கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நூதன போராட்டம்!
கோரிக்கைகளை வலியுறுத்தி
விவசாயிகள் நூதன போராட்டம்!
பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.15,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும், குறுவை சாகுபடிக்கு பயிர்க் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்ட ஆட்சிரக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் வேளாண்மை, பொதுப்பணி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு பருத்தி குவிண்டால் ஒன்றுக்;கு ரூ.10,500 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,500 மட்டுமே விலை போவதால் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.15,000 விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தினர் அச் சங்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தங்களது தலையில் கருப்பு ரிப்பனில் பருத்தி பஞ்சைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல, கடந்த மூன்றாண்டுகளாக குறுவை சாகுபடி செய்த டெல்டா விவசாயிகள் பயிர்க்காப்பீடு அறிவிக்கப்படாததால் இயற்கைப் பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, தற்போது மத்திய, மாநில அரசுகள் குறுவைக்கான பயிர்க்காப்பீடை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டனர்.