கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டும் ‘தலைமறைவு’ குற்றவாளி கம்பம் செல்வக்குமார் !
கட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டும் ‘தலைமறைவு’ குற்றவாளி கம்பம் செல்வக்குமார் !
நியோமேக்ஸ் வழக்கில் ஏற்கெனவே ஏ1 குற்றவாளி கமலக்கண்ணன் உள்ளிட்டு 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நியோ மேக்ஸின் கிளை நிறுவனங்களுள் ஒன்றான ரொபோக்கோ பிராப்பரிட்டீஸ் நிறுவன இயக்குனர் மைக்கேல் செல்வி மற்றும் தென்காசி, போடி பகுதியில் நியோமேக்ஸின் துணை நிறுவனமான சென்ட்ரியோ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்த அதன் இயக்குநர் நடேஷ்பாபு ஆகியோரை, டி.எஸ்.பி. மணீஷா தலைமையிலான மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இன்னும் தலைமறைவாக உள்ள முன்னணி இயக்குநர்களை கைது செய்யும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நாராயணசாமி, மற்றும் செல்வக்குமார் ஆகியோர் தங்களுக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பாக விசாரணைக்கு வந்தது. “இவர்கள் இருவரும் ஏஜெண்டுகள் அல்ல. நியோமேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர்களாக இருப்பவர்கள். இதில் தேனியைச் சேர்ந்த செல்வக்குமார் திமுகவில் மாவட்ட பொறுப்பில் இருக்கிறார். அவரது மனைவி சுவேதா கம்பம் நகராட்சி துணை சேர்மனாக இருப்பவர். இந்த செல்வாக்கு காரணமாக இப்பகுதியில் முதலீட்டாளர்கள் புகார் கொடுக்க பயப்படுகிறார்கள்.
இவர்களிடம் விசாரணை நடத்துவது அவசியம். முன்ஜாமின் வழங்கினால் வழக்கு விசாரணையை பாதிக்கும்.” என அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ரவி கடும் ஆட்சேபத்தை பதிவு செய்தார். மனுதாரர்கள் தரப்பில் அவகாசம் கோரப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை அக்டோபர்-13 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

கம்பம் செல்வக்குமார், நியோமேக்ஸ் நிறுவனத்தின் கம்பம் தேனி மாவட்டத்தின் ஆர்.எச். ஆக செயல்பட்டவர். தற்போதும்கூட பெயருக்குத்தான் தலைமறைவாக இருப்பதாக சொல்கிறார்கள். மற்றபடி, கட்சி நிகழ்ச்சிகள், தொண்டர்களது விசேசங்களுக்கும் தலைகாட்டிக்கொண்டுதான் இருக்கிறார் என்கிறார்கள். நியோமேக்ஸ் கதை ஒருபக்கம் இருக்க சூர்யா ரெடிமேட்ஸ் என்ற பெயரில், 40-க்கும் மேற்பட்டோரிடம் தலா 6 இலட்சம் சுருட்டிவிட்டார் என்ற புகாரும் இவர்மீது உள்ளது குறிப்பிடத்தக்கது.
வீடியோ லிங்:
