பாரத ரத்னா விருதால் கலைஞருக்குப் பெருமையில்லை !
அன்புள்ள திராவிட இயக்கத்து வீரர் தங்கபாண்டியன் அவர்களின் மகள் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் சுமதி (எ) தமிழச்சி அவர்களுக்கு, வணக்கம்.
மிக அண்மையில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு “பாரத ரத்னா” என்னும் இந்திய ஒன்றியத்தின் மிக உயரிய விருதை அரசு வழங்க வேண்டும் என்று ஆற்றிய உரை கண்டு மனம் மகிழவில்லை. மாறாக வேதனை கொண்டது. காரணம், பேரறிஞர் அண்ணா இந்தியாவைப் பற்றி குறிப்பிடும்போது இந்தியத் துணைக்கண்டம் என்றுதான் குறிப்பிடுவார். பாரதம் என்று அண்ணா ஒருபோதும் இந்தியாவை அழைத்ததில்லை. முத்தமிழ் அறிஞர் கலைஞரும் அப்படியே.

முத்தமிழ் அறிஞர் கலைஞரும் இந்தியாவை உருவாக்கிய சிற்பி இல்லை. தமிழ்நாட்டை நவீனப்படுத்திய, பொதுமைப்படுத்திய, பகுத்தறிவு சிந்தனை கொண்ட மாநிலமாக மாற்றியமைத்தவர். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டம் இயற்றியவர். உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் என்று சட்டம் இயற்றிப் பண்ணையார்களின் கொட்டத்தை ஒடுக்கியவர். பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் என்பதை முழங்கிய அய்யன் திருவள்ளுவருக்குக் கோட்டம் அமைத்தவர். 2000ஆம் ஆண்டில் குமரி முனையில் வானுயுர சிலை அமைத்தவர். சனாதனத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் சாதி, மதச் சிந்தனைகளுக்குச் சம்மட்டி அடி கொடுத்தவர்.

கலைஞரின் சிந்தனைக்கு நேர் எதிர்கொண்ட இன்றைய மதவாதச் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட மோடி அரசு எப்படிக் கலைஞருக்குப் பாரத ரத்னா விருது கொடுக்க முன்வரும் என்று நம்பி அல்லது எண்ணி இந்த வேண்டுகோளை மக்களவையில் முன்வைத்தது கலைஞருக்குப் பெருமை சேர்க்காது. இந்தியாவின் மிகப் பெரிய விருது பெற்ற தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் பாரத ரத்னா விருது பெற்றார். அஃது ஒருநாள் செய்தி அவ்வளவுதான். தமிழ்நாட்டின் வரலாற்றில் எப்போதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் தலைவர்களாகத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இவர்களுக்குப் பாரத ரத்னா வழங்கப்படவில்லை. இவர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லையோ… அதே காரணங்கள்தான் கலைஞருக்கும் வழங்கப்படாமல் உள்ளது என்பதை அருள்கூர்ந்து உங்களைப் போன்ற மெத்தப் படித்துப் பேராசிரியராக உயர்ந்தவர்கள் உணர வேண்டும்.
தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தில் தன்னாட்சி கொண்ட மாநிலமாக மாறுவதற்கு உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்து இளைஞர்களிடம் பரப்புரை செய்து, மாநிலத் தன்னாட்சியைப் பெற்றுத்தருவதே முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கு நாம் கொடுக்கும் பெரிய விருதாகும். பாரத ரத்னா விருதால் கலைஞருக்குப் பெருமையில்லை. ஒருவேளை உங்கள் வேண்டுகோள் ஏற்கப்பட்டு விருது வழங்கப்பட்டால் பாரத ரத்னா விருதுக்கே பெருமை.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.