நீதிமன்றத்தில் பச்சையாக புளுகிய நியோமேக்ஸ் ! கொக்கி போட்ட நீதிமன்றம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நியோமேக்ஸ் வழக்கில், கடந்த அக்-19 அன்று சென்னை உயர்நீதிமன்றக்கிளை நீதிபதி பரதசக்ரவர்த்தி வழங்கிய தீப்பில் சில நடைமுறை சிக்கல்களை கருத்திற்கொள்ளாமலும், பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாருக்கு மேலும் கடுமையான பணி நெருக்கடியை வழங்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனாலும், உண்மையான முதலீட்டாளர்களின் கணக்கை இறுதி செய்வதற்கு, இதுவரை புகார் கொடுக்காதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கியிருப்பது என்பது இத்தீர்ப்பின் சாதக அம்சமாகவே பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் இதுவரையிலும்கூட வெளிப்படைத்தன்மை இல்லாமல் இந்த வழக்கை கையாண்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது. அத்துறையின் இத்தகைய அணுகுமுறை வியப்பில் ஆழ்த்துகிறது. தற்செயலானதா? ஏதேனும் மேலிடத்து அழுத்தமா? என்ற சந்தேகங்களை எழுப்பும் வகையில் அமைந்திருக்கிறது.

அங்குசம் இதழ்.. இலவசமாக படிக்க...

சமீபத்திய உதாரணமாக, அக்-19 ஆம் தேதிய நீதிமன்ற தீர்ப்பில் சுட்டிக்காட்டியபடி, அக்-23 ஆம் தேதி பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் விளம்பர அறிவிப்பு வெளியாகும் என்று முதலீட்டாளர்கள் பெரும்பாலோனோர் எதிர்பார்த்திருந்த நிலையில் ஏமாற்றமே விஞ்சியது. நீதிமன்ற உத்தரவுப்படி, விளம்பரம் ஏன் வெளியாகவில்லை என்பதற்கான எந்தவொரு விளக்கமும் வெளியாகவில்லை.

neomax - Md
neomax – MD

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அக்-30 ஆம் தேதிதான் புகார் அளிக்க இறுதி தேதி என்ற நிலையில், அக்-28 அன்று மாலை மொட்டையாக ஒரு பத்திரிகை செய்தி ஒன்று வெளியாகிறது. அது அதிகாரப்பூர்வமானதுதானா? என்பதைக்கூட, பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் உறுதிபடுத்த தயாராக இல்லை.

இன்னும் சொல்லப்போனால், நீதிமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருபவர்களும் குறிப்பிடத்தக்க சில வாட்சப் குரூப்களில் இடம்பெற்றிருப்பவர்களும் மட்டுமே நியோமேக்ஸ் வழக்கில் தற்போதைய நிலை என்ன என்பதை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். மற்ற 90% முதலீட்டாளர்கள், கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதையாக, நியோமேக்ஸ் நிறுவனத்தின் ஆதரவாளர்கள் அள்ளிவிடும் கதைகளை நம்பிக் கொண்டு இன்னும் காத்துக்கிடக்கிறார்கள்.

NeoMax_ad
NeoMax_ad

நியோமேக்ஸ் நிறுவனத்தில் குறைந்தபட்சம் மூன்று இலட்சம் பேர் முதலீடு செய்திருக்கிறார்கள் என்ற தகவல் பரவலாக உலவி வரும் நிலையில், இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான முதலீட்டாளர்களை புகார் கொடுக்கவே விடாமல் நைச்சியமாக பேசி தடுத்து வருவதாக சொல்லப்படும் நிலையில், முதலீட்டாளர்கள் தைரியமாகவும் சிரமமின்றியும் புகார் கொடுப்பதற்கான வாய்ப்பை இன்றுவரையிலும்கூட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவில்லை என்பதும் குறையாகவே நீடிக்கிறது.

இதுவரை பெறப்பட்ட 8677 புகார்களில் வெறும் இரண்டாயிரத்து சொச்சம் பேருக்குத்தான் அதாவது நான்கில் ஒரு பங்கு புகார்களுக்குத்தான் சி.எஸ்.ஆர். நகலே வழங்கப்பட்டிருக்கிறது. இப்போதைய நிலையிலும்கூட, நாளொன்றுக்கு அதிகபட்சம் 25 பேர் வரையில்தான் முழுமையான அளவில் புகாரை பதிவு செய்வதற்கான கட்டமைப்பை மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் கொண்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

