நியோமேக்ஸ் செட்டில்மெண்ட் – ஏழு சிக்கல்களை எவ்வாறு அணுகப்போகிறது நீதிமன்றம் ?
பேச வேண்டிய பஞ்சாயத்து எல்லாவற்றையும் பேசி தீர்த்துவிட்டுத்தான், செட்டில்மெண்ட் நிலைக்கு போக வேண்டும் என்ற நிலை எடுத்த காரணத்தினால்தான் ...
நியோமேக்ஸ் ! இடியாப்ப சிக்கலில் செட்டில்மெண்ட் !
நியோமேக்ஸ் வழக்கு விவகாரத்தில், கடைசியாக செப்-12 அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின் தொடர்ச்சியாக, வழக்கு செப்-19 அன்று காலை 10.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
அன்றைய தினம், நியோமேக்ஸ் உள்ளிட்டு அனைத்து தரப்பிலும் செட்டில்மெண்டை எவ்வாறு செய்யப் போகிறோம்? என்பது குறித்த முன்மொழிவோடு வந்துவிட வேண்டுமென நீதியரசர் பரதசக்ரவர்த்தி வலியுறுத்தியிருக்கிறார்.
அனைத்து தரப்பிலிருந்தும் விளக்கங்கள் பெறப்பட்டு அதனடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதாக தெரிவித்திருக்கிறார்.
செட்டில்மெண்ட் விவகாரம்தான் இந்த வழக்கின் மிக முக்கியமான பகுதியாக அமைந்திருக்கிறது. கடந்தமுறை நீதிமன்ற விசாரணையின்போது, பார்ட்டி இன் பெர்சனாக நேரில் ஆஜராகி வாதிட்ட பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் ஒருவர் தனது தரப்பு கோரிக்கைகளை பட்டியலிட்டிருந்தார். அப்போது, அவர் நியோமேக்ஸ் நிறுவனம் தனக்கு வாக்குறுதி அளித்திருந்தபடி முழுத்தொகையும் முழுமையான முதிர்வுத்தொகையுடனும் பணமாகவே திருப்பித்தர வேண்டுமென்ற கோரிக்கையை பதிவு செய்தார்.
அப்போது, குறுக்கிட்ட நீதியரசர் இதை நாங்கள் ஒரு சமரச முயற்சியாகவே முன்னெடுக்கிறோம். இரு தரப்பும் ஒப்புக்கொள்கிற ஒரு தீர்வுத் திட்டத்தைத்தான் எதிர்பார்க்கிறோம். இதில் உடன்பட்டு வருபவர்களுக்கு தீர்வை அளிக்கப் போகிறோம். உடன்படாதவர்கள் டான்பிட் நீதிமன்றத்தில் வழக்கை நடத்தி இறுதி தீர்வை பெற்றுக் கொள்ளலாம் என்பதாக பதிவு செய்திருந்தார். இன்னும் சொல்லப்போனால், இதுபோன்ற கோரிக்கைகளால்தான் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசில் பதிவான 500-க்கும் அதிகமான வழக்குகள் தீர்வை நோக்கி நகராமல் முடங்கிக் கிடக்கின்றன என்பதாக குறிப்பிட்டார்.

நியோமேக்ஸ் செட்டில்மெண்ட் விசயத்தில், ஏழு விவகாரங்கள் முக்கிய சவால்களாக அமைந்திருக்கின்றன.
முதலாவதாக … புகார்களை எப்படி கணக்கில் எடுக்கப் போகிறார்கள்? ஏற்கெனவே, நீதிமன்றம் கெடு விதித்திருந்த தேதி வரையில் பெறப்பட்ட புகார்களையா? இல்லை, கடைசிப் பேருந்தை தவற விட்டவர்களுக்கான வாய்ப்பு என்ற அளவில் நீதியரசர் பரதசக்ரவர்த்தி அனுமதித்திருந்தவர்கள் வரையிலான புகார்களையா? இரண்டாம் பட்டியல் என்பதாக, வகைப்படுத்தப்பட்டு தற்போது வரையில் பெறப்பட்ட புகார்களையும் முதல் செட்டில்மெண்டில் இணைக்கப்போகிறார்களா?
இரண்டாவதாக … சிலரது பாண்டுகள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என்ற குறைபாடு தொடர்கிறது. கைவசம் 5 பாண்டுகள் உள்ள நிலையில், அவற்றுள் 3 பாண்டுகள் மட்டுமே அப்லோட் செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்றத்திலேயே ஒருவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

கடைசி நேரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு நியோமேக்ஸ் நிறுவனமே பாண்டுகளை ஒப்படைக்காமல் இருந்திருக்கிறது. அவர்கள் நிலை என்ன? இன்னும் சிலருக்கு முதிர்வுகாலம் முடிந்து தீர்வுத்தொகைக்காக அசல் பாண்டுகளை நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்த நிலையில் நிறுவனம் வழக்கில் சிக்கிக் கொண்டது. இந்த இரண்டு வகையினரிடமும் ஒரிஜினல் பாண்டுகள் இல்லை. இவர்களை நீதிமன்றம் எவ்வாறு கணக்கில் எடுத்துக்கொள்ளப்போகிறது?
அடுத்து, நிறுவனத்தின் பல்வேறு நடைமுறை காரணங்களால் வேறு ஒருவரின் பெயரில் உள்ள பாண்டுகள், அதற்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவர்களிடமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. பாண்டுகளை அதன் மதிப்பின் அடிப்படையில், தங்க நகைகளை கைமாற்றுவதைப் போல கைமாற்றியிருக்கிறது. இது சட்டப்படியான உரிமையை நிரூபிப்பதில் சிக்கலை கொண்டதாக அமைந்திருக்கிறது. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை எப்படி அணுகப்போகிறது?
நியோமேக்ஸ் ! இடியாப்ப சிக்கலில் செட்டில்மெண்ட் !
மூன்றாவதாக … ஜே.வி. பத்திரங்கள் என்றழைக்கப்படும் ஜாயிண்ட் வென்ட்சார் பத்திரங்களின் நிலை என்ன? அதனை சட்டப்பூர்வமான ஆவணமாக ஏற்கப்படுமா? அதில் உள்ள மிக மையமான சிக்கலான, பிரின்சிபல் தொகையை எவ்வாறு நிர்ணயம் செய்யப்போகிறார்கள்?
நான்காவதாக … தற்போதைய நிலையில் பாண்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் முதலீடு தொகை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. முதிர்வுத்தொகையை நீதிமன்றம் எவ்வாறு நிர்ணயிக்கப்போகிறது? இருதரப்பிலும் பணப்பலன்கள் என்ற வகையில் பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது. அதனை எவ்வாறு நிரூபிக்கப் போகிறார்கள்? நியோமேக்ஸ் பெனிபிட்ஸ்-கள் கொடுத்திருக்கிறோம் என்று ஒப்புக் கொள்ளுமா? அதற்கு கணக்கு சொல்லுமா? ஒருவேளை இங்கே தீர்வு காண முடியாமல், சுப்ரீம் கோர்ட் வரை விவகாரம் செல்லுமா? என்ற கேள்வி எழுகிறது.
எதுவாயினும், இது முதற்கட்டம்தான். அவர்களது முதலீட்டை திரும்ப பெறுவதில் யாரும் எந்த விதத்திலும் இடையூறு ஏற்படுத்திவிடக்கூடாது. குறைந்தபட்சம் அவர்கள் போட்ட முதலீட்டையாவது திரும்ப பெற அனுமதிக்க வேண்டும். அது தொடர்பான பஞ்சாயத்துக்களை பிறகு வைத்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரம் இத்தோடு முடிந்துவிட போவதில்லை. பிற்காலத்தில் எல்லாமும் முடிந்து எஞ்சிய தொகைகள் இருப்பின் அந்த தொகையும் கூட விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அனைத்து முதலீட்டாளர்களும் பெறுவதற்கு தகுதியுடையவர்கள்தான் என்ற கோணத்தில் இதனை அணுக வேண்டும்.

ஐந்தாவதாக … தீர்வுத்திட்டத்தை நிலமாகப் பெறுவதா? பணமாக பெறுவதா? என்ற மையமான கேள்வி. இதில், தெளிவுபடுத்தப்பட வேண்டிய ஒரு விவகாரம் இருக்கிறது. இதற்கு முன்னர் வரையில், 5-ஏ செட்டில்மெண்ட் என்ற பெயரில், ஒன்றுக்கும் ஆகாத நிலங்களை தலையில் கட்டப் பார்த்தார்கள், அதற்காக ஒரு சங்கம் மெனக்கெடுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஆனால், தற்போதைய நிலையில் அதாவது நிலங்களை மதிப்பிடும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகள் பொருத்தப்பாடு அற்றதாகிவிடுகிறது.
எல்லோரது ஆட்சேபனைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு நீதிமன்றம் இறுதியாக நிர்ணயிக்கும் நிலத்தின் மதிப்பின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் ஒருவர் நிலமாகவே தீர்வைப் பெற விரும்பினால் அது எப்படி என்று மற்றொருவர் கையைப் பிடித்து தடுக்க முடியுமா? என்ற கேள்வி எழுகிறது. அது அவரது விருப்பம். ஒருவேளை ஏமாறுவதாக இருந்தாலும், அவர் தனிப்பட்ட முறையில் ஏமாந்து போனவராகவே இருந்து போகட்டுமே? இதனால் மற்றவர்களுக்கு என்ன நட்டம் ஏற்பட்டுவிட்டது, என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.
ஆறாவதாக … நிலமாக தீர்வை பெற அனுமதிக்கப்பட்டால், ஒரே நிலத்துக்கு பலர் போட்டியிடும் நிலை வந்தால் அதனை எவ்வாறு அணுகப் போகிறார்கள்? பத்திரசெலவு யாருடைய பொறுப்பு? சிறப்பு நேர்வாக, நியோமேக்ஸ் பணத்தை வைத்தே பத்திர செலவையும் நீதிமன்றமே பொறுப்பேற்க வேண்டும். அவர்களது தீர்வுத்தொகைக்கு ஏற்ப பகுதியளவு நிலம் மற்றும் பகுதியளவு பணம் ஆகியவை நிர்ணயம் செய்து அந்த தொகையிலிருந்து பத்திரவு செலவுக்குரிய தொகை நேர் செய்யப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
ஏழாவதாக … பணமாக தீர்வை பெற விரும்புபவர்களுக்கு நிலத்தை ஏலம் விட்டுத்தான் தீர்வை தர இயலும். அதற்கான நடைமுறைகள் தற்போது காலம் பிடிப்பவையாக இருக்கிறது. தனி டி.ஆர்.ஓ. நியமிக்காமல் விரைவாக நகர வாய்ப்பில்லை என்ற சூழலை நீதிமன்றம் எவ்வாறு கையாளப் போகிறது?
ஏலத்தில் பங்கேற்க, முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்போகிறதா? யாரெல்லாம் அட்டாட்ச்மெண்ட் கோரிக்கைகாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்களோ, அவர்களுக்கெல்லாம் அந்த குறிப்பான நிலங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க சிறப்பு முன்னுரிமை வழங்கப்படுமா? ஒருவேளை இதுபோன்ற, முன்னுரிமை வழங்கப்பட்டால் நியோமேக்ஸ் ஏஜெண்டுகள் முக்கியமான இடங்களை குறிவைத்து அபகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதே? அதனை நீதிமன்றம் எவ்வாறு தடுக்கப்போகிறது? என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன.

இன்னும் புகாருக்கே செல்லாதவர்களின் நிலை என்ன? என்பது உள்ளிட்டு இதுபோன்று இன்னும் பலவிதமான சிக்கல்களை உள்ளடக்கியதாகத்தான் அமைந்திருக்கிறது, நியோமேக்ஸ் செட்டில்மெண்ட் விவகாரம்.
போட்ட பணத்தை திரும்பக் கேட்பதில் யாருக்கு என்ன சிக்கல்? பணமாகத்தான் தீர்வு வேண்டும். அதுவும் வாக்கு கொடுத்தபடியே முழு முதிர்வுத் தொகையுடன்தான் வேண்டும் என்ற கோரிக்கைகள் நியாயமான கோரிக்கைகளா? பேராசைக் கொண்டவர்களின் கோரிக்கையா? என்பது குறித்து பட்டிமன்றம் நடத்துவதில் எந்த பலனும் இல்லை.
மாறாக, பணத்தைப் போட்டவர்கள் குறைந்தபட்சம் அவர்களது முதலீட்டுத்தொகையை மட்டுமாவது, வாய்ப்பிருந்தால் வங்கி வட்டியுடன் முதற்கட்டமாக திரும்ப பெறுவதை யாரும் எந்த விதத்திலும் தடுக்க முடியாது. தடுக்கவும் கூடாது.
பேச வேண்டிய பஞ்சாயத்து எல்லாவற்றையும் பேசி தீர்த்துவிட்டுத்தான், செட்டில்மெண்ட் நிலைக்கு போக வேண்டும் என்ற நிலை எடுத்த காரணத்தினால்தான் பல வழக்குகள் தீர்வை நோக்கி நகராமல் முட்டுச்சந்தில் சிக்கித் தவிக்கின்றன. அதன் கணக்கில் இதையும் கொண்டுபோய் சேர்ப்பதால் யாருக்கு என்ன இலாபம்?
நியோமேக்ஸ் இழைத்த குற்றங்களை பட்டியல் இட வேண்டிய இடத்தில் பட்டியலிடுவோம். அதற்குரிய தண்டனைகளை பெற்றுத்தர வேண்டிய இடத்தில் பெற்றுத்தருவோம். நியோமேக்ஸ் பதுக்கிய சொத்துக்கள் அனைத்தையும் கண்டறிவோம். கண்டறிந்த சொத்துக்களையெல்லாம் அட்டாச் செய்வோம். அதிலிருந்து, முழு முதிர்வுத்தொகையை கோருவோம். ஆனால், அதுவரையில் முதலீட்டாளர் உயிரோடு இருக்க வேண்டுமே? அவன் வயிற்று வலி தீர வேண்டுமே? அதற்கு என்ன செய்வது? என்ற கேள்வியும் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
செப்-19 அன்று நடைபெறும் நீதிமன்ற விசாரணைதான், இதற்கான விடை சொல்லும். பொருத்திருந்து பார்ப்போம்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.
Comments are closed, but trackbacks and pingbacks are open.