காக்கை குருவி எங்கள் ஜாதி ! சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டி வரும் குடும்பம் !
சிட்டுக்குருவி என்றொரு பறவையினம் ஒரு காலத்தில் இருந்தது என்றும் சொல்கிற அவல நிலையில் இருக்கின்றோம். விவசாயிகளுக்குப் பறவையினங்கள் உதவி வருவதை ...
காக்கை குருவி எங்கள் ஜாதி ! சிட்டுக்குருவிகளுக்கு கூடு கட்டி வரும் குடும்பம் !
“நவீன காலத்தில் மரங்கள் குறைந்து கான்கிரீட் கட்டிடமாகி வருகிறது. கட்டிட அமைப்பானது சிட்டுக்குருவிகள் கூடுகட்டி வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. இதுதவிர தெருக்களில் சிட்டுக்குருவிகளுக்குத் தேவையான தானியங்களும் கிடைப்பதில்லை. விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அடிக்கப்படுகின்றன. நிலம், நீர் மாசுகாரணமாகவும், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகின்றன. ஆகவே, சிட்டுக் குருவிகளுக்கு கூடு அமைத்து வருகிறோம்.” என்கிறார் திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார். இவரது முயற்சிக்கு இவரது மனைவியும் வழக்கறிஞருமான சித்ரா விஜயகுமார் மற்றும் மகள் கீர்த்தனா ஆகியோரும் உறுதுணையாக இருப்பதோடு, தங்களது இல்லத்தின் முகப்பிலேயே சிட்டுக்குருவிக்கு கூடு கட்டி வியப்பில் ஆழ்த்தியிருக்கின்றனர்.
இதுதொடர்பாக, தொடர்ந்து பேசிய விஜயகுமார், “காக்கை குருவி எங்கள் ஜாதி என்றும், “சின்னஞ் சிறு குருவி போலே – நீ திரிந்து பறந்துவா பாப்பா! வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ மனதில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா !” என்றும் மகாகவி பாரதி பாடி மகிழ்ந்தார்.
அன்றைய கவிஞரின் மகிழ்ச்சி அப்படியெனில், இன்றைய திரையிசைக் கவிஞர்களோ, சிட்டுக்குருவியை தூதுப் பறவையாகக் கையாண்டனர். “சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?” என்றும் ” சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து” என்றும், “சிட்டுக்குருவிக்கு என்ன கட்டுப்பாடு?” என்றும், சிட்டுக்குருவி பற்றிய கவிதைகளைப் பாடல்களாகத் தீட்டி மகிழ்ந்தனர். அவை இன்று காலத்தை வென்றவையாகத் திகழ்ந்து நிற்கின்றன.
ஆனால், சிட்டுக்குருவி என்றொரு பறவையினம் ஒரு காலத்தில் இருந்தது என்றும் சொல்கிற அவல நிலையில் இருக்கின்றோம். விவசாயிகளுக்குப் பறவையினங்கள் உதவி வருவதை எவரும் மறுக்க முடியாது. அயல் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டு, உற்பத்தி பெருகிட, வண்ணத்துப் பூச்சிகள் போன்றே குருவியினங்களும் ஓர் காரணமாக இருந்தன. பூக்களின் மகரந்தத் தூள்களை ஒரு தாவரத்திலிருந்து இன்னொன்றுக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான ஒரு வழிமுறையே அயல் மகரந்தச் சேர்க்கை எனப்படும். அப்படி அதற்கு உதவிய குருவியினங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றன.
சிட்டுக்குருவிகள் அழிந்து வரப் பல காரணங்கள் உள்ளன. சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் தான் கேள்விக்குறியாக உள்ளது. குருவிகள் முட்டையிடுவதற்கான அமைப்பு கொண்ட கூடுகளை இன்று எந்த வீடுகளிலும் நாம் பார்க்க முடிவதில்லை.
அதற்கான முக்கியக் காரணம் மாறிவரும் கட்டிட வடிவமைப்புகள். சின்ன வீடாக இருந்தாலும், குருவிக்கூடு போல சொந்த வீடாக இருக்க வேண்டும் என்றனர். இன்று அடுக்குமாடிக் குடியிருப்புகளில் குருவிகள் வசிப்பதற்கும், கூடுகள் கட்டிக் கொள்ளவும் வசதிகள் சிறிதளவு கூடக் கிடையாது என்பது வேதனைக்குரிய விஷயம். சரி, போகட்டும். மரக்கிளைகளில் அவை கூடுகள் கட்டிக்கொள்ளலாம் என்றால் நகர்ப்புறங்களில் பெருமளவு மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. பிறகு எப்படிக் குருவிகள் பெருகும்?
பூச்சிக்கொல்லிகள், மொபைல் டவர்கள் போன்ற பல காரணங்களும் குருவிகள் அழியக் காரணமாக சொல்லப்படுகின்றன. குறிப்பாக, பூச்சிக்கொல்லி மருந்தால் விவசாய பூமியில் உள்ள புழுக்கள் அழிந்து வருகின்றன. குருவிகளுக்கான முக்கிய உணவு புழுக்கள் என்பதால், அவை இல்லாமல் போவதால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
சிட்டுக்குருவிகள் இனம் வெகுவாக குறைந்து வரும் நிலையில், ஆண்மை விருத்தி மருந்துக்கு பயன்படுவதாகக் கூறி, அவற்றின் இனத்தையே அழித்துவிடும் அபாய நிலையும் குறிப்பிடத்தக்கது. கிராமங்களில் கம்பங் கொல்லையிலும், கரும்பு காட்டிலும் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்த சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை, மொபைல் போன் டவர் மூலம் காற்றில் பரவும் மின்காந்த அலைகளால் வெகுவாக குறைந்தன என்று ஒரு புறமிருக்க, ஆண்மை விருத்திக்கு உதவுவதாக நம்பப்படுவதால், இவை கூட்டம் கூட்டமாக கொல்லப் படும் தகவல் வருத்தத்துக்குரியது.
சிட்டுக்குருவி இனம் மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது. நகரங்களில் சிட்டுக்குருவிகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. அதனால் திருச்சி புத்தூர் பிஷப் குளத் தெருவில் உள்ள எங்களது வீட்டு முகப்பிலேயே சிட்டுக்குருவிகளுக்கு கூடு வைத்து உள்ளோம் அதுமட்டுமின்றி அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கவும் மனிதன் பண்பட பக்குவப்பட பத்தாயிரம் நூல்கள் கொண்ட நூலகமும், பசிப்பிணி மை போக்க அனுதினமும் அன்னதானமும், ஆயிரக்கணக்கான அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்யும் பணியிலும், பறவைகளுக்கும், கால்நடைகளுக்கும் உண்ண உணவும் குடிநீரும் வைத்து பராமரித்து வருகிறோம். 2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிட்டுக்குருவிகளை காப்பாற்றி முன்பு போல உலாவ விட பல முயற்சிகள் நடந்து வருகிறது. என்றாலும் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது.
இதை உணர்ந்த டெல்லி அரசு சிட்டுக்குருவியை மாநிலப் பறவையாக அறிவித்து உள்ளது. சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கூடுகட்டி வாழ விரும்புகின்றன. இதனால், வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்த இந்த சின்னஞ்சிறு பறவை கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களில் இருந்து விடைபெறத் தொடங்கிவிட்டன.
சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், நெல் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும் சில முக்கியக் காரணங்களாக கூறப்படுகிறது” என்பதாகவும் விரிவாகவே பகிர்ந்துகொண்டார் விஜயகுமார்.
அங்குசம் செய்திப்பிரிவு.