நியோமேக்ஸ் – புகார் கொடுக்காமல் தீர்வு கிடைக்காது ! அதிர்ச்சி வைத்தியம் தந்த சுந்தர் தியாகராஜன் !
நியோமேக்ஸ்-புகாருக்கு தயார் ஆகும் சுந்தர் தியாகராஜன் – மூத்த குடிமக்கள் முதலீட்டாளர்கள் நலச் சங்கம்
நியோமேக்ஸ் மோசடி வழக்கில் முக்கிய திருப்பமாக, இதுவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகாரே கொடுக்காமல் நியோமேக்ஸ் நிறுவனத்தை நம்பி இருந்து வந்த, “நியோமேக்ஸ் மூத்த குடிமக்கள் முதலீட்டாளர்கள் சலச்சங்கத்தின்” சார்பில் அதன் தலைவர் சுந்தர் தியாகராஜன் இனி தாங்களும் புகார் அளிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.
நியோமேக்ஸ் மூத்த குடிமக்கள் முதலீட்டாளர்கள் நலச்சங்கத்தின் இரண்டாவது பொதுக்குழு மற்றும் இளையோர் குடிமக்கள் முதலீட்டாளர் நலச்சங்கத்தின் முதலாவது பொதுக்குழு கூட்டம், கடந்த ஜூலை-20 அன்று திருச்சியில் நடைபெற்ற நிலையில் மேற்படி பொதுக்குழு எடுத்த முடிவின் அடிப்படையில் இதனை தெரிவிப்பதாக சொல்கிறார்.
நியோமேக்ஸ் விவகாரத்தில், ஒரு தரப்பினர் புகார் அளித்திருக்கிறார்கள். புகார் அளித்தவர்களுள் பல்வேறு சங்கங்களாக, குழுக்களாக, பிரிவினர்களாக அவரவர்களுக்கு உகந்த வழிமுறைகளில் இழந்த பணத்தை மீட்க முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். நியோமேக்ஸ் வழக்கில் சிக்கிய காலம் தொட்டு, மூத்த குடிமக்கள் பெயரில் சங்கம் நடத்திவரும் திருச்சியை சேர்ந்த சுந்தர்தியாகராஜன், நியோமேக்ஸ் முதலீட்டாளர்கள் யாரும் புகார் அளிக்க வேண்டாம் என்று வெளிப்படையான பிரச்சாரத்தை முன்னெடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பின்னணியில், அவரே இனி புகார் கொடுக்கப்போவதாக அறிவித்திருப்பதுதான் தற்போதைய எதிர்பாராத திருப்பமாக அமைந்திருக்கிறது.

மேற்படி பொதுக்குழுவில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிடும், சுந்தர்தியாகராஜன் முதலாவது தீர்மானம் புதிய நிர்வாகிகளின் அறிமுகம் என்கிறார். இரண்டாவது தீர்மானமாக, இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க நிர்வாகக்குழுவுக்கு அதிகாரம் வழங்கியிருப்பதாக தெரிவிக்கிறார். அதன்படி, பொருளாதாரக்குற்றப்பிரிவில் புகார் அளிக்க ஏதுவாக கூகுள்பார்ம் ஒன்றை உருவாக்கி உறுப்பினர்களின் விவரங்களை பெற்று சங்கத்தின் சார்பில் மொத்தமாக புகாரை கொடுப்பதென முடிவெடுத்திருப்பதாக அறிவிக்கிறார்.
நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற்றுவரும் இதுவரை அடையாளம் காணப்பட்ட சொத்துக்களின் மதிப்பீட்டுக்குழுவின் அறிக்கையை பொறுத்து, நீதிமன்றத்தில் அவசியமான தலையீட்டையும் சங்கத்தின் சார்பில் முன்னெடுக்கும் என்பதாக தெரிவிக்கிறார.
மூன்றாவது தீர்மானமாக, நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களின் சொத்துக்களை அடையாளம் கண்டு அவற்றை முடக்குவது குறித்து பேசியிருக்கிறார். குறிப்பாக, கொள்ளையடித்த தலைவர்களின் சொத்துக்கள்; தலைமறைவான தலைவர்களின் சொத்துக்கள்; தனக்கு ஆபத்து இல்லாமல், பணத்தை கொண்டு காய்களை நகர்த்திக்கொண்டிருக்கும் தலைவர்களின் சொத்துக்களை அடையாளம் கண்டு அட்டாச் செய்ய வேண்டும் என்பதாக அறிவிக்கிறார்.
நியோமேக்ஸ்-புகாருக்கு தயார் ஆகும் சுந்தர் தியாகராஜன் – மூத்த குடிமக்கள் முதலீட்டாளர்கள் நலச் சங்கம்
இந்த விவகாரம் தொடர்பாக, எந்த ஒரு சங்கம் முன்னெடுக்கும் முன்னெடுப்புகளுக்கும் சங்க வேறுபாடு இன்றி ஆதரவு தெரிவிப்பது என்பதாகவும்; குறிப்பாக, இதுவரை கீரியும் பாம்புமாக பொதுவெளியில் சண்டையிட்டு வந்த தேனி சங்கத்தின் சில முன்னெடுப்புகளை குறிப்பிட்டு ஆதரித்து பேசியிருப்பதும் சுந்தர்தியாகராஜன் தலைமையிலான சங்கத்தினரின் மனமாற்றத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது.
தொடக்க காலத்தில், பொதுவில் நியோமேக்ஸ் நிறுவனத்தை ஆதரித்து நின்று நமக்கான தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக பேசிய சுந்தர்தியாகராஜன், இன்று நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்கள் பாலா, கமலக்கண்ணன் ஆகிய இருவரை தவிர்த்த மற்ற தலைவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். ஆக, நியோமேக்ஸ் கம்பெனியில் தொடங்கி, தற்போது பாலா, கமலக்கண்ணன் என்ற இரு நபரில் சுருங்கியிருக்கிறது.
நியோமேக்ஸ் – இதுவரை புகார் கொடுக்காதவர்களின் கதி என்ன ?
இதுஒருபுறமிருக்க, மற்றொரு கோணத்தில் நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக அந்நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் சங்க வேறுபாடுகள் கடந்து ஒருங்கிணைந்து வருகிறார்கள். அவரவர்களுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் இருந்தாலும், இழந்த பணத்தை மீட்பது என்ற புள்ளியில் பொதுக்கோரிக்கையில் ஒன்றுபடுவது என்ற விசயத்தில் ஒன்றுகூடியிருக்கிறார்கள் என்பதும் சாதகமான அம்சமாகவே பார்க்கப்படுகிறது.
பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டு, நிலங்களை மதிப்பிடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலரும் இதுவரை புகார் கொடுக்கவே முன்வராத நிலையில், இத்தகைய மனமாற்றங்கள் பெருந்திரளானோரை இனி புகார் கொடுத்தால் மட்டுமே இழந்த பணத்தை மீட்க முடியும் என்ற முடிவுக்கு தள்ளியிருக்கிறது.
— அங்குசம் புலனாய்வுக்குழு