‘கோவிலுக்காக ஆன்லைன் வசூலும்… யூடியூபர் கார்த்திக் கைதும்…
‘கோவிலுக்காக ஆன்லைன் வசூலும்… யூடியூபர் கார்த்திக் கைதும்…
பெரம்பலூர் சிறுவாச்சூரில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் பெரியசாமி மலை அடிவாரத்தில் பெரியசாமி, செங்கமலையார் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மன் கோவிலுடன் இணைந்த காட்டுகோவில்கள் ஆகும். சென்ற வருடம் அக்டோபர் மாதம் 6-ந்தேதி பெரியசாமி கோவிலில் 10 அடி உயர பெரியசாமி சிலை உள்பட 9 சிலைகளும், செங்க மலையார் கோவிலில் கன்னிமார்கள் சிலை உள்பட சுட்ட மண்ணால் செய்யப்பட்ட 5 சிலைகளும் என மொத்தம் 14 சிலைகள் உடைத்து சேதப்படுத்தப்பட்டன.
இதையடுத்து 7-ந் தேதி சிறுவாச்சூரில் உள்ள நாயுடு மகாஜன சங்கத்திற்கு சொந்தமான பெரியாண்டவர் கோவிலில் இருந்த 13 கற்சிலைகளை உடைபட்டன! இந்நிலையில் அதே பகுதியில் உள்ள சித்தர் கோவிலில் மயில் சிலையை உடைத்து சேதப்படுத்திய போது கடலூரைச் சேர்ந்த நாதன் என்பவரை பெரம்பலூர் போலீசார் கைது செய்தனர்.
இவர் ஒரு பிராமணர்! இந்த சிலைக்கு அடியில் உள்ள காசுகள், எந்திரத் தகடுகளை எடுக்கவே இவர் சிலைகளை உடைத்ததாக சொல்லப்பட்டது! இந்த நிலையில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் இதை மாற்று மதத்தினர் மீதும் நாத்திகர்கள் மீதும் பழி போட்டு உணர்ச்சிகரமான பிரச்சாரங்களை செய்தனர். இது இந்து விரோத அரசாங்கம்.இங்கு இந்து கோவில்களுக்கு பாதுகாப்பு இல்லை என பரப்புரை செய்தனர். இதற்குக் காரணம் நாத்திகவாதிகளா? அன்னிய மத அடிப்படை வாதிகளுக்கு குனிந்து சேவகம் செய்யும் திமுக ஆட்சியா? இந்துக்களை இழித்துப் பழித்துப் பேசி, இந்து மதத்தை சிறுமைப்படுத்தும் கும்பலுக்கு துணை போகும் திமுக ஆட்சிக்கு வந்த பின்னரே இதுபோன்ற மிகவும் அதிர்ச்சிகரமான செயல்கள் நடக்கின்றது’’ என்றனர்!
ஆனால், சிலையை உடைத்தது ஒரு இந்து பிராமணர் என தெரிய வந்ததும் அமைதியாகி விட்டனர். உடைத்தவரை தண்டிக்கக் கூட கோரிக்கை வைக்கவில்லை. சிறையில் அடைக்கப்பட்ட குற்றவாளி நாதன் உணவு சாப்பிடாமல் போராட் டத்தில் தொடர்ந்து ஈடுபட்டதால் நீதிமன்றம் அவரை ஜாமீனில் விடுவித்தது. சிறையில் உண்ணாவிரதம் இருந்ததற்காக ஒரு கைதி விடுவிக்கப்பட்டார் என்பதும் ஒரு புரியாத புதிராக உள்ளது. இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். மீண்டும் அக்டோபர் 27-ந்தேதி பெரிய சாமி கோவிலில் 5 சிலைகளும், செங்கமலையார் கோவிலில் 13 சிலைகளும் என, சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மொத்தம் 18 சிலைகள் உடைத்து சேதப்படுத்தினர்.
அத்துடன் பெரியசாமி கோவிலில் இதற்கு முன்தினம் நள்ளிரவு 15 அடி உயரம் கொண்ட குதிரை சிலை, ஆத்தடி சித்தர் கோவிலில் 3 அடி உயரமுள்ள நாக கன்னி சிலை, பெருமாள் கோவிலில் 5 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை, செங்கமலையார் கோவிலில் 15 அடி உயரமுள்ள பொன்னுசாமி சிலை உள்பட சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மொத்தம் 9 சிலைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இங்கே இருந்த சிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில் மீண்டும் அதே நாதன் என்ற நபர் அங்கு வந்து சென்றதை அறிய முடிந்தது! அப்போதும் கூட அந்த மனிதனைக் கைது செய்யச் சொல்லி பாஜகவினர் போராடவோ, கோரிக்கை வைக்கவோ இல்லை.கைது செய்யப் பட்டவர் விடுவிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. குறிப்பிட்ட சில சாதி மற்றும் குலத்தை சேர்ந்தவர்களுக்கு குல தெய்வமாகத் திகழ்வது இந்தக் கோயில்கள்! ஆக, அந்தக் கோவிலை குலதெய்வமாகக் கொண்டவர்களோ, அந்த மண்ணின் மைந்தர்களான ஊர்க்காரர்களோ சிதைக்கப்பட்ட கோவில்கள் தொடர்பாக சில முன்னெடுப்புகளை செய்திருந்தால் அது புரிந்து கொள்ளக் கூடியதே! ஆனால், அவர்கள் அரசாங்கத்திற்கு தான் கோரிக்கை வைத்தனர். வசூலில் இறங்கவில்லை.
இந்து அறநிலையத் துறையின் செயல் அலுவலர் அருண்பாண்டியன் என்பவர் ”சேதம் மற்றும் புனரமைப்பு தொடர்பாக அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. பரீசிலிக்கப்பட்டும் வருகிறது” என்றார்! இந்த நிலையில் இந்த கார்த்திக் கோபிநாத் என்ற விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த நபர் தன் சகாக்கள் புடை சூழ அங்கு சென்று உடைப்பட்ட சிலைகளை வீடியோ எடுத்து உணர்ச்சிகரமாகப் பேசி ”கோவிலை புனரமைக்க அறநிலையத் துறை ஒன்றும் செய்யாது. ஆகவே நாம் தான் செய்ய வேண்டும்” எனப் பேசி லட்சக்கணக்கில் வசுல் வேட்டையாட ஆரம்பித்தார். ஓரு சில நாட்களிலேயே 34 லட்சம் சேர்ந்துவிட்டது. இது நடந்தது எல்லாமே சென்ற வருடம். அப்போதே இவர் மீதான புகார்கள் அரசுக்கு சென்றது.
இந்த நபர் இளைய பாரதம் என்ற பெயரில் ஒரு யுடுயூப் சேனலை நடத்தி திமுகவை வசைபாடுவதை வழக்கமாக வைத்து இருந்தார். இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாகவே, “இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தனிநபர்கள் யாரும் வசூல் செய்ய முடியாது. சிறுவாச்சூர் கோயில் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் அறிக்கை கேட்டிருக்கிறார்” என்று துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு நழுவினார். ஆனால், ஏனோ நீண்ட காலதாமதத்திற்கு பிறகு கார்த்திக் கோபிநாத் மேலும் நல்ல வசூல் வேட்டையை முடிந்த பிறகு கைது செய்துள்ளனர்.
ஒரு பக்கம் அண்ணாமலை ஆத்திரத்துடன் சீறுகிறார். ஹெச்.ராஜா எச்சரிக்கிறார், சுப்பிரமணிய சாமி மிரட்டுகிறார். எதற்கு..? பொதுப் பணத்தை கடவுள் பெயரால் களவாடியவனை கைது செய்ததற்கு! அமித்ஷாவே தலையிடுவார் என்கிறார் ஒரு பாஜக தலைவர்! நடக்கும் சம்பவங்களை பார்த்தால், எல்லாம் திட்டமிட்டு தான் நடப்பது போலத் தெரிகிறது. ஏனென்றால், இந்த கார்த்திக் கோபிநாத்தை கைது செய்ய வேண்டும் என கடந்த இரண்டு மாதங்களாகவே பல தரப்பிலும் அரசுக்கு கோரிக்கை சென்ற வண்ணம் இருந்தது!
-சாவித்திரி கண்ணன்
நன்றி! அறம் இணைய இதழ்