நியோமேக்ஸ் : முழுமையான விவரங்களுடன் மீண்டும் வெளியான பட்டியல் ! ஆட்சேபணை பதிவு செய்ய ஒரு வாரம் கால அவகாசம் !
நியோமேக்ஸ் மோசடி வழக்கில், மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி அளித்திருந்த தீர்ப்பின் அடிப்படையில் மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் முதலீட்டாளர்களின் விவரங்களை EOW அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். தீர்ப்பின்படி, டிச-06 அன்று வெளியாகியிருக்க வேண்டிய பட்டியல், ஒரு நாள் தாமதமாக டிச-07 அன்று வெளியாகியிருக்கிறது என்பதையும், அதில் முதலீட்டாளர்களின் முழுமையான முதலீடுகள் பற்றிய விவரங்கள் இல்லாது இருப்பதையும் முந்தைய பதிவில் சுட்டிக்காட்டியிருந்தோம்.
குறிப்பாக, ஒரே முதலீட்டாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட பாண்டுகளில் நியோமேக்ஸின் பல்வேறு துணை நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த நிலையில், அந்த முதலீட்டாளரின் ஒரே ஒரு பாண்டு பற்றிய விவரம் மட்டுமே இடம்பெற்றிருக்கிறது என்பதையும்; ஒரே குடும்பத்தில் கணவன் மனைவி ஆகிய இருவரின் பெயரிலும் முதலீடு செய்திருக்கும் நிலையில் அந்த இரண்டு முதலீட்டுக்கான புகாரையும் கணவரின் கைப்பேசி எண்ணில் புகார் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மனைவியின் முதலீடு பற்றிய விவரங்கள் விடுபட்டிருப்பதையும் அந்த பதிவில் சுட்டிக்காட்டியிருந்தோம்.
தொழில்நுட்ப சிக்கல் காரணமாகவே இந்த குறைபாடு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதையும், ஆனாலும் இந்த குறைபாடு முதலீட்டாளர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் முந்தைய பதிவிலும் வீடியோ பதிவிலும் சுட்டிக்காட்டியிருந்தோம்.
இந்நிலையில், இந்தக் குறைபாடுகள் தற்போது சரிசெய்யப்பட்டிருக்கின்றன. வழக்கம்போல, புதிய பயனர் கணக்கை உருவாக்கிக்கொண்டு மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து உள்நுழைந்து முதலீட்டாளர்களின் கைப்பேசி எண்ணை பதிவிட வேண்டும். இப்போது, அந்த கைப்பேசி எண்ணில் பதிவான அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் பெயரில் பதிவான புகாரில் உள்ள அனைத்து பாண்டுகளையும் காண முடிகிறது.
மேலும், இதிலும் டைப்பிகல் எர்ரர் என்று சொல்லக்கூடிய தவிர்க்கவியலாத சிறு பிழைகள் இருக்கவே செய்கின்றன. சிலருக்கு ஒரே பாண்டுகள் இரண்டுமுறை பதிவாகியிருப்பதும்; சிலருக்கு பாண்டுகளுள் ஒன்றிரண்டு விடுபட்டிருப்பதும்; தொகையை பதிவு செய்வதில் இரண்டு இலட்சம் என்பதற்கு பதில் இருபதாயிரம் என்பதாக பிழையாக பதிவாகியிருப்பதுமான குறைபாடுகள் இருப்பதை சிலர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்பட்டியல் வெளியானதையடுத்து பட்டியலில் விடுபடல் இருப்பதாக கண்டறிந்த முதலீட்டாளர்கள் மதுரையில் உள்ள பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு அலுவலகத்திற்கு நேரில் சென்று முறையிட்டு வருகிறார்கள். அவர்களது ஆட்சேபணைகளை வரவேற்று அவர்கள் கோரும் மாற்றங்களை செய்து தருவதற்கேற்ப, 7 அலுவலர்கள் கணிணி வசதியுடன் அங்கே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். கையில் அசல் ஆவணங்களுடன் சென்றவர்களுக்கு உடனுக்குடன் திருத்தங்களையும் செய்து தருகிறார்கள்.
நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், டிச-10 ஆம் தேதிதான் ஆட்சேபனைகளை பதிவு செய்வதற்கான இறுதிநாள் என்ற நிலையில், பட்டியலே 7-ஆம் தேதிதான் வெளியாகியிருக்கிறது. அதுவும் முழுமையான விவரங்களோடு டிசம்பர்-09 ஆம் தேதியாக இன்றுதான் வெளியாகியிருக்கிறது என்பதால், ஆட்சேபனைகளை பதிவு செய்வதற்கான அவகாசத்தை இன்றிலிருந்து ஏழு நாட்களுக்கு நீட்டித்திருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும், அவர்களிடம் உள்ள தரவுகளின் அடிப்படையில் அவர்களே கண்டறியத்தக்க பிழைகளை இன்று மாலைக்குள் சரிசெய்துவிடுவதாகவும் வாக்குறுதியளித்திருக்கிறார்கள். இதன்படி, இன்னும் ஒருநாள் காத்திருந்து மீண்டும் ஒரு முறை வெளியான பட்டியலை சரிபார்த்துக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். ஒருவேளை, அவ்வாறு திருத்தப்பட்ட பட்டியலிலும் குறைபாடு இருப்பின், தமிழகத்தின் எந்த மூலையிலிருந்தும் எழுத்துப்பூர்வமான கடிதத்தை அஞ்சல் வழியாகவே அனுப்பி வைக்கலாம். வாய்ப்புள்ளவர்கள் நேரில் சென்றும் முறையீடு செய்யலாம்.
அஞ்சலில் அனுப்பி வைப்பதை பொறுத்தமட்டில், பலரும் பாதுகாப்பு மற்றும் உத்திரவாதம் காரணமாக பதிவஞ்சலில் அனுப்பி வருகின்றனர். இந்த முறையில் அனுப்பி வைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் சில முதலீட்டாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். எனவே, அஞ்சல் செய்வதற்கு முன்பாக அவர்களது இருப்பிடத்திலிருந்து மதுரைக்குள்ள தூரம் ஆகியவற்றை பொறுத்தும், அஞ்சல்துறை அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து ஸ்பீடு போஸ்ட் அல்லது கூரியர் போன்ற அவரவர்களுக்கு பொருத்தமான வழிமுறைகளில் அனுப்பி வைக்கலாம்.
இந்த விவகாரத்தில், நீதிமன்றத்தில் வழக்கு செல்வதற்கு முன்பாகவே பதிவான 8677 புகார்தாரர்களில் சி.எஸ்.ஆர். நகல் பெற்றிருப்பவர்களின் விவரங்கள் மட்டுமே பதிவானதாக குறிப்பிட்டிருந்தார்கள். தற்போதைய திருத்தப்பட்ட பட்டியலில் சி.எஸ்.ஆர். நகல் கிடைக்காதவர்களின் பெயரும் இடம்பெற்றிருக்கிறதா? என்பதை ஒருமுறை உறுதி செய்துவிட்டு, அவை கண்டிப்பாக விடுபடல் என்ற வகையினத்தில்தான் சேரும் என்பதால் தங்களது முறையீட்டை தெரிவிக்கப்போவதாக சில முதலீட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது தொடர்பாக EOW போலீசாரின் பதிலை பெற்று விரைவில் பதிவு செய்கிறோம்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.
இன்றைய அப்டேட்: வெளியான பட்டியலில் என்னுடைய பெயர்/விவரங்கள் இல்லை. இது தொடர்பாக மதுரை பொருளாதார குற்ற பிரிவு அலுவலகத்தில் நேரில் சென்று விசாரித்த போது அவர்கள் கூறியது ‘ இன்னும் 50% மேலானவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படவில்லையாம் . இன்று அல்லது நாளை பதிவேற்றம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர் ‘