நியோமேக்ஸ் நிறுவனத்தில் முதலீட் செய்திருப்பவர்களில் கணிசமானோர், ஏதோ ஒரு அரசு நிறுவனத்திலோ தனியார் நிறுவனங்களிலோ பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். பெரும்பாலோனோர் 60 வயதை கடந்த மூத்தகுடிமக்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து முதலீடு செய்திருக்கிறார்கள். அவர்கள் புகார் கொடுக்க விரும்பினாலும்கூட, அவ்வளவு தூரம் பயணம் செய்து மதுரைக்குத்தான் நேரில் வந்தாக வேண்டும். அப்படியே, வந்தாலும் முதல்முறையே அவர்களது புகார் பெற்றுக்கொள்ளப்படுவதில்லை. முதற்கட்ட தகவலை மட்டுமே சேகரித்துவிட்டு திருப்பியனுப்பிவைக்கப்படுகிறார்கள். பின்னர், அவர்களாக அழைக்கும் மற்றொரு நாளில்தான் மீண்டும் வந்து புகாரை அனைத்து விவரங்களோடு முழுமை செய்தாக வேண்டும் என்ற நிலை.

ஒன்று, அந்தந்த மாவட்ட அளவில் இயங்கும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசிலேயே அதற்குரிய வடிவத்தில் புகார் அளிப்பதற்காக வாய்ப்பை ஏற்படுத்தி தர பரிசீலிக்க வேண்டும். அல்லது, இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் வழியாகவே புகாரை பதிவு செய்வதற்கான வாய்ப்பை குறித்தாவது பரிசீலித்திருக்க வேண்டும்.

புகார் அளிப்பதிலேயே இவ்வளவு வசதிக்குறைபாடுகள் இருப்பதன் காரணமாகவே, பலரும் புகார் கொடுக்க முன்வராத நிலையும் நீடிக்கிறது. இவையிரண்டும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசின் தலைமையகம் எடுக்க வேண்டிய நிர்வாக ரீதியான முடிவுகள் என்ற போதிலும், இதுகுறித்தெல்லாம் அவர்கள் கவலை கொண்டதாகவும் தெரியவில்லை.

அடுத்து, போதுமான ஊழியர் பற்றாக்குறை காரணமாக வந்த புகார்களையும்கூட முறையாக பரிசீலித்து அதில் தொடர்புடைய நபர்களை அடையாளம் கண்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளவும்; சம்பந்தபட்ட சொத்துக்களை கண்டறிந்து கையகப்படுத்தவும் நிறைய மெனக்கெட வேண்டியிருக்கிறது.

வருவாய்த்துறை, பதிவுத்துறை உள்ளிட்டு பல துறைகளின் ஒத்துழைப்பில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் இவையெல்லாம் என்பதன் காரணமாகவும், அத்துறைகளின் ஒத்துழைப்பின்றியும் இப்பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மைகளாகவே நீடிக்கின்றன.

Neomax Team
Neomax Team

பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் கையாளும் பல வழக்குகளுள் இதுவும் பத்தோடு பதினொன்று என்பதாக அணுகுவதன் காரணமாகவே, இந்த தாமதங்களும் முதலீட்டாளர்கள் மத்தியில் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையின்மையையும் ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்லலாம். இது ஒருவகையில், ”கோர்ட் கேசுனு போனா வருடக்கணக்கில் இழுத்தடிப்பார்கள். நியோமேக்ஸ் நிறுவனத்தை நம்பி புகார் கொடுக்காமல் காத்திருங்கள். விரைவில் செட்டில்மெண்ட் செய்து தருவார்கள்.” என்று நியோமேக்ஸ் தரப்பில் சொல்லப்படும் பொய் வாக்குறுதியை நம்பி முதலீட்டாளர்கள் மீண்டும் ஒருமுறை ஏமாறுவதற்கான சூழலையும் ஏற்படுத்திவிடுகிறது.

இதற்கு எடுப்பான உதாரணமாக, நியோமேக்ஸ் வழக்கில், அக்-19 அன்று நடைபெற்ற நீதிமன்ற விவாதத்தை குறிப்பிட்டே சொல்லலாம். தமிழகம் முழுவதும் 13500 முதலீட்டாளர்களிடமிருந்து, வெறும் 563 கோடி ரூபாய் அளவுக்குத்தான் முதலீடை பெற்றிருக்கிறோம் என்பதாகவும்; மேற்படி முதலீட்டாளர்களுக்கும் பிரித்துக் கொடுப்பதற்கு ஏதுவாக 2456 ஏக்கர் அளவுக்கு நிலங்கள் கைவசம் இருப்பதாகவும் நியோமேக்ஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதனை கடுமையாக ஆட்சேபித்து, அரசு தரப்பில் முன்வைத்த வாதத்தில், இதுவரை 8677 முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களிலிருந்து சுமார் 1106 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை நியோமேக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது என்பதாக வாதிட்டனர்.

நியோமேக்ஸ் குறித்து அங்குசம் செய்தி வெளியிட்ட அட்டை பட கட்டுரைகள்.
நியோமேக்ஸ் குறித்து அங்குசம் செய்தி வெளியிட்ட அட்டை பட கட்டுரைகள்.

இதே நியோமேக்ஸ் நிறுவனத்தின் சார்பில், கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரம் ஒன்றில், சுமார் 42,000 முதலீட்டாளர்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த நிலையில், தற்போது வெறும் 13,500 பேர் மட்டுமே முதலீட்டாளர்கள் இருக்கிறார்கள் என்பதாக பச்சையாக புளுகியிருக்கிறது, நியோமேக்ஸ் நிறுவனம்.

பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் தரப்பிலும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பிலும், முதலீட்டாளர்களின் உண்மையான கணக்கை நியோமேக்ஸ் நிறுவனம் மறைக்கிறது என்பதாக வாதிட்டபோது, “உண்மையான முதலீட்டாளர்களின் விவரத்தை நாங்களே ஒப்படைக்க வேண்டும் என்று கோருவது, குற்றவாளியே குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு நிர்ப்பந்திப்பதற்கு நிகரானது.” என்பதாக, நியோமேக்ஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வகுமார் வாதிட்டிருக்கிறார். மேலும், “உண்மையான முதலீட்டாளர்களின் எண்ணிக்கையை புலன் விசாரணை அதிகாரிதான் கண்டுபிடிக்க வேண்டும்.” என்பதாகவும் சவால் விட்டிருக்கிறார்.

அதோடல்லாமல், “வேண்டுமானால், நியோமேக்ஸ் முன்னணி இயக்குநர்களை கைது செய்து சிறையில் வேண்டுமானாலும் அடைத்துவிடுங்கள்.” என்பதாகவும் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். இவையெல்லாம், நியோமேக்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தையும் சட்டத்தையும் எந்தளவுக்கு மதிக்கிறது என்பதற்கான எடுப்பான உதாரணங்களாக அமைந்திருக்கின்றன.

அதேசமயம், மற்றொரு கோணத்தில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாரின் வெளிப்படைத்தன்மையில்லாத அணுகுமுறையும் இத்தகைய நிலை எடுக்க நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்றும் சொல்லலாம்.

நியோமேக்ஸ் கூட்டம்
நியோமேக்ஸ் கூட்டம்

இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நிலமாகவோ, பணமாகவோ திரும்பக் கொடுப்பதற்கு நியோமேக்ஸ் நிறுவனம் தயாராக இருக்கிறது என்றும் கைவசம் போதுமான நிலங்கள் இருக்கிறது என்றும் வழக்கின் தொடக்கம் முதலாகவே வாதிட்டுவருகிறது. ஆனாலும், இன்றுவரையில் இவ்வளவுபேர்தான் முதலீட்டாளர்கள். இவர்களிடமிருந்து இவ்வளவு கோடி ரூபாய்களை வசூலித்திருக்கிறோம். அவ்வாறு வசூலித்த தொகையிலிருந்து இன்னின்ன ஊர்களில் இவ்வளவு ஏக்கர் நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறோம் என்பதாக முழுமையான பட்டியலை வழங்குவதற்கு நியோமேக்ஸ் நிறுவனம் எப்போதும் தயாராக இருந்ததில்லை.

நீதிமன்றத்தை பொருத்தமட்டில், முதலீட்டாளர்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கேற்ப சொத்துக்களின் மொத்த பட்டியல் ஆகிய இரண்டையும் சரிபார்த்துதான் அதைப்பொறுத்துதான் இந்த வழக்கில் என்ன வகையான வழிமுறையை கையாள்வது என்பதை தீர்மானிக்க முடியும் என்பதாக கருதுகிறது. இதன் காரணமாகவே, இன்னும் புகார்கொடுக்காதவர்களுக்கும் வாய்ப்பு வழங்கி, உண்மையான முதலீட்டாளர்களின் கணக்கை உறுதிபடுத்த அவகாசத்தையும் வாய்ப்பையும் வழங்கியிருக்கிறது.

இதிலிருந்துதான், ”பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தரப்பில் பலரும் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். முக்கியமாக, அவசியமான மருத்துவ தேவைக்காகவும்; குடும்பத் திருமணத் தேவைக்காகவும்; குழந்தைகளின் கல்விச் செலவுக்காகவும்கூட பணமின்றி தவித்து வருவதை கருத்திற் கொண்டுதான், மிக குறுகிய காலத்திற்குள் இவ்வளவு பெரிய சிக்கலை தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதற்கு உதவும் வகையில், அரசு தரப்பில் விசாரணை அதிகாரிக்கு உதவியாக மூன்று ஆய்வாளர்களையும் மனுக்களை பரிசீலிப்பதற்கு தகுதியான 20 பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்.” என்றும் தனது தீர்ப்பில் நீதிபதி பரதசக்ரவர்த்தி குறிப்பிட்டிருக்கிறார்.

டிசம்பர் – 16 அன்று மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலிருந்துதான், இந்த வழக்கில் எந்த வகையான தீர்வை நோக்கி நகர்வது என்பது குறித்து தீர்மானிக்க முடியும் என்பதாக தெரிவித்திருக்கிறார், நீதிபதி பரதசக்ரவர்த்தி.

இதன்படி பார்த்தால், நியோமேக்ஸ் வழக்கு ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறது என்றே சொல்லலாம். இப்போதும்கூட, தற்போதைய புகார்தார்களோடு கணக்கை முடித்துக் கொண்டு இந்த வழக்கிலிருந்து தப்பித்து வெளியே வந்துவிட வேண்டும் என்ற நோக்கிலிருந்துதான் நியோமேக்ஸ் நிறுவனம் முயற்சித்து வருவதாக அறியமுடிகிறது. ஆகவே, இதிலிருந்து புகார்களின் எண்ணிக்கை மேலும் அதிகமானால், இன்னும் சிக்கல்தான் என்ற நிலையில், வெளிப்படையாக புகார் அளிப்பதை நியோமேக்ஸ் நிறுவனம் விரும்பாது. எப்படியாவது, எதை சொல்லியாவது புகாருக்கு போகாமல் அவர்களை தடுக்கவே கூடுமானவரையில் முயற்சிக்கும்.

இந்த வழக்கில் உண்மையான புகார்தாரர்களை கண்டறிந்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டியது, வழக்கின் விசாரணை அதிகாரியின் பொறுப்பு என்பதாக வெளிப்படையாகவே சவால் விட்டிருக்கிறது நியோமேக்ஸ் நிறுவனம். வெறுமனே, விளம்பர அறிவிப்பு என்ற வரம்போடு நின்றுவிடாமல், குறைந்தபட்சம் இந்த வழக்கின் நிலை குறித்து போதுமான விவரங்களை தகவல்களை குறிப்பிட்டு முதலீட்டாளர்கள் எந்த விதமான அழுத்தத்துக்கும் மிரட்டலுக்கும் ஆளாகமல், தைரியமாகவும் நம்பிக்கையாகவும் புகார் அளிப்பதற்கான வழிவகைகளை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார்தான் ஏற்படுத்தி தந்தாக வேண்டும்.

நடிகை சன்னிலியோ - படப்பிடிப்பு தளத்தில் நியோமேக்ஸ் வீரசக்தி
நடிகை சன்னிலியோ – படப்பிடிப்பு தளத்தில் நியோமேக்ஸ் வீரசக்தி

ஆன்லைன் வழியாக புகார் அளிப்பது; அஞ்சல் வழியாக புகார் அளிப்பது; மின்னஞ்சல் வழியாக புகார் அளிப்பது; அந்தந்த மாவட்ட அளவிலேயே இயங்கும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு அலுவலகத்தில் புகார் அளிப்பது – போன்ற எளிய வழிமுறைகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

முக்கியமாக, தற்போதைய நீதிமன்ற உத்தரவின்படியே, அவர்களே ஒரு பார்மேட்டை உருவாக்கி வெளியிட வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆக, இந்த வழக்கில் தமிழகம் முழுவதற்கும் அதுதான் பார்மேட். ஆக, அந்த படிவத்தை அப்படியே நகலெடுத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்தந்த மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு நிலையத்திலேயே வழங்குவதற்கான வழிவகைகளை செய்ய சாத்தியமிருக்கிறது என்றே கருத இடமிருக்கிறது.

இவற்றையெல்லாம், மிக முக்கியமாக மேலும் மேலும் நீதிமன்ற வழக்குகள் – தலையீடுகளால் காலம் தாழ்த்தப்படுவதை தவிர்க்கும்பொருட்டு, இந்த வழக்கில் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் குழப்பங்களை போக்கும் வகையில் தெளிவான வழக்கு குறித்த நிலைத்தகவலையும் ஒவ்வொரு முதலீட்டாளரும் சுதந்திரமாக புகார் அளிப்பதற்கான வாய்ப்பையும் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்!

– அங்குசம் புலனாய்வுக்குழு.

அங்குசம் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள...

Leave A Reply

Your email address will not be published.