நியோமேக்ஸ் தனி நீதிபதி நியமிக்க கோரிய வழக்கு முதலீட்டாளர்களுக்கு சாதகமா? தப்பிக்க செய்யும் தந்திரமா?
நியோமேக்ஸ் தரப்பில் உள்ள நிலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்த முழுமையான தகவல்கள் உள்ளிட்ட புலன் விசாரணை முழுமை பெறாத நிலையில், தனிநீதிபதியை நியமிப்பது என்பது மறைமுகமான முறையில் விசாரணையை பாதிக்கும்
நியோமேக்ஸ் தனி நீதிபதி நியமிக்க கோரிய வழக்கு முதலீட்டாளர்களுக்கு சாதகமா? தப்பிக்க செய்யும் தந்திரமா?
நியோ மேக்ஸ் நிறுவனம் சார்பில் அதன் இயக்குநர்களான பழனிச்சாமி மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோர் சார்பில், ஓய்வுபெற்ற தனிநீதிபதியை நியமிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பாக நடைபெற்று வருகிறது. அக்டோபர் 11 அன்று நடைபெற்ற விசாரணையில் நேரில் ஆஜராகியிருந்த மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் ஹசன் முகம்மது ஜின்னா தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். தனி நீதிபதியை நியமித்துவிட்டால் காலதாமதமின்றி எல்லோருக்கும் விரைவாக நிலத்தைப் பிரித்து கொடுத்து பிரச்சினையை முடித்து விடலாம் என்பதாக நியோமேக்ஸ் தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தை தகர்க்கும் வகையில் பல்வேறு ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறார், அவர்.
மிக முக்கியமாக, 1999-ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற பணமோசடி வழக்குகளில் நியமிக்கப்பட்ட பல்வேறு கமிட்டிகளில் பத்தாண்டு களை கடந்தும் இன்னும் பலருக்கும் பணம் போய்ச்சேரவில்லை என்ற யதார்த்த நிலையை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பல கமிட்டிகளில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளும் கமிட்டியிலிருந்து விலகிவிட்டதையும் குறிப்பிட்டார். மூன்று இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இருக்கக்கூடும் என்ற நிலையில், வெறும் 32,048 முதலீட்டாளர்கள் மட்டுமே இருப்பதாக நியோமேக்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் முரண்பாட்டையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
நியோமேக்ஸ் தரப்பினர் கூற்றுப்படி முதலீட்டாளர்களுக்கு நிலத்தை பிரித்துக் கொடுப்பதாக இருந்தால்கூட, 49 கோடியே 72 இலட்சம் சதுர அடி மனைகள் தேவைப்படும் நிலையில், அவர்களிடம் டி.டி.சி.பி அப்ரூவல் பெற்ற இடம் 5 கோடியே 9 லட்சம் சதுர அடி மட்டுமே இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையிலேயே வாடிக்கையாளர்களுக்கு பிரித்துக் கொடுப்பதாக கொண்டால் கூட, தலா 697 சதுர அடி மனைதான் ஒதுக்க முடியும். இதற்கு முதலீட்டாளர்கள் ஒப்புக்கொள்வார்களா? என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார், ஹசன் முகம்மது ஜின்னா.
இது வரை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் நியோமேக்ஸ் தொடர்பாக வெறும் 667 பேர் மட்டுமே புகார் கொடுத்துள்ள நிலையில், நியோமேக்ஸில் முதலீடு செய்துள்ள மொத்த முதலீட்டாளர்கள் எத்தனை பேர்? அவர்களிடமிருந்து வசூலித்த தொகை எவ்வளவு? நியோமேக்ஸ் தரப்பில் உள்ள நிலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்த முழுமையான தகவல்கள் உள்ளிட்ட புலன் விசாரணை முழுமை பெறாத நிலையில், தனிநீதிபதியை நியமிப்பது என்பது மறைமுகமான முறையில் விசாரணையை பாதிக்கும் என்பதையும் அவர் சுட்டிகாட்டி கடுமையான ஆட்சேபத்தையும் எதிர்ப்பையும் பதிவு செய்திருக்கிறார்.
இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்த வர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், வழக்கை திசை திருப்பும் நோக்கம் கொண்டது என்பதை எடுத்துரைத்தனர். இதனைத்தொடர்ந்து, விசாரணையை அக்டோபர் 20-ஆம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார், நீதிபதி இளங்கோவன்.
எங்கள் WhatsApp சேனலில் இணைந்திடுங்கள்..