்துக்களைத்தான், புதியதாக பினாமி பெயரில் புது கம்பெனியை தொடங்கி, கமிஷன் அடிப்படையில் பிளாட்டுகளை விற்று வருவதைப்போல நாடகமாடி வருகிறார்கள் என்கிறார்கள்.
இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, நியோமேக்ஸ் ஏஜெண்ட் ஒருவர் கோடி கணக்கில் செலவு செய்து கட்டிடம் ஒன்றை கட்டி வரும் தகவல் அதிர்ச்சியூட்டியிருக்கிறது.
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, சத்திரக்குடி அருகேயுள்ள பி.முத்துசெல்லப்புரம் என்ற கிராமத்தில் நியோமேக்ஸ் ஏஜெண்டாக செயல்பட்டு வந்த மணவாளன் என்பவர் கோடி கணக்கில் செலவு செய்து புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார் என்கிறார்கள்.
பரமக்குடி வட்டாரத்தில், பி.முத்துசெல்லப்புரத்தில் மட்டுமே பத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆள் ஒன்றுக்கு தலா மூன்று இலட்சம் முதல் ஆறு இலட்சம் வரையில் வசூலித்திருக்கிறார், இந்த மணவாளன். மேலும், பக்கத்து கிராமமான பி.முத்து விஜயபுரத்தில் மட்டும் 40 இலட்சத்திற்கும் அதிகமான முதலீட்டையும் வாரி குவித்திருக்கிறார்.
மணவாளன் வழியாக, நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீட்டை போட்டவர்களுள் இதுவரை ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் யாரும் இதுவரை போலீசில் புகார் கொடுக்கவில்லை என்கிறார்கள். ஊர்ப்பஞ்சாயத்தில் முன்வைத்தும், பண விவகாரத்தில் ஊர் பஞ்சாயத்து தலையிட விரும்பவில்லை என்று ஒதுங்கிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
மணவாளன் வழியாக நியோமேக்ஸில் முதலீட்டை போட்டவர்கள் இன்றுவரையில் புகார்கூட கொடுக்காமல், பணம் எப்போது கிடைக்கும் என்று பரிதவித்து நிற்கும் இந்த சூழலில்தான், அதே கிராமத்தில் அவரிடம் முதலீடு செய்தவர்கள் அனைவரையும் ஆத்திரமூட்டும் வகையிலும் கோடிக்கணக்கில் செலவு செய்து சொந்த வீட்டை கட்டி வருகிறார் என்கிறார்கள்.

நியோமேக்ஸில் ஏஜெண்டாக செயல்படுவதற்கு முன்பு வரையில், சாதாரண விவசாயியாக வலம் வந்த மணவாளன் இன்று சொந்தமாக சொகுசு கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். விவசாயப்பயன்பாட்டுக்கான டிராக்டர் ஒன்றை வாங்கியிருக்கிறார். கூடவே, தற்போது கோடிக்கணக்கில் செலவு செய்து வீட்டை கட்டி வருகிறார். இவரை நம்பி நியோமேக்ஸில் முதலீடு செய்தவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு, இவர் மட்டும் சொகுசு வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார். முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறுவதற்கு என்ன வழி என்று கேட்டால், உன்னால் முடிந்ததைப் பார் என்று கேட்பவர்களிடம் சவால் விட்டபடியே, இவ்வளவையும் செய்து வருகிறார் என்கிறார்கள், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில்.
பரமக்குடி மணவாளனைப்போலவே, நியோமேக்ஸ் நிறுவனத்தின் பினாமி சொத்துக்களை கையாண்டுவரும் முக்கியமான ஏஜெண்டுகள் உள்ளிட்டு முன்னணி இயக்குநர்கள் பலரும் சொகுசு வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார்கள். ஏமாளி முதலீட்டாளர்கள்தான் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசுக்கும் நீதிமன்றத்துக்கும் படியேறி சோர்ந்து கிடக்கிறார்கள் என்கிறார்கள்.
இதுபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பினாமி சொத்துக்களை வைத்து, நியோமேக்ஸ் நிர்வாகம் நடத்திவரும் தனி சாம்ராஜ்யம் குறித்த பகிரூட்டும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகக் காத்திருக்கின்றன. திருச்சியில் மொராய் சிட்டியில் கைமாறிய சொத்து பற்றிய ஆவணங்களோடு மிக விரைவில் …
— அங்குசம் புலனாய்வுக்குழு.
நியோமேக்ஸைப் போலவே தஞ்சை ராஹத் ட்ரான்ஸ்போர்ட் நிறுவனமும் பொதுமக்களின் (சுமார்) 700 கோடியை ஏப்பம் விட்டு விட்டு நிறுவன உரிமையாளர்கள் ஹாயாக சுற்றி வருகின்றனர்.
ஏதாவது தகவல் இருந்தால் சொல்லுங்கள்..