நியோமேக்ஸ் செட்டில்மென்ட் நிலமா…? பணமா…?
நியோமேக்ஸ் செட்டில்மென்ட் நிலமா…? பணமா…?
மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கில், அதன் நிர்வாக இயக்குனர்களுள் ஒருவரான கமலக்கண்ணன் தொடுத்த வழக்கில் அட்வகேட் கமிஷனரை நியமித்து உத்தரவு பிறப்பித்தது சிறப்பு நீதிமன்றம்.
TANPID 5(A) சட்ட வழிமுறையின் படி, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, புகார் அளித்த முதலீட்டாளர்களுக்கு நிலமாகவோ பணமாகவோ பிரித்து கொடுத்து விட்டு இந்த வழக்கில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பாக இந்த கோரிக்கையை முன்வைத்திருந்தது நியோமேக்ஸ் நிறுவனம்.
“இதுவரை பெறப்பட்ட 1004 முதலீட்டாளர்கள் இடமிருந்து அவர்களது விருப்பத்தை பெறும் நடவடிக்கையின் பொருட்டு, வழக்கறிஞர் ஒருவருக்கு தலா 100 புகார்தாரர்கள் வீதம் 10 அட்வகேட் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. தலைமையில் இந்த கருத்து கேட்பு கூட்டம் நான்கு நாட்கள் நடைபெறுகிறது. நிலமாக வேண்டுமா? பணமாக வேண்டுமா? என்ற அவர்களது விருப்பத்தை கேட்பதற்கான ஒரு வழிமுறை மட்டுமே. முதிர்வு தொகையா, சந்தை மதிப்பா என்பதையெல்லாம் நீதிமன்றம் தான் தீர்மானிக்கும் “ என்கிறார் மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அழகுராஜா.
“புகார் கொடுத்தவர்கள் வெறும் ஆயிரம் பேர்தான். புகார் கூட கொடுக்காமல் வெளியே இருப்பவர்கள் பல ஆயிரம் பேர். நகரின் மையத்தில் அமைந்துள்ள முக்கியமான இடங்கள் எல்லாம் நியோமேக்ஸ் இயக்குநர்கள் தங்களது பெயரிலும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் பதிவு செய்து விட்டார்கள். ஒன்றுக்கும் உதவாத இடங்களைத்தான் இப்போது பிரித்து கொடுப்பதாக சொல்கிறார்கள்.
அதிலும் வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பு இரண்டில் எதை எடுத்துக் கொள்ள போகிறார்கள்? இதுவரையில் கட்டிய பணத்தை செட்டில்மென்ட் செய்வார்களா? முதிர்வு தொகையை கணக்கில் எடுத்துக் கொள்ள போகிறார்களா? என்பதில் எந்த தெளிவும் இல்லை. இதுவரை புகார் கூட தெரிவிக்காமல் நியோமேக்ஸ் சொல் பேச்சை கேட்டு கொண்டு இருப்பவர்களுக்கு என்ன விதத்தில் கணக்கு முடிக்க போகிறார்கள் என்றும் தெரியவில்லை.
முதிர்வு தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டால் மட்டுமே நிலத்தின் சந்தை மதிப்பில் செட்டில்மென்ட் செய்ய அனுமதிக்க வேண்டும். கட்டிய தொகைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றால் அரசின் வழிகாட்டி மதிப்பின் படிதான் செட்டில்மென்ட் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைப்போம் ; உடன்படவில்லை எனில் 5(a) பிரிவின் படியான சுமுக உடன்பாட்டுக்கு நாங்கள் ஒத்துக்கொள்ள போவதில்லை “ என்கிறார், நியோமேக்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் சங்கத்தை சேர்ந்த கம்பம் இளங்கோவன்.
– ஷாகுல், படங்கள் : ஆனந்த்