“கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்” – பெண்கள் அர்ச்சகர் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் கீழ் 3 பெண்கள் அர்ச்சகர் பயிற்சி முடித்திருக்கும் தருணத்தை “கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்” என்ற கவித்துவமான வரிகளை குறிப்பிட்டு மனதார பாராட்டியிருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
”அனைத்து சாதி அர்ச்சகர் திட்டத்தில் பாலின வேறுபாட்டை தகர்த்து ஈராயிரம் ஆண்டுகளாக இந்தியா காணாத மாபெரும் சமூகப் புரட்சியை நிகழ்த்திய சமூகநீதிச் சுடரொளி திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி நன்நாளில் நன்றிகள் கோடி!” என முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் வா.ரெங்கநாதன்.
அனைத்துசாதி அர்ச்சகர் நியமனம் கடந்து வந்த பாதை குறித்தும், இன்றும் சந்தித்துவரும் தடைகள் குறித்தும் விரிவாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த அறிக்கையிலிருந்து …
” அனைத்து சாதியினரும் அர்ச்சராகும் திட்டத்தில் ஒரு மாபெரும் புரட்சியை திராவிட முன்னேற்றக் கழக அரசு நிகழ்த்தியுள்ளது. தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளாக கலைஞர் அவர்கள் வேதனை தெரிவித்த அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனை கடந்த கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வரும் பிரச்சினையாக உள்ளது.
1969இல் கருவறைத் தீண்டாமை ஒழிக்க தந்தை பெரியார் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து மாண்புமிகு கலைஞர் அவர்கள் பரம்பரை வழி அர்ச்சகர் அர்ச்சகர் முறையை ஒழித்து சட்டம் இயற்றினார். அதனை எதிர்த்து சேஷம்மாள் உள்ளிட்ட பார்ப்பனர்கள் பலர் உச்ச நீதிமன்றம் சென்றனர்.
1972ல் சேஷம்மாள் தீர்ப்பு வந்தாலும் ஆகமத்தை மீறக்கூடாது என்றும் தீர்ப்பில் சொன்னதால் அர்ச்சகர் நியமனம் செய்ய இயலவில்லை. தொடர்ந்து 2006 ஆம் ஆண்டில் மீண்டும் கலைஞர் அர்ச்சகர் பயிற்சி பள்ளியை துவங்கியதால் 2007 மாணவர்கள் ஆகமம் வேதம் மந்திரம் கற்று தீட்சை பெற்றனர். மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிவாச்சாரியார்கள் தடை வாங்கினர்.
2009ல் அர்ச்சகர் பயிற்சி முடித்த பிறகு அனைத்து அரசியல் கட்சிகளான, இந்து மத அமைப்புகள் சார்ந்த கட்சிகளையும் சந்தித்து எங்கள் பிரச்னைகளை கூறினோம். ஆனால் எங்களுக்கு ஆதரவாக இந்து அமைப்புகள் யாரும் எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. எங்களுக்கு திராவிட இயக்கங்களும், கம்யூனிஸ்ட் அமைப்புகளும், முற்போக்கு அமைப்புகளும், மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும், மக்கள் கலை இலக்கிய கழகம் அமைப்புகளும் அனைவரும் எங்களுக்காக அனைத்து இடங்களிலும், தெருமுனைகளிலும், பேருந்து நிலையங்களிலும், கடைவீதிகளிலும், சாலைகளிலும், எங்களுடைய வழக்குகாக அனைத்து இடங்களிலும் வசூல் செய்தும் மற்றும் கருவறையில் தீண்டாமை ஒழிக்க வேண்டும் என்பதற்கான உண்ணாவிரதப்போராட்டம், சாலை மறியல், கருவறையில் நுழையும் போராட்டம் போன்ற அனைத்துப்போராட்டங்களிலும் ஈடுபட்டும், தற்போது வரை எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இவர்கள் தான் பெரும்பாண்மையான இந்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் படிக்கும் போது நாங்கள் அனைவரும் சாதிரீதியாக அவமானப்பட்டு, அசிங்கப்படுத்தப்பட்டு மற்றும் எங்களுக்கு பயிற்சிக்கொடுத்த தலைமையாசிரியர் மற்றும் ஆகம ஆசிரியரை தாக்கப்பட்டு, எங்களுக்கு பல இடையூறுகளை கடந்து ஒரு ஆகமக்கோயில்களில் முறையாக தமிழ் முறைப்படி, சமஸ்கிருத, வேத மந்திரங்களும் முறைப்படி கற்றும் தீட்சைப்பெற்றும், இன்று ஒரு ஆகமக்கோயில்களில் பூஜை செய்வதற்கு தகுதியோடு நாங்கள் உள்ளோம்.
2015 ஆம் ஆண்டு தீர்ப்பு வந்தது. அதிமுக ஆட்சியில் அர்ச்சகர் நியமனம் நடைபெறவில்லை. 2021 இல் முதல்வராக பொறுப்பேற்ற திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட் 14 அன்று பதவியேற்ற நூறாவது நாளில் அனைத்து இந்துக்களையும் ஆகம கோயில்கள் உட்பட பல தமிழக கோயில்களில் அர்ச்சகராக நியமித்தார். பெண் ஓதுவாரையும் நியமித்தார் அதனை எதிர்த்தும், அர்ச்சகர் விதிகளை எதிர்த்தும் 30 க்கு மேலான வழக்குகள் கொடுக்கப்பட்டன.
திருக்கோயில்களில் பணி நியமனம் செய்யப்பட்ட 24 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவர்களை சாதி ரீதியாக அவமானப்படுத்தியும், கொச்சை சொற்களைக் கொண்டு பேசுவதும், கொலை மிரட்டல் விடுவதும் போன்ற செயல்களை பார்ப்பனர்களும், பிஜேபி, ஆர் எஸ் எஸ், விஷ்வ இந்து பர்ஷத் போன்ற இந்து அமைப்புகளால் தொடர்ச்சியாக 2021 முதல் மிரட்டல் கொடுக்கப்பட்டு, இதில் 5 மாணவர்கள் தற்கொலை செய்வதற்கு முடிவெடுத்தும் 5 மாணவர்கள் பணியை விட்டுச் செல்வதாகவும் கூறப்பட்டு வந்தது. இதனை அடுத்து 26.03.2022 அன்று முதல் இன்று வரை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களும், இதற்கு தீர்வு காணும் வகையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தற்போது பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவர்களும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் பயின்ற மாணவர்கள் பிஜேபி, ஆர் எஸ் எஸ், விஷ்வ இந்து பர்ஷத் போன்ற இந்து அமைப்புகள் இந்த திட்டம் நிறைவேடக்கூடாது என்பதற்காக பயிற்சிப் பெற்ற மாணவர்களும், அர்ச்சகர் பயிற்சிப் பெற்ற மாணவர் சங்கத்திற்கும் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்களும், அச்சுருத்தல்களும் சமூக வலைதளங்களில் அவதூறுகளும் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதி மன்றங்களிலும் 50ற்கும் மேற்பட்ட வழங்குகள் மாதந்தோறும் வந்த வண்ணம் உள்ளது. கருவறையில் தீண்டாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக பல இந்து அமைப்புகளால் பல எதிர்ப்புகளும் தடைகள் செய்து வருகின்றனர். இதுதான் சனாதனம்.
அந்த வழக்குகள் இந்து சமய அறநிலையத்துறையால் முறியடிக்கப்பட்ட நிலையில் திருச்சி வயலூர் முருகன் கோவில் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்திலே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி திரு ஜி ஆர் சுவாமிநாதன் அவர்கள் குறிப்பிட்ட denomination என்று சொல்லக்கூடிய மத உட்பிரிவினரைத் தவிர மற்றவர்களை ஆகமக் கோயில்களில் அர்ச்சகராக நியமிக்க முடியாது என்று சொல்லி அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்தார்.
அதற்கு எதிராக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு தடையாணை பெறப்பட்டுள்ளது. அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் 2022 – 2023ஆம் ஆண்டு இரண்டாம் ஆண்டு மாணவர்கள் இடஒதுக்கீடு அடிப்படையில் OC (4), BC (38), MBC (31) மற்றும் SC (21). இச்சூழலில் மீண்டும் அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டு 94 பேர் குறிப்பாக மூன்று மாணவிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு அர்ச்சகர் படிப்பை சென்ற வாரம் முடித்து சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.
தற்போது நடப்புக்கல்வியாண்டு 2023 – 2024ஆம் ஆண்டில் 111 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இவற்றில் 11 மாணவிகள் ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் பயின்று வருகின்றனர். அர்ச்சகர் நியமனங்களிலும், அர்ச்சகர் பயிற்சிகளிலும் பாலின சமத்துவம் உருவாக்க “கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குச் செல்லலாம்“ என தமிழ்நாடு பெண்களை போற்றும் வகையைல் திருக்கோயில்களில் பாலின பாகுபாடின்றி முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மற்றும் அர்ச்சகர் பணி நியமனத்திற்கு தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பல நல்ல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால் இதனை எதிர