நியோமேக்ஸ் : புகார் கொடு என்கிறது நீதிமன்றம் ! புகார் கொடுத்தால் பணம் கிடைக்காது என்கிறது ஒரு கூட்டம் !
நியோமேக்ஸ் : புகார் கொடு என்கிறது நீதிமன்றம் ! புகார் கொடுத்தால் பணம் கிடைக்காது என்கிறது ஒரு கூட்டம் !
நியோமேக்ஸ் விவகாரத்தில், ”பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை முழுவதுமாகக் கண்டறியும் விதமாக செய்தித்தாள்களில் விளம்பரம் செய்ய வேண்டும். மக்களிடம் புகார்களைப் பெற்று இந்த வழக்கு விசாரணையை 15 மாதங்களில் முடித்து சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும்.
மோசடி செய்தவர்களின் சொத்துகளைக் கண்டறிந்து மொத்தமாக வழக்கில் இணைத்து அவற்றை விற்பனை அல்லது ஏலத்தில் விட்டு, அந்தத் தொகையை சிறப்பு நீதிமன்றத்தில் முறையான அனுமதி பெற்று முதலீடு செய்தவர்களுக்கு வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதாக மதுரை உயர்நீதிமன்றக்கிளை உத்தரவிட்டிருக்கிறது.
நியோமேக்ஸில் முதலீடு செய்தவர்களை முழுமையாக இந்த வழக்கில் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில், விளம்பரம் கொடுத்து புகார்களை பெற வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், நியோமேக்ஸ் மூத்த குடிமக்கள் முதலீட்டார்கள் நலச்சங்கம்’ என்ற பெயரில் மண்டபத்தில் ஆயிரக்கணக்கானோர் கூடி “புகார் கொடுத்தால் பணம் கிடைக்காது. யாரும் புகார் கொடுக்காதீர்கள்” என்று பகிரங்கமாகவே பேசியிருப்பது நியோமேக்ஸ் முதலீட்டாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, நியோமேக்ஸில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்களுள் ஒருவரும்; போட்ட பணத்தை திரும்ப பெறுவதற்கான சட்ட முயற்சிகளில் ஈடுபட்டுவருபவருமான சிவகாசியைச் சேர்ந்த பொறியாளர் ராமமூர்த்தி தனது தரப்பு விளக்கத்தை அளித்திருக்கிறார்.
இனி அவரது வார்த்தைகளிலே, ”சமாதானக் கூட்டம் மற்றும் பொதுக்குழு என நிறுவனம் மறைமுகமாக அவர்களுக்கு சாதகமாக செயல்படுபவர்கள் மூலமாக நடத்திக் கொண்டிருக்கும் நாடகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் … நிறுவனம் நேரடியாகவோ மறைமுகமாகவோ எஞ்சி உள்ள தரமான பெரும்பாலான சொத்துக்களை விற்று அவர்களுடைய குடும்பத்தார்கள் ஏதோ ஒரு வழியில் அதை அனுபவித்துக் கொள்ள ஏற்பாடு செய்துவிடுவார்கள்.
நிறுவனத்தின் பெயரில் மற்றும் நிறுவனத்தின் சொத்துக்களை அதன் நிர்வாகிகள் பெயரில் பினாமி சொத்துக்களாக உள்ளவற்றை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை விற்காதவர்கள் கூட விற்றுக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து அவர்களும் அவர்களால் இயன்றளவு சொத்துக்களை விற்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது பெரும்பாலோர் அறிந்த செய்தி.
இனி மேல் இந்த கள் நெஞ்சம் கொண்ட நயவஞ்சகர்களிடமிருந்து பாதிக்கப்பட்டவர்களாகிய நமக்கு சேர வேண்டிய சொத்துக்களை நாம் பாதுகாக்கத் தவறினால், அதன்பின் எந்த முறையில் செட்டில்மென்ட் என்றாலும் அது புகார் கொடுத்தவர்கள் மற்றும் கொடுக்காதவர்கள் யாருக்கும் முழுமையானதாக இருக்காது.
சொத்துக்களை விற்றுத்தான் நமக்கு பணமாக செட்டில்மென்ட் கொடுக்க இயலும். இருக்கும் சொத்துக்களை நாம் இழந்து விட்டால் அதன்பின் கயவர்கள் விற்ற அனைத்து சொத்துக்களையும் கண்டறிந்து அவற்றை மீட்பதற்கு வழக்கு தொடர வேண்டிய நிலை ஏற்பட்டால் வழக்கு முடிவுக்கு வர பல ஆண்டுகள் ஆகும்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பலரை இதுவரை கைது செய்யவில்லை. பெரும்பாலோரை இதுவரை குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அவர்களைக் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வழக்கு தொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும். இல்லையென்றால் ஏஜெண்டுகள் மூலமாக நிலம் விற்பணை குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகும். வழக்கு எவ்வளவு ஆண்டுகள் கடந்து போனால், அவ்வளவு நல்லது என நிறுவனம் மற்றும் அதன் நிர்வாகிகள் கருதுகின்றனர்.
ஏன் என்றால் charge sheet போட கால தாமதம் ஆகும். மற்றும் வழக்கு முடியும் வரை ஜாமீனில் இருந்து கொண்டே இருக்கும் சொத்துக்களை விற்று பலன் பெற இயலும். வழக்கு விரைவில் முடிவதை குற்றவாளிகள் விரும்பவில்லை. அது அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குற்றவாளிகள் சிறை செல்ல நேரிடும் என்பதால், வேண்டும் என்றே திட்டமிட்டு கால தாமதம் செய்கின்றனர்.
அதற்கு அவர்களுக்கு சாதகமாக செயல்படுபவர்களை பல வகைகளில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சுயநலவாதிகளும் அவர்கள் போடும் தாளத்திற்கு ஏற்றவாறு நடனம் ஆடுகின்றனர். இதனை புரிந்து கொள்ள இயலாத அப்பாவி மக்களை நிலம் மூலமாக விரைவான செட்டில்மென்ட் என்ற பெயரில் பலிகடா ஆக்க முயற்சி செய்கின்றனர்.
காவல்துறை இதுவரை பாராட்டத்தக்க எந்த நடவடிக்கைகளையும் சொத்துக்களை attachment செய்வதில் செய்யவில்லை. இனிமேலும் அவர்களால் அதை சரி வரச் செய்ய இயலாது என்றே தோன்றுகிறது. அதற்கு காரணம் மறைமுக அதிகார வர்க்கம் என்ற செய்தி பெரும்பாலோர் அறிந்ததே.
ஜாமீன் ரத்து வழக்கு முன்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அது நிராகரிக்கப்பட்ட செய்தியும் பலர் அறிந்த விசயம். அதற்கு காரணம் தேவையான ஆதாரங்களுடன் சரியான சட்ட நடவடிக்கைகள் எடுக்காமல் ஏனோ தானோ என பெயரளவிற்கு வழக்கு தொடுத்தது தான்.
ஒரு சிலரால் இப்பொழுது தொடுக்கப்பட்டிருக்கும் ஜாமீன் ரத்து போன்ற வழக்குகளும் அது போன்று உள்நோக்கத்துடன் சுயநலத்திற்காக தொடரப்பட்ட வழக்காகத்தான் பார்க்கப்படுகிறது. போதுமான ஆதாரங்கள் மற்றும் அந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு பெறுவதற்கு தேவையான முந்தைய தீர்ப்புகளை சுட்டிக்காட்டவில்லை. சொத்துக்களை வாங்கியவர்களை குற்றவாளிகளாக சேர்க்கப்படவில்லை. ”முறையற்ற சொத்துக்களை விற்பதும் தவறு.
அதை வாங்குவதும் தவறு” என நிரூபித்தால் தான் மேற்கொண்டு அது போன்ற சொத்துக்களை விற்க இயலாத நிலை ஏற்படும். விற்ற சொத்துக்களை கைப்பற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அதனால் தான் சொத்துக்களை விற்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. வழக்கு தொடுப்பவர்கள் முழுமையாக செயல்படவில்லை.
அவர்களின் சுயநலத்திற்காக மற்றவர்கள் தொடுத்த நல்ல வழக்கை கொச்சப்படுத்துகிறார்கள். மேலும் யாரையும் வழக்கு தொடுக்க விடாமல் அச்சத்தை உருவாக்கி நிறுவனத்தார்களுக்கு சாதகமாக நடந்து கொள்கிறார்கள் என்பது பலர் அறிந்த உண்மை.
தங்களிடம் இருந்த கருப்பு பணத்தை மோசடி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலோர் அதை திரும்பப் பெறும் பொழுது வருமான வரித்துறை மூலமாக ஏதேனும் சிக்கல்கள் வந்து விடக் கூடாது எனக் கருதி புகார் கொடுக்காமல் இருக்கின்றனர் என்பது விசயம் தெரிந்த பலர் அறிவர்.
முறையாக சம்பாதிக்காத பணத்தை முதலீடு செய்த பொழுது உண்மையான முதலீட்டாளர் பெயர் மற்றும் முகவரி கொடுக்காமல் முதலீடு செய்ததற்கான அசல் ரசீது இருந்தால் போதும் அதை வைத்து முதிர்வு தொகையை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என கருதி முதலீடு செய்தவர்கள் பல ஆயிரம் பேர் இதுவரை புகார் கொடுக்கவில்லை.
காரணம் ஆதாரை அடையாளமாக காட்ட இயலாது விசாரணையின் போது தவறான தகவல்கள் இருப்பது கண்டறியப்பட்டால் அதனால் சிக்கல்கள் ஏற்படக்கூடும் எனக் கருதுகின்றனர். நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக முதலீடு செய்துள்ளோம் எங்கள் புகார் மூலமாக அவர்களுக்கு சட்ட சிக்கல்கள் வந்து விடக் கூடாது என கருதுபவர்கள் சிலர் இருக்கின்றனர். இதை ஒரு காரணமாக சிலர் கூறிக் கொண்டிருந்தாலும் உண்மையில் வேறு காரணங்கள் உள்ளன என்பதை புரிந்து கொள்ள இயலும்.
புகார் கொடுக்காத 90 சதவீதத்திற்கும் மேல் உள்ளவர்களில் பெரும்பாலோர் இனி எப்பொழுதும் புகார் கொடுக்க மாட்டார்கள் என்பது தான் நிறுவனத்தின் கணிப்பு. சிலரை நிறுவனமே தேவையான பொழுது புகார் கொடுக்கச் செய்து அவர்களுக்கு செட்டில்மென்ட் செய்ய கால தாமதம் செய்து வழக்கை முடிக்க விடாமல் திட்டம் தீட்டி இருப்பதும் பலர் அறிந்த விசயம்.
ஒரு பக்கம் நிறுவனத்திற்கு சாதகமாக செயல்படுபவர்கள் மூலமாக அப்பாவி முதலீட்டாளர்களை செட்டில்மென்ட் ஆரம்பமாகிவிட்டது என ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் இயன்றளவு சொத்துக்களை விற்றுக் கொண்டிருக்கின்றனர்.
உண்மையில் செட்டில்மென்ட் செய்து முடிக்க விரும்புபவர்கள் முறையாக தங்களிடம் உள்ள அனைத்து சொத்துக்களையும் உரிய துறைகளிடம் ஒப்படைத்து விட்டால் அதனை முறையாக விற்பனை செய்ய ஒத்துழைத்தால் பிரச்சினைகளை எளிதாக தீர்த்து வைத்து விடலாம். அதனை செய்ய முன் வராமல் சுற்றி வளைத்து கால தாமதம் செய்து வழக்கை நீர்த்துப் போகச் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
உரிய முறையில் வெளிப்படையாக அனைவரும் பலன் பெரும் வகையில் செட்டில்மென்ட் பற்றிய விசயங்களை எழுத்துப் பூர்வமாக உரிய துறை மூலமாக அறிவித்து பாகுபாடு இல்லாமல் எளிதாக செட்டில்மென்ட்டை செய்து முடிக்க இயலும். அதில் ஈடுபாடு காட்டாமல், வழக்கை முடிக்க விடாமல் ஒரு தலைப் பட்சமாக ஏதோ நல்லது செய்ய முயற்சி செய்வது போல் நாடகத்தை நடத்தி கால தாமதம் செய்து அதன் மூலம் நிறுவனம் சுயநலம் அடைய விரும்புகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு குழுக்களாக இருப்பது நிறுவனத்திற்கு சாதகமான விசயம். அனைவரும் விரைவில் ஒன்று கூடி ஒத்த கருத்தில் தீவிரமான சட்டப் பூர்வமான போராட்டங்களை நடத்தி உரிய துறைகளை சரியாக செயல்பட செய்தால் தான் செட்டில்மென்ட் விசயம் நேர்மையானதாக நடைபெறும். கால தாமதத்தை தவிர்க்க இயலும்.” என்பதாக குறிப்பிடுகிறார், சிவகாசி ராமமூர்த்தி.
– அங்குசம் செய்திப்பிரிவு.