அங்குசம் பார்வையில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’
தயாரிப்பு : ,’வுண்டர்பார் பிலிம்ஸ் (பி)லிமிடெட் ’ & ’ஆர்.கே.புரொடக்ஷன்ஸ்’ கஸ்தூரி ராஜா & விஜயலட்சுமி கஸ்தூரி ராஜா. எழுத்து—இயக்கம் : தனுஷ். தமிழ்நாடு ரிலீஸ் : ‘ரெட் ஜெயண்ட்’ செண்பகமூர்த்தி & அர்ஜுன் துரை. நடிகர்—நடிகைகள் : பவிஷ் நாராயணன், அனிகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா வாரியர், ரம்யா ரங்கநாதன், சரத்குமார், சித்தார்த்தா ஷங்கர், வெங்கடேஷ் மேனன், சரண்யா பொன்வண்ணன், ’ஆடுகளம்’ நரேன், பிரியங்கா அருள்மோகன்[ ஒரே ஒரு பாட்டுக்கு ] உதய்மகேஷ், ராபியா கதூன், ஒளிப்பதிவு : லியான் பிரிட்டோ, இசை : ஜி.வி.பிரகாஷ்குமார், எடிட்டிங் : ஜி.கே.பிரசன்னா, ஆர்ட் டைரக்டர் : ஜாக்கி, காஸ்ட்யூம் டிசைனர் : காவ்யா ஸ்ரீராம், நடனம் : பாபா பாஸ்கர், நிர்வாகத் தயாரிப்பாளர் : ஸ்ரேயாஸ் ஸ்ரீனிவாசன், தயாரிப்பு நிர்வாகி : ரமேஷ் குச்சிராயர். பி.ஆர்.ஓ : ரியாஸ் கே.அஹ்மத் & பாரஸ் ரியாஸ்.மெயின் டைட்டிலுக்கு கீழே ‘இது வழக்கமான காதல் கதை’ என்ற டேக்லைன் போட்டவுடனேயே, ”இது வழக்கத்துக்கு மாறாகத்தான் இருக்கும்” என நம்ம பிரைய்னுக்குள் ஃப்ளாஷ் அடித்தது.
அதே போலத்தான் படத்தின் ஹீரோ பிரபு [ பவிஷ் நாராயணன், தனுஷின் அக்கா மகன் ] சரக்கும் பாட்டுமாக படத்தை ஆரம்பித்தார். பாட்டு முடிந்ததும் பளாரென கன்னத்தில் அறைந்து கனவைக் கலைக்கிறார் அப்பா ஆடுகளம் நரேன். அடுத்த அறை அம்மா சரண்யா பொன்வண்ணனிடமிருந்து. பிரபுவுக்கு பிரியா வாரியரை பெண் பார்க்கப் போகிறார்கள். பிரியாவும் பிரபுவும் பழகுகிறார்கள், சரக்கடிக்கிறார்கள், லவ் பண்ணுகிறார்கள்.
பிரியாவிடம் தனது எக்ஸ் லவ்வர் நிலாவுடனான [ அனிகா சுரேந்திரன் ] லவ் எலிசோடையும் அது பிரேக்கப்பான கதையையும் இப்போது அவளுக்கு வேறொருவனுடன் கல்யாணம் ஆகப் போகும் கதையும் சொல்கிறார் பவிஷ். “அவ கல்யாணத்துக்குப் போ, நீ தனியா திரும்பி வந்தா நாம கல்யாணம் பண்ணிப்போம்” என்கிறார் பிரியா வாரியர்.
நிலாவுக்கு பிரபு மீது என்ன கோபம், ஏன் இன்னொருவனை கல்யாணம் பண்ணும் முடிவுக்கு வந்தார்? இதன் இளமைக் கிளைமாக்ஸ், தான் இந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.
‘பவர் பாண்டி’ மூலம் டைரக்டராக எண்ட்ரியாகி கவனம் ஈர்த்த தனுஷ், ‘ராயன்’மூலம் ஹீரோ & டைரக்டராக வெற்றி பெற்று, இந்த ‘நி.எ.மே.எ.கோ’ மூலம் நல்ல எழுத்தாளராக, திரைக்கதை வடிமைப்பாளராக, ஃப்ரஷ் சீன்ஸ் கிரியேட்டராக வெற்றிக் கொடி நாட்டிவிட்டார் என்றே சொல்லலாம். படம் முழுவதும் இளமைத்துள்ளல் ஆர்ப்பரித்து 50 வயதுக்கு மேற்பட்டவர்களையும் வசியப்படுத்தும் 2கே கிட்ஸ் டைரக்டராகவே ஷைன் பண்ணியுள்ளார் தனுஷ். வாழ்த்துக்கள் சகோதரா…
கேட்டரிங் டெக்னாலஜி படித்து ஸ்டார் ஓட்டல் செஃப்ப்பாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஹீரோ பவிஷ் ‘துள்ளுவதோ இளமை’ யில் கொஞ்சம் சதை போட்டிருந்தால் தனுஷ் எப்படியிருப்பாரோ அப்படி இருக்கிறார். பாடி லாங்குவேஜில் கூட சில சீன்களில் தனுஷை நினவுபடுத்துகிறார். ரத்த உறவல்லவா? நடிப்பிலும் பாஸ்மார்க் வாங்கிவிட்டார். இவருக்கு ஜோடியாக, சாப்பாட்டுப் பிரியையாக, மல்டி மில்லினர் சரத்குமாரின் மகளாக அனிகா சுரேந்திரன். ஒரு கல்யாணப் பார்ட்டியில் பவிஷிடம் கருவாட்டுக் குழம்பு கேட்பது, இளையராஜா & ஏ.ஆர்.ரகுமான் ஃபேன் செல்லச் சண்டை, இன்னொருவனுடன் நடக்கப் போகும் கல்யாணத்தன்று கதறியழுவது என பல சீன்களில் அனிகா சூப்பர் ஸ்கோர் என்றால், கோவாவில் அனிகாவின் தோழியாகவும் கல்யாண இன்சார்ஜாகவும் இருக்கும் அஞ்சலி [ ரம்யா ரங்கநாதன் ] மனசை அள்ளிவிட்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இளைஞர்கள் பட்டாளத்தில் பவிஷின் திக்ஃபிரண்டாக வரும் ராஜேஷ் கேரக்டர், ரவி கேரக்டர், ஸ்ரேயே கேரக்டர் என எல்லா கேரக்டர்களுக்குமே படு ஸ்மார்ட் & ஸ்கில் ஆர்ட்டிஸ்டுகளை செலக்ட் பண்ணியிருக்கார் டைரக்டர் தனுஷ். ”காதலிக்கும் போது மரமே விழுந்தாலும் தெரியாது. ஆனா அவளுக்கு இன்னொருத்தனுடன் கல்யாணம் ஆகும் போது மருதாணி வக்கிறதப் பார்த்தாலே மனசு தாங்க முடியல”, “அப்ப கருவாட்டுக் குழம்பு, இப்ப சாம்பார் சாதமா?” இது போன்ற தனுஷின் அனுபவ டயலாக் அங்கங்கே டாலடிக்கிறது.
படம் முழுவதும் ‘யங்க் ஷைன்’ பளிச்சிட மெனக்கெட்டிருக்கிறார் கேமராமேன் லியோன் பிரிட்டோ. பகலிலும் இரவிலும் கோவாவின் அழகை அள்ளிவந்துருக்கார். ‘பொயட்டு’ [ அதாவது கவிஞரு] தனுஷின் புலம்பல் வரிகளுக்கும் துள்ளல் வரிகளுக்கும் உயிரூட்டியிருக்கார் நம்ம ஜி.வி.பிரகாஷ். சில சீன்களில் பின்னணி இசையில் ஜி.வி.பி.க்கு ‘இசைஞானி’ உதவியிருக்கிறார்.
சரக்கடிக்கும் சீன்களை குறைத்திருக்கலாம், கூடுமானவரை தவிர்த்திருக்கலாம். மற்றபடி படத்தில் ஏழெட்டு சீன்கள் தவிர, பெரும்பாலானவற்றில் ரிச் கேர்ள்ஸ் & பாய்ஸ், ரிச் லொக்கேஷன், ரிச் காஸ்ட்யூம், எல்லாமே காஸ்ட்லியாக தெரிந்தாலும் நமக்குள் ஒரு ஹோம்லி மைண்ட் செட்டை செட்டப் பண்ணிவிட்டது இந்த ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’.
’வி ஆர் வெயிட்டிங் ஃபார் ‘நி.எ.மே.எ.கோ’—2’
— மதுரை மாறன்.