நியோமேக்ஸ் வழக்கு : இதுவரை புகார் அளிக்காதவர்கள் புகார் அளிக்க நவம்பர் – 15 வரை அவகாசம் !
நியோமேக்ஸ் வழக்கு : இதுவரை புகார் அளிக்காதவர்கள் புகார் அளிக்க நவம்பர் – 15 வரை அவகாசம் !
நியோமேக்ஸ் வழக்கில் கடந்த அக்-19 அன்று சென்னை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி பரதசக்ரவர்த்தி அளித்திருந்த தீர்ப்பில், சில மாற்றங்களை செய்து மறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
”நியோமேக்ஸ் : திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கும் அதிரடி தீர்ப்பு ! இதுவரை புகார் கொடுக்காதவர்களுக்கு புகார் அளிக்க நீதிமன்றம் கொடுக்கும் கடைசி வாய்ப்பு !” என்ற தலைப்பில், கடந்த அக்-22 அன்று அங்குசம் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், அக்-19 அன்று பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவில், இடம்பெற்றிருந்த பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டியிருந்தோம்.
இத்தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தபடி, ”அக்டோபர் – 23 : பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு பொது அறிவிப்பை வெளியிட வேண்டும். அக்டோபர் – 23 முதல் அக்டோபர் – 30 வரை – பொது அறிவிப்பில் உள்ள பட்டியல் படி புகார்தாரர்கள் புகார் அளிக்க அவகாசம். அக்டோபர் – 31 முதல் நவம்பர் – 26 வரை – பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் உண்மைத்தன்மையை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்வதற்கான அவகாசம்.
நவம்பர் – 27 – உறுதி செய்யப்பட்ட முதிர்வுத்தொகையுடன்கூடிய முதலீட்டுத் தொகை விவரங்கள் அடங்கிய புகார்தாரர்களின் மொத்தப்பட்டியலை வெளியிடுவது. நவம்பர் – 27 முதல் டிசம்பர் – 02 வரை – பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் முறையீடு செய்வதற்கான அவகாசம். டிசம்பர் -03 – இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல். வழக்கின் இறுதி விசாரணை.” என்பதாக சில தேதிகளையும் குறிப்பிட்டிருந்தோம்.
இந்நிலையில், நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையில் அக்-23 ஆம் தேதியே வெளியாகியிருக்க வேண்டிய விளம்பர அறிவிப்பு பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரால் வெளியிடப்படாத நிலையில், நியோமேக்ஸ் முதலீட்டாளர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
அறிவிப்பை யார் வெளியிடுகிறார்கள் என்ற அடிப்படையான விவரம் கூட இடம்பெறாத, மொட்டை கடுதாசி போல ஒரு அறிவிப்பும் வெளியாகியிருந்தது. அதில், நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் அக்-30 ஆம் தேதிக்குள்ளாக புகார் தெரிவிக்கலாம் என்பதாக மட்டுமே இடம்பெற்றிருந்தது, மேலும் குழப்பத்தை கூட்டியது.
இந்நிலையில்தான், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் ”for being mentioned” என்ற நீதிமன்ற வழிமுறையின் வாயிலாக, முந்தைய உத்தரவில் சில மாறுதல்களை முன்வைத்திருக்கிறார்கள். EOW போலீசார் முன்வைத்திருந்த கோரிக்கைகளை அனுமதித்து முந்தைய தீர்ப்பில் சில மாறுதல்களை செய்து மறு உத்தரவு பிறப்பித்திருக்கிறார், நீதிபதி பரதசக்ரவர்த்தி.
இதன்படி,
” 1. நவம்பர் – 05 : பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு பொது அறிவிப்பை வெளியிட வேண்டும்.
-
நவம்பர் – 05 முதல் நவம்பர் – 15 மாலை 5.00 மணி வரை – பொது அறிவிப்பில் உள்ள பட்டியல் படி புகார்தாரர்கள் புகார் அளிக்க அவகாசம்.
-
நவம்பர் – 16 முதல் டிசம்பர் – 05 வரை – பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களின் உண்மைத்தன்மையை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்வதற்கான அவகாசம்.
-
டிசம்பர் – 06 – உறுதி செய்யப்பட்ட முதிர்வுத்தொகையுடன்கூடிய முதலீட்டுத் தொகை விவரங்கள் அடங்கிய புகார்தாரர்களின் மொத்தப்பட்டியலை வெளியிடுவது.
-
டிசம்பர் – 06 முதல் டிசம்பர் – 10 வரை – பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் முறையீடு செய்வதற்கான அவகாசம்.
-
டிசம்பர் -16 – இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல்.
-
டிசம்பர் -18 – வழக்கின் இறுதி விசாரணை. “ என்பதாக தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார், நீதிபதி பரதசக்ரவர்த்தி.
இதுவரை புகார் அளிக்காதவர்கள் புகார் அளிப்பதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது, இந்நீதிமன்றத் தீர்ப்பு. மொத்தம் எத்தனை பேர் முதலீட்டாளர்கள், மொத்த சொத்துக்களின் மதிப்பு எவ்வளவு என்பதையெல்லாம் ஒரு முறை சரிபார்த்த பிறகே, திருப்திகரமான முறையில் இருப்பதாக உணர்ந்த பிறகே இவ்வழக்கில் இறுதி உத்தரவை பிறப்பிக்க இயலும் என்பதாகவும் தெரிவித்திருக்கிறார் நீதிபதி.
ஆகவே, இதுவரையிலும் நியோமேக்ஸ் நிறுவனத்தின் பேச்சை நம்பி புகார் கொடுக்க முன்வராதவர்களும்கூட, நீதிமன்றத்தின் வாயிலாக நியாயமான தீர்வை நோக்கி நகர்வதற்கான ஒரு வழிமுறையாக அமைந்திருக்கும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி உரிய முறையில் புகார் அளிக்க பெருமளவில் முன்வருவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய, புகார்களைவிட குறைந்தபட்சம் இன்னும் பத்து மடங்கு புகார்களாவது இம்முறை பதிவாக வாய்ப்பிருப்பதாகவே தெரிவிக்கிறார்கள்.
தொடர்பு முகவரி:
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
பொருளாதாரக் குற்றப்பிரிவு, 4/425-ஏ,
முதல் தளம், சங்கர பாண்டியன் நகர்,
தபால் தந்திநகர் விரிவாக்கம், மதுரை – 625017.
மின்னஞ்சல் முகவரி : eowmadurai2@gmail.com
அலுவலக தொலைபேசி : 0452 – 2562626
– அங்குசம் புலனாய்வுக்குழு.