பதின் பருவத்தை குறி வைக்கும் நிகோடின் வேப்பிங் – எனும் பேராபத்து !
எனது குடும்பத்தினர், என்னுடன் பணி செய்வோர், என்னை சந்திக்கும் நோயர் பலரிடம் கேட்டதில் பெரும்பான்மையினருக்கு வேப்பிங் என்றால் இன்னதென்று தெரியாமல் இருப்பதை அறிய முடிகின்றது.
பார்ப்பதற்கு “பென் ட்ரைவ்” போன்றும் சிறிய அளவில் இருக்கும் பாடி ஸ்ப்ரே போலத் தோற்றம் கொண்ட இந்த பொருட்கள் – வேப்பிங் கருவிகள் என்றால் நம்புவீர்களா?
21ஆம் நூற்றாண்டு பள்ளி செல்லும் மாணவ மாணவியர் வளர் இளம் பருவத்தினர் அவர்தம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கட்டாயம் இது குறித்து விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
வளர்ந்த நாடுகளில் புகைப் பழக்கத்துக்கு மாற்றாக புகைப் பழக்கத்தை விடுவதற்காக கொண்டு வரப்பட்டது தான் வேப்பிங் கருவிகள் சிகரெட் பீடி சுருட்டு போன்றவற்றில் புகையிலையை ( புகையிலையில் தான் போதை வஸ்து – நிகோட்டின் அடங்கியுள்ளது) அதனுடன் பல வேதிப் பொருட்கள் இணைத்து கூட்டாக எரிப்பதன் மூலம் வரும் புகையை உள்ளிளுப்பது தான் புகைத்தல் ஆகும்.
அதுவே நிகோடினை எளிதில் ஆவியாகும் வேதிப் பொருட்களுடன் இணைத்து திரவமாக்கி , சிறிய பேட்டரி மூலம் இயங்கும் கருவி மூலம் இந்த திரவத்தை சூடாக்கும் போது வரும் ஆவியை உள்ளிளுப்பது தான் வேப்பிங் ஆகும்.
இதைப் பற்றி வயது முதிர்ந்தோர் பெற்றோர் வயதில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். எனினும் நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள வளர் இளம் பருவத்தில் இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள். பலருக்கும் இது குறித்து தெரிந்திருக்க வாய்ப்புண்டு.
இந்த வேப்பிங் குறித்த விழிப்புணர்வு மற்றும் அறிவியல் பூர்வமான ஆதரங்களைப் பேசுவதே இக்கட்டுரையின் தலையாய நோக்கம்.
வயது வந்த சிகரெட் பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களை அதில் இருந்து மீட்டெடுப்பதற்கு என்று சந்தைக்கு வந்தவை வேப்பிங் கருவிகள்.
இந்த கருவிகளில், நிகோடின் திரவ நிலையில் இருப்பதால் ஆவியாகி அதை நுகர்வதால் போதை கிடைக்கிறது.
எனவே புகைப்பதும் அதனால் புகையை உள்ளிளிப்பதனால் உடலுக்கு ஏற்படும் தீங்கை விட ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு என்பது அறிவியல் பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை.
பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைப் பணிகளும் கூட இந்த விசயத்தை உறுதி செய்துள்ளன. அதாவது வயது வந்தோரில் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் இந்த வேப்பிங் கருவிகளுக்கு மாறும் போது அவர்கள் புகைப்பழக்கத்தை கைவிட்டு விடுவது ஆய்வுப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிறகென்ன இந்த வேப்பிங் கருவிகளை உலகம் முழுவதும் புகைப் பழக்கத்தில் இருந்து விடுவிக்கும் மருத்துவமாக அங்கீகரித்து விட வேண்டியது தானே?
அது தான் இல்லை. பிரிட்டனில் இந்த வேப்பிங் சாதனங்கள் பிரபலமடையத் தொடங்கியதும் புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள் எண்ணிக்கை 2011இல் 20% ஆக இருந்தது 2023இல் 12% ஆக குறைந்துள்ளது.
ஆனால் வேப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை 2023 இல் வரலாற்றில் இல்லாத அளவான 51லட்சம் என்ற எண்ணிக்கையில் உள்ளது. இதில் 16% பேர் 16 முதல் 24 வயதுக்குட்பட்டோர். 8% பேர் 11 முதல் 17 வயதுக்குட்பட்டோர்.
பிரிட்டனில் 2021இல் 200 பேரில் ஒருவர் வேப்பிங் செய்து வந்த நிலையில் 2023 இல் 28 பேருக்கு ஒருவர் வேப்பிங் செய்து வருகிறார். கிட்டத்தட்ட 9% பிரிட்டன் மக்கள் தொகை வேப்பிங் கருவிகள் வாங்கி பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றனர். இதில் பெரும்பகுதி , பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
வயது வந்த புகைப்பிடிப்பாளர்களை புகைப் பழக்கத்தில் இருந்து உய்விக்க வந்த வேப்பிங் கருவிகள் இதுவரை புகையே பிடித்திருந்த பள்ளி கல்லூரி மாணவ மாணவியரிடையே முதல் போதை வஸ்துவாக இடம்பிடிக்கத் துவங்கியிருக்கிறது.
இதில் இந்த வேப்பிங் கருவிகள் கால மாற்றத்துக்கு ஏற்றவாறு முதலில் லைட்டர் வடிவத்தில் வந்தன. தற்போது மிகச் சிறிய அளவில் பென் ட்ரைவ், ஐ பாட், எம்பிஏ வடிவில் வரத் துவங்கிவிட்டன. பார்ப்பதற்கு கீ செய்தால் தொங்க விடும் பொருள் போல இருக்கும். பார்ப்பதற்கு லிப் ஸ்டிக் போல இருக்கும் வடிவில் வேப்பிங் கருவிகள் கிடைக்கின்றன.
சிறு பிள்ளைகளும் கல்லூரி மாணவ மாணவியரும் இதைப் பயன்படுத்தி அடிமைப்பட வாய்ப்புள்ளதைக் கருதி இந்திய அரசு 2019ஆம் ஆண்டு ஈ சிகரெட்டுகளின் உற்பத்தி கொள்முதல் விற்பனை ஆகியவற்றைத் தடை செய்ய சிறப்புச் சட்டம் தீட்டியிருப்பது பாராட்டுதற்குரியது.
இந்தியா முழுவதும் வேப்பிங் சாதனங்கள் விற்பதற்கு தடை செய்யப்பட்டிருந்தாலும் கள்ளச் சந்தையில் இந்த சாதனங்கள் கிடைக்கின்றன.சமீபத்தில் இந்தியாவில் வேப்பிங் சாதனங்கள் நுகர்வு குறித்து செய்யப்பட்ட ஆய்வில் பங்கேற்றோரில் 23% பேர் தாங்கள் வேப்பிங் செய்வதாகக் கூறியுள்ளனர்.
கள்ளச் சந்தையில் சட்டத்துக்குப் புறம்பாக வேப்பிங் சாதனங்கள் விற்கப்படுவதும் அவ்வப்போது நடக்கும் திடீர் பரிசோதனைகளில் சிக்குவதும் வாடிக்கையாகி வருகின்றது.
வேப்பிங் மூலம் நுகரப்படும் திரவத்தில் அசிட்டைல் எனும் ரசாயனம் கலப்படமாக இருக்குமானால் தீவிர நுரையீரல் அழற்சி நோய் ஏற்படும் வாய்ப்பும் நுரையீரலின் காற்றுப் பாதைகளில் நிரந்த அடைப்பும் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
இவையன்றி திரவத்தை ஆவியாக்கி நுகரும் தன்மை இருப்பதால் அருகில் இருப்பவர்களும் இதை நுகரும் வாய்ப்பும் இதனால் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.
சட்டம் கிடுக்குப்பிடியாக இருந்தாலும் கள்ளச் சந்தையில் ஆன்லைன் இணைய தளங்களிலும் ரூபாய் 1500 முதல் வேப்பிங் கருவிகள் கிடைக்கின்றன என்பது தெரிகிறது. இது ஆபத்தான போக்காகும். மாணவ மாணவிகள் தங்களுக்குள் பணத்தை சேர்த்து வைத்து வேப்பிங் கருவி வாங்கி அவர்களுக்குள் பகிர்ந்து உபயோகித்துக் கொள்ளும் போக்கும் இருப்பது தெரிகிறது.
பிரிட்டன் தற்போது சந்தித்து வரும் வேப்பிங் சார்ந்த பிரச்சனைகளால் அங்கு வருகிற ஜூன் 2025 முதல் ஒருமுறை உபயோகிக்கும் வேப்பிங் கருவிகளுக்கு தடை விதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து வேப்பிங் மற்றும் ஈ சிகரெட்டுக்கான தடை தொடர்கிறது. மாணவ மாணவிகள் – புகைப்பதைக் காட்டிலும் வேப்பிங் செய்வது குறைவான உடல் சார்ந்த பிரச்சனைகளைக் கொண்டது என்று நம்புகின்றனர் அது தவறான நம்பிக்கையாகும்.
வேப்பிங் மூலம் நிகோடினுக்கு அடிமைத்தனம் உருவாகி விடும். இது ஆரம்ப கட்ட போதைப் பொருளாக வாழ்க்கையில் உள்ளே வந்து பின்பு வரிசையாக புகை, கஞ்சா, மது என்று அனைத்தையும் பின்னாட்களில் ருசித்துப் பார்க்கும் மனநிலையை உண்டாக்கும்.
எனவே இளைஞர்கள், வளர் இளம் பருவத்தினர் இந்த வேப்பிங்கில் இருந்து தள்ளியே இருப்பது நல்லது. வேப்பிங் கலாச்சாரம் நம்மிடையே பரவி விடாமல் நாம் தடுக்க வேண்டும். அதற்கு நாம் முதலில் விழிப்புணர்வு பெற வேண்டும்.
ஆதாரங்களுக்காகப் படித்தவை
- https://theleaflet.in/no-smoking-day-indias-e-cigarette-ban-goes-up-in-smoke-as-vape-sale-persists/
- https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC9810289/
- https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC9938321/
4. https://timesofindia.indiatimes.com/city/chennai/smoke-without-fire-e-cigs-make-a- killing/articleshow/108451001.cms
- https://bbc.in/3Yf4B4F
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர், சிவகங்கை