புகார்தாரரோ, எதிர்மனுதாரரோ கரன்சி இருந்தால் மட்டும் காவல் நிலையத்துக்கு வாருங்கள்
கரன்சி இருந்தால் காவல் நிலையம் வா
குமரி மாவட்ட காவல் நிலையங்களில் வசூல் வேட்டைக்காக போலீசார், இப்போது புதுவித டெக்னிக்கை கையாள்கிறார்கள். காவல் நிலையங்களுக்கு புகாருடன் வருபவர்களிடம் எதுவும் தேறவில்லை என்றால், நேராக எதிர்மனுதாரர்களை வளைக்கிறார்கள். அவர்களிடம் பேசி, நீங்கள் முதலில் புகார் கொடுங்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் எனக் கூறி ஆயிரக்கணக்கில் பேரம் பேசி முடிக்கிறார்கள். இவ்வாறாக பல புகார்தாரர்கள், குற்றவாளியாக்கப்பட்டு இப்போது வழக்கை சந்தித்து வருகிறார்களாம். சமீபத்தில் கருங்கல் பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர், தன்னை மிரட்டிய ரவுடி கும்பல் பற்றி புகார் அளித்துள்ளார். 2 நாட்கள் கழித்து கருங்கல் காவல் நிலையத்தில் இருந்து பேசிய போலீசார், நகை கடைக்காரரிடம் உங்கள் மீது புகார் வந்துள்ளது. உடனடியாக காவல் நிலையம் வாருங்கள் என அழைத்துள்ளனர். பதறி அடித்து போய் வியாபாரிகள் சங்கத்தினருடன் எஸ்.பி. ஶ்ரீநாத்தை சந்தித்து கதறி உள்ளார். எஸ்.பி. தலையிட்ட பிறகு, நகைக் கடைக்காரர் அளித்த புகார் மீது கருங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற பல தகிடுதத்த வேலைகள் காவல் நிலையங்களில் அரங்கேறுகின்றன. புகார்தாரரோ, எதிர்மனுதாரரோ கரன்சி இருந்தால் மட்டும் காவல் நிலையத்துக்கு வாருங்கள் என எழுதாத குறையாக காவல் நிலையங்கள் உள்ளன என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.