முற்போக்கு தமிழகத்தின் சாதிய முகம் ! திரைகிழித்த பொது விசாரணை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

முற்போக்கு தமிழகத்தின் சாதிய முகத்தை திரைகிழித்த பொதுவிசாரணை ! தமிழகமும் சாதிய வன்கொடுமைகளும்” என்ற தலைப்பில் மக்கள் பொதுவிசாரணை கடந்த மே-18 அன்று மதுரையில் நடைபெற்றது. மதுரையில் செயல்பட்டுவரும் எவிடன்ஸ் அமைப்பின் ஏற்பாட்டில் அவ்வமைப்பின் செயல் இயக்குநர் எவிடன்ஸ் கதிர் தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் பொதுவிசாரணையில் நடுவர்களாக, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், பெங்களூரு சி.எல்.பி.ஆர். அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெயனா கோத்தாரி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எழில் கரோலின், மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் திட்ட இயக்குநர் எட்வின், லாஸ் மையத்தின் இயக்குநர் வழக்கறிஞர் சந்தனம், சென்னை லயோலா கல்லூரி பேராசிரியர் செம்மலர் ஆகியோர் முன்னிறுந்து மக்கள் பொதுவிசாரணையை நடத்தினர்.

தமிழகமும் சாதிய வன்கொடுமைகளும்
தமிழகமும் சாதிய வன்கொடுமைகளும்

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

மக்கள் பொதுவிசாரணையில், கடந்த ஓராண்டு காலத்தில் தமிழகத்தை உலுக்கிய வேங்கைவயல் குடிநீர்தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம், நாங்குநேரியில் பள்ளிச்சிறுவன் சின்னத்துரை மற்றும் அவனது தங்கை ஆகியோர் ஆதிக்கசாதிவெறிபிடித்த சக மாணவர்களால் வெட்டுப்பட்ட விவகாரம், மேல்பாதி, தீவட்டிப்பட்டி போன்ற கிராமங்களில் அரங்கேறிய சாதிய வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்டு நேருரையாற்றினார்கள்.

தொடர்ச்சியாக ஆண்டுதோறும் மக்கள் பொது விசாரணையை எவிடன்ஸ் அமைப்பு நடத்தி வருகிறது. தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் எங்கே அரங்கேறினாலும், சம்பவ இடத்திற்கு தனது குழுவினருடன் நேரடியாகவே சென்று சம்பவத்தில் தொடர்புடைய மக்களிடம் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவருவது முதல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வழக்கை நகர்த்திசெல்வது அவர்களின் மறுவாழ்வுக்கும் உதவி செய்வது வரையில் அவர்களுக்கு ஆதரவாக துணை நிற்கும் அமைப்பாகவும் எவிடன்ஸ் அமைப்பு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

“இந்த பொதுவிசாரணை என்பது அரசு எந்திரங்களை குறை கூறுவதற்காக நடத்தப்படவில்லை. வன்கொடுமைகளைத் தடுக்க வேண்டிய அரசு எந்திரங்களின் பிழைகளை தரவு ரீதியாகவும் ஆய்வு ரீதியாகவும் கண்டறிந்து அவற்றை சரிசெய்து அரசு இயந்திரங்களை திறம்பட செயல்பட வைப்பதற்கான முயற்சியாகவே “ இந்த மக்கள் பொதுவிசாரணை நடத்தப்படுவதாக தெரிவிக்கிறார் எவிடன்ஸ் கதிர்.

”ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் சுமார் 1400 வழக்குகள் பதிவான நிலையில், தொடர்ச்சியாக கடந்த இரண்டு ஆண்டுகளில் சராசரியாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான சாதிய வன்கொடுமை வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்த வழக்குகளிலும் 3 முதல் 4 சதவீதம் வரையில்தான் தண்டனையும் வழங்கப்படுகிறது. எஞ்சிய வழக்குகள் நீதிமன்றத்தில் தேங்கிக்கிடக்கின்றன. 1992 முதல் 6000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.

தமிழகமும் சாதிய வன்கொடுமைகளும்
தமிழகமும் சாதிய வன்கொடுமைகளும்

தமிழகம் முழுவதும் சாதிய வன்கொடுமைக்கு எதிராக பதியப்படும் வழக்குகளை ஆராய்ந்து உரிய தீர்வுகளை காண, தமிழக முதல்வர் தலைமையிலான 63 பேர் கொண்ட கமிட்டி இருக்கிறது. ஆண்டுக்கு இரண்டுமுறை கூடி விவாதிக்க வேண்டும். ஆனால், பெயரளவிலான கமிட்டியாகவே இருக்கிறது. செயல்பாடு இல்லை.

வன்கொடுமைகளை அவை அறங்கேறுவதற்கு முன்பாகவே தடுக்க வேண்டும். அவ்வாறான நடைமுறையே இல்லை. தமிழகத்தின் பல இடங்களில் கோயில்களில் நுழைய தடை நீடிக்கிறது. அவற்றுள் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் அந்தந்த அதிகார வரம்பில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகளோ, துறை அமைச்சரோ பட்டியலின மக்களை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்லலாமே? அதையெல்லாம் செய்வதில்லை.

மிகக்கொடுமையான விசயம். சாதிய வன்கொடுமை வழக்குகளில் கவுண்ட்டர் கேஸ் பதியப்படுவதுதான். 70 விழுக்காடு வரையில் பொய்வழக்குகளாவே பதியப்பட்டிருக்கின்றன. எஃப்.ஐ.ஆர். போடுவதற்கு முன்பாகவே, சம்பந்தபட்ட விசாரணை அதிகாரி முதற்கட்ட விசாரணையை நடத்தி பொய் தகவலின் அடிப்படையில் இந்த வழக்கு போடப்பட்டிருக்கிறது என்று நிராகரிக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்வதில்லை. குறிப்பாக, சாதிய வன்கொடுமை வழக்குகளின் விசாரணை அதிகாரியாக செயல்படும் டி.எஸ்.பி. அல்லது ஏ.சி அளவிலான அதிகாரிகளுக்கு சாதிய வன்கொடுமைகள் பற்றிய போதுமான அறிவும் வழக்குகளை கையாண்ட பரிட்சயமும் இருக்க வேண்டுமென்று சட்டம் கூறுகிறது. ஆனால், அதுபோன்ற தகுதிவாய்ந்த அதிகாரிகளால் வழக்குகள் கையாளப்படுவதில்லை.

தமிழகமும் சாதிய வன்கொடுமைகளும்
தமிழகமும் சாதிய வன்கொடுமைகளும்

தமிழகத்தில் தொடர்ச்சியாக சாதிய வன்கொடுமைகள் நிகழும் மாவட்டங்களை கண்டறிந்து சாதிய வன்கொடுமை மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும்.” என்பதாக தெரிவிக்கிறார், எவிடன்ஸ் கதிர்.

”கவுண்ட்டர் கேஸ் பதியப்படுவது முக்கியமான பிரச்சினை. சாதிய வன்கொடுமைகளுக்கென்றே தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. குறைந்தபட்சம் தமிழக அளவிலாவது அத்தகைய சட்டத்தை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக செயல்படும் எவிடன்ஸ் போன்ற அமைப்புகளால், தனிநபர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான முழுமையான பாதுகாப்பை வழங்கிவிட முடியாது. மாவட்டங்கள் தோறும் சாதிய வன்கொடுமைகளால் பாதிக்கப்படும் மக்களை அரவணைப்பதற்கான பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.” என்ற கோரிக்கையை முன்வைத்தார், ஜெயனா கோத்தாரி.

”சாதிய சிந்தனைகளை அகற்றி மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பள்ளிகளே இன்று சாதிய பிடியில் சிக்கித் தவிப்பதாக” குறிப்பிட்ட, எட்வின், “நாங்குநேரி விவகாரத்தில் ஆசிரியரே எதிர்த்தரப்பிற்கு போட்டுக் கொடுக்கும் வேலையை செய்திருக்கிறார். பள்ளிகளின் செயல்பாட்டை கண்காணிக்கும் அதிகாரம் கொண்ட பள்ளி ஆய்வாளர்கள் பள்ளியை முறையாக ஆய்வு செய்தார்களா? அடுத்து, பொய்வழக்கு போடுவதாக சொல்கிறார்கள். எஸ்.சி., எஸ்.டி. சட்டப்பிரிவில் அந்தந்த மாவட்டத்தின் எஸ்.பி., கலெக்டர், மாஜிஸ்திரேட் ஆகிய மூன்று பேரின் ஒப்புதலோடுதான் வழக்கே போட முடியும். அப்படி இருக்கையில் எப்படி பொய்யாக எஃப்.ஐ.ஆர். போட முடியும்?” என்பதாக கேள்வி எழுப்பினார்.

மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன்
மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன்

“முன்பைவிட சாதிய வன்கொடுமைகள் குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே அதிகரித்துவிட்டதாக, ” வேதனை தெரிவித்த வழக்கறிஞர் எழில் கரோலின், “பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து எவிடன்ஸ் என்ற வார்த்தை மிக எளிதாக புழங்குகிறது என்றால், அந்தளவுக்கு அந்த மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அமைப்பாக எவிடன்ஸ் மாறியிருக்கிறது. களத்தில் அதன் செயல்பாடு அமைந்திருக்கிறது. பிரச்சினைகளை வீதிக்கு கொண்டு வாருங்கள். இழிவாக நடத்துபவர்களை திருமா சொல்வதைப்போல திருப்பி அடியுங்கள். கல்வி ஒன்றுதான் நம்மை உயர்த்தும். தம்பி சின்னத்துரையைப்போல கல்வியை இறுகப்பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்.” என்பதாக பேசினார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

“இதுபோன்ற மக்கள் பொதுவிசாரணையில் கலந்து கொள்வதற்கு, பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை காது கொடுத்து கேட்பதற்கு தனி மன தைரியம் வேண்டும். பட்டியலின மக்கள் அனுதினம் போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார்கள். குறிப்பிட்ட சாதியில் பிறந்ததே பாவம். சாதிய வன்கொடுமைகள் குறித்த செய்தி முன்னணி ஊடகங்களில் செய்தியாக வெளிவருவதற்கே எவிடன்ஸ் அமைப்பு செய்யும் பணி அதன் செயல் இயக்குநர் கதிரின் முன்முயற்சி மகத்தானது. இதனை எல்லோராலும் செய்துவிட முடியாது. எங்களைப் போன்றவர்களுக்கு உத்வேகத்தையும் நம்பிக்கையையும் உங்களிடமிருந்துதான் பெறுகிறோம்.” என்பதாக உணர்ச்சிப்பெருக்கோடு குறிப்பிட்டார், பேராசிரியர் செம்மலர்.

எந்தவொரு பிரச்சினையிலும் அதன் தொடக்கம் முதல் இறுதிவரையிலான எவிடன்ஸ் அமைப்பின் பங்களிப்பை குறிப்பிட்டு பேசினார் வழக்கறிஞர் சந்தனம்.

முற்போக்கு தமிழகத்தின் சாதிய முகத்தை திரைகிழித்த பொதுவிசாரணை !
முற்போக்கு தமிழகத்தின் சாதிய முகத்தை திரைகிழித்த பொதுவிசாரணை !

இடதுசாரி இயக்கத்தின் வழக்கறிஞராக அறியப்படும் ப.பா.மோகன், எவிடன்ஸ் அமைப்புடன் இணைந்து தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த சாதிய வன்கொடுமை வழக்குகளில் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் எழுபது வயதை கடந்த நிலையிலும் உற்சாகமாகவும் உறுதியுடனும் சட்டநுணுக்கங்களோடும் வாதிடும் திறமையையும் சுட்டிக்காட்டிய எவிடன்ஸ் கதிர் இதுபோன்ற வழக்கறிஞர்கள் தமிழகத்தில் விரல்விட்டு எண்ணும் அளவில்தான் சொற்பமாகவே இருக்கிறார்கள் என்பதாக குறிப்பிட்டார். இருப்பினும், இவ்வளவு அர்ப்பணிப்போடு பங்களிப்பை செலுத்தினாலும், தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞராக அரசின் சார்பில் நியமிக்கப்பட்டிருப்பினும், அதற்குரிய வழக்குச் செலவுக்கான ஊதியத்தைக்கூட அரசு வழங்காமல் இழுத்தடிக்கப்படும் வேதனையான சம்பவத்தையும் சுட்டிக்காட்டினார்.

இதனையெல்லாம் பொருட்படுத்தாத ப.பா. மோகன், தன் வாழ்நாள் முழுவதும் தன்னால் இயன்ற அளவில் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பேன் என்பதாக குறிப்பிட்டவர், ”உங்களிடமிருந்துதான் தைரியத்தை எடுத்து செல்கிறேன்” என்றார் நெகிழ்ச்சியோடு.

மிக முக்கியமாக, சட்டப்புத்தகத்தில் படித்து, நீதிமன்ற வழக்குகளை கையாண்டதில் கிடைத்த அனுபவத்தைக் காட்டிலும், மேலவளவு வழக்கை நடத்திய சமயத்தில் அந்த மக்களோடு மக்களாக நெருங்கிப் பழகிய தருணத்தில் அவர்களது வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொண்டதே அதிகம் என்பதாக பேசினார் ப.பா.மோகன். சாதிய வன்கொடுமை வழக்குகளில் சாதிய காப் பஞ்சாயத்தைவிட போலீசு நிலையங்களில் நடைபெறும் பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கைதான் அதிகம் என்பதாக குறிப்பிட்டார்.

புதுக்கோட்டை கொப்பம்பட்டையைச் சேர்ந்த 11-வது படிக்கும் பட்டியலின மாணவன் மேல்சாதியைச் சேர்ந்த மாணவியோடு நண்பர்களாக பழகியதற்காக, சக மாணவர்களால் அவமானப்படுத்தப்பட்டு அவமானம் தாங்காமல் தூக்கில் தொங்க நேர்ந்த துயரத்தை அவனது பெற்றோர்கள் விவரிக்க அரங்கில் நிறைந்திருந்தோரின் கண்கள் குளமாகியிருந்தது.

சென்னைப் பள்ளிக்கரணையில் சாதிய ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பிரவீனின் தாயார், ”வேற சாதி பொண்ண கல்யாணம் செஞ்சி கூட்டிட்டு வந்துட்டானு போலீசு ஸ்டேஷனில் வச்சி விசாரிச்சப்பவே, 4 மாசத்துல உன் புள்ள செத்துபோயிடுவான். பேசாம அந்த பொண்ண அப்பா அம்மாவோட அனுப்பி வச்சிடுங்கனு போலீசு மிரட்டுச்சு..”

“நான் பெத்த மவனே போயிட்டான். உன்னைய என் புள்ளையவிட ஒரு படி மேல வச்சி காப்பாத்துறேன்னு நம்பிக்கை சொல்லி வச்சிருந்தேன். பெத்த அப்பா, அம்மாவகூட அப்பா அம்மானு சொல்ல மாட்டா… வெறுமனே பேர சொல்லிதான் சொல்லுவா…  என் புருசனை கொன்னது என் குடும்பம்தான் அவங்களையும் எஃப்.ஐ.ஆர்.ல சேருங்கனு சொன்னா. கடைசியில அவளும் போயி சேர்ந்துட்டா… ஆணவக்கொலைக்குன்னு தனிச்சட்டம் கொண்டு வாங்க…” என விவரித்த போது, அனைவரின் நெஞ்சமும் கனமாகிக் கிடந்தது.

“என்னை வெட்டுனவனும் படிக்கனும்”னு மாமேதைகளின் புலமையான வரிகளுக்கு நிகரான தனது யதார்த்தமான மொழியால் உணர்வை வெளிக்காட்டி பலரின் மனதை தைத்த, நாங்குநேரி சின்னத்துரை, “வேற ஸ்கூல் மாத்துங்க. இல்லை, மெட்ராஸ்க்கு போயிட்டு கூலி வேல செஞ்சாச்சும் குடும்பத்தை காப்பாத்துறேன்னு” தாயாரிடம் சொல்ல நேரிட்ட, தாம் வெட்டுப்படுவதற்கு முன்பாக சந்தித்த ஆதிக்கசாதிவெறி பிடித்த மாணவர்களின் சித்திரவதைகளை பட்டியலிட்டார். நிறைவாக, “தலித் என்பதற்கு பெருமைப்படுகிறேன்” என்பதாக சொன்னபோது அரங்கம் மெய்சிலிர்த்துப் போனது.

சாதிய முகத்தை திரைகிழித்த பொதுவிசாரணை
சாதிய முகத்தை திரைகிழித்த பொதுவிசாரணை

சாதிய வன்முறையோடு பெண்களுக்கு எதிரான வன்கொடுமையையும் எதிர்கொண்ட விருதுநகர் அருப்புக்கோட்டை சகோதரிகளுக்கு நேர்ந்த கொடுந்துயரத்தை அச்சிறுமிகளின் தாயார் எடுத்துரைக்க, கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குக்கு ஆளான அச்சிறுமிகள் இருவருக்கும் முறையான கவுன்சலிங்கும் உரிய இழப்பீடும் வழங்கப்படாததை சுட்டிக்காட்டியதோடு சமூகத்தின் கவனத்தையே பெறாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட அவலத்தையும் இடித்துரைத்தார் பேராசிரியர் செம்மலர்.

“அப்பாவ காலேஜுக்கு வர வேணாம்னு சொல்லும்மா. பார்க்கிறவன் காலில்லாம் விழுந்துடறாரு. கூட இருக்க பசங்க மதிக்கவே மாட்றாங்க. அவமானமா இருக்கு.”னு தாயாரிடம் சொன்ன மருத்துவக்கல்லூரி மாணவன் அஜித்குமார் சந்தித்த அவமானங்களை அவரது பெற்றோர்கள் விவரிக்க மொத்த அரங்கமும் அமைதியானது. மருத்துவக்கல்லூரியில் சேருவதென்பதே பெரும்பாடு. அதிலும், எழுத்துத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் செய்முறைத்தேர்வுகளில் வேண்டுமென்றே குறைத்துப்போட்டு பழிவாங்கப்பட்டதை எவிடன்ஸ் கதிர் சுட்டிக்காட்ட, இது இன்ஸ்டியூஷனல் மர்டர் என்பதாக குறிப்பிட்டார் வழக்கறிஞர் ப.பா.மோகன்.

நேற்றுவரை ஊருக்கு பொதுவான நீர்த்தொட்டியிலிருந்து தண்ணீர் பெற்றுவந்த நிலையில், இன்று பட்டியலின மக்களுக்கென தனி நீர்த்தேக்க தொட்டியிலிருந்து தண்ணீரைப் பெறுகிறார்கள் என்ற ஆதிக்க சாதிவெறியர்களின் ஆத்திரம்தான், மனித மலம் கலக்கப்பட்டதன் பின்னணியை விவரித்தார், வேங்கைவயல் மோகன்.  ”மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மஞ்சள் மஞ்சளாக மனித மலம் கட்டி கட்டியாக இருப்பதை போலீசை அழைத்துக் காட்டியவர்கள் இந்த மக்கள். முதன் முதலாக, அந்த எவிடன்ஸை அழித்தது போலீசுதான்.” என்றார் ப.பா.மோகன். பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக சித்தரித்து அவர்களை கைது செய்ய துடித்த போலீசின் சதியை முறியடித்த சம்பவத்தை விவரித்தார் எவிடன்ஸ் கதிர். திராவிட மாடலில் ஆதிதிராவிடர்களும் இருக்கிறார்களா? என்ற கேள்வியையும் முன்வைத்தார்கள் எவிடன்ஸ் கதிரும் பேராசிரியர் செம்மலரும். 

சாதி மாறி திருமணம் செய்து கொண்டதற்காக கணவரின் குடும்பத்தாரால் கொல்லப்பட்ட கடமலைக்குண்டு ரம்யா, ஒன்றுமில்லாத வாய்த்தகராறில் பள்ளன் கையால் அடி வாங்கிவிட்டு சும்மா விடுவதா என்ற வெறியால் கொல்லப்பட்ட செங்கோட்டை ராஜேஷ், கள்ளக்குறிச்சி ரேகா உள்ளிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சாதிய வன்கொடுமை பாதிப்பிற்குள்ளானவர்களின் நேருரைகள் முற்போக்காக அறியப்படும் தமிழகத்தின் சாதிய முகத்தை திரைகிழித்தன.

ஆதிரன். படங்கள்: ஷாகுல்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.