நியோமேக்ஸின் புதிய தந்திரம்!
நியோமேக்ஸின் புதிய தந்திரம்!
அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் என அசராமல் நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியும், நீதிமன்றம் அசைந்து கொடுக்காத நிலையில், அடுத்த அஸ்திரத்தை தேடி சென்றுவிட்டது நியோமேக்ஸ். தற்போது, வலியது வெல்லும் என்னும் கதையாக, வாடிக்கையாளர்களுடன் மல்லுக்கு நிற்கிறது, நியோமேக்ஸ்.
மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் பிடியில் வகையாய் சிக்கிய நியோமேக்ஸ் நிறுவனத்தின் முன்னணி இயக்குநர்களை எப்படியேனும் மடக்கி காரியம் சாதித்துவிட வேண்டுமென்ற முயற்சியாக மாவட்ட அளவில் பாதிக்கப்பட்டவர்கள் பேரவையை தொடங்கி பேரம் பேசி வருகின்றனர்.
இதுதான் சந்தர்ப்பம் என்றுணர்ந்த, நியோமேக்ஸ் முன்னணி இயக்குநர்கள் ”போலீசு, கேசுனு போயிட்டா ஒன்னுக்கும் பிரயோசனம் இல்லாமல் போயிடும். புதுசா யாரும் கம்ப்ளையிண்ட்னு போகாம பார்த்துக்கோங்க. ஒரு வருசம் டயம் கொடுங்க. முதல்ல போலீசு பிடியில இருந்து வெளிய வரனும். அப்புறம் புராஜெக்ட் சேல்ஸ் பன்றதுக்கு ஸ்டெப் எடுக்கனும். அவகாசம் கொடுங்க, நல்லபடியா முடிச்சுத்தாரோம்னு” பழையபடி எக்ஸெல், பவர்பாயிண்ட் பிரசன்டேசனில் இறங்கிவிட்டார்களாம்.
ஒருவேளை, இறுதிவரை உடும்புப்பிடியாக நீதிமன்றம் இந்த வழக்கை விடாது பிடித்து நின்றாலும், அதற்கும் ஓர் மாற்று ஏற்பாடாக நியோமேக்ஸ் கம்பெனி சார்பிலேயே, Neomax Customers Welfare Association (NCWA) என்றொரு கைக்கூலி அமைப்பை வைத்து தந்திரமாக வழக்கிலிருந்து தப்புவதற்கான ஏற்பாட்டோடு இருக்கிறதாம் நியோமேக்ஸ் நிர்வாகம்.
இது எதற்கும் அசராத, சிறப்பு அதிகாரி டி.எஸ்.பி. மனிஷா தலைமையிலான பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரோ, அடுத்து ஆக வேண்டிய வேலைகளில் மும்மரமாயிருக்கிறார்களாம்.
-அங்குசம் புலனாய்வுக் குழு