”ஒரே நாடு ஒரே மாணவர்” மாநில அரசின் உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசு ! ஐபெட்டோ அண்ணாமலை கண்டனம் !
மும்மொழிக் கொள்கை மற்றும் தேசியக்கல்விக் கொள்கை எதிர்ப்பு விசயத்தில், தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுத்திருப்பதைப்போல, மாநில அரசின் உரிமை விவகாரங்களில் தலையிடும் வகையில் அமைந்திருக்கும் ”ஒரே நாடு ஒரே மாணவர்” திட்டத்தின் கீழான பதிவையும் தடுத்து நிறுத்த வேண்டுமென்று ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளரும் மூத்த ஆசிரியர் இயக்கவாதியுமான வா.அண்ணாமலை, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தேசிய கல்விக் கொள்கையை உறுதியுடன் ஏற்க மறுப்பதை வரவேற்கிறோம். அதே நிலைப்பாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாட்டில் இடமே இல்லை என முதலமைச்சர் பிரகடனம் செய்திருப்பது உள்ளபடியே முழுமையான மனநிறைவைத் தருகிறது.
மும்மொழிக் கொள்கையை ஏற்காவிட்டால் நிதியை விடுவிக்க மாட்டோம் என மத்திய அரசு கூறியும், முதலமைச்சர் தனது நிலைப்பாட்டில் இருந்து சற்றும் பின்வாங்காதது பாராட்டத்தக்கது. அந்த வகையில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தையும் தமிழ்நாடு அரசு வீரியத்துடன் எதிர்த்து வருகிறது.
இவ்வாறு மத்திய அரசின் பல முனைத் தாக்குதல்களுக்கு இடையே, தேசிய கல்விக் கொள்கையின் அங்கமான ‘ஒரே நாடு, ஒரே மாணவர்’ அடையாள அட்டை திட்டம் தமிழ்நாட்டில் உள்ள சில தனியார் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வருவதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியிருக்கும் செய்தி அதிர்ச்சியைத் தருகிறது.
“ஒரே நாடு, ஒரே மாணவர்’ அடையாள அட்டை திட்டமானது ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும் தனித்துவமான 12 இலக்க அடையாள எண்ணாகும். இதில் ஆரம்பக் கல்வியிலிருந்து, கல்லூரி நிலை வரை சம்பந்தப்பட்ட மாணவரது கல்வித் தகவல்கள் சேமிக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் கூறுகிறது.”

ஒரே நாடு, ஒரே மாணவர்’ அடையாள அட்டை திட்டம் எனப்படும் நிரந்தர கல்விக் கணக்கு பதிவுக்காக (APAAR – Automated Permanent Academic Account Registry) ஆதார் உள்ளிட்ட விவரங்களைத் தருமாறு தனியார் பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்துவதாகவும், ஒப்புதல் கடிதம் தருமாறு அழுத்தம் கொடுப்பதாகவும் பெற்றோர் கூறுவதாக அந்தச் செய்தி விவரிக்கிறது. இது பெற்றோரின் தனியுரிமையை மீறுவதாக இருக்காதா? மத்திய அரசின் உத்தரவின்படி இந்தத் திட்டம் நடைமுறையில் கொண்டுவரப்படுதாக பள்ளி நிர்வாகங்கள் கூறியுள்ளன.
மாநில அரசின் உத்தரவோ, வழிகாட்டுதலோ இல்லாமல், புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் வகையில், சில தனியார் பள்ளிகள் ‘ஒரே நாடு, ஒரே மாணவர்’ அடையாள அட்டை திட்டத்தை அமல்படுத்துகிறதா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அப்படி, மாநில அரசு உத்தரவோ, பள்ளிக் கல்வித்துறையின் வழிகாட்டுதலோ இல்லாமல் பள்ளிகள் இத்தகைய செயல்பாட்டை தொடங்கியிருந்தால், அது ஆபத்தான அறிகுறிதான். இந்த தைரியத்தை பள்ளி நிர்வாகங்களுக்கு கொடுத்தது யார்?
ஏனென்றால், மாநில அரசை புறந்தள்ளிவிட்டு, தமிழ்நாடு கல்வித்துறையை மத்திய அரசு கபளீகரம் செய்வதன் தொடக்கமாகவே இந்த நடவடிக்கை கருதப்படும். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே, மத்திய அரசின் திட்டத்தை அமல்படுவத்துவதை வேறு எப்படி கருத முடியும்? மாணவர்களின் தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரப்போவது மத்திய அரசா? மாநில அரசா? என பெற்றோர் கேட்கிறார்கள். அவர்களது அச்சம் நியாயமானதே.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தேசிய கல்விக் கொள்கையை (NEP 2020) எதிர்க்கும் தமிழக அரசு, தனியார் பள்ளிகள் மாணவர்களின் தரவுகளை மத்திய அரசிடம் தருவவதற்கு அனுமதி வழங்கியிருக்காது என்று நம்புகிறோம். இருந்தாலும் இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
மாணவர்கள் மற்றும் பெற்றோரின் தனியுரிமையை பாதுகாக்க, APAAR அடையாளத் திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது. தனியார் பள்ளிகளின் தவறான செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலினும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்துவதுடன், அவசர அவசியமாக செயல்பட்டு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
— அங்குசம் செய்திப்பிரிவு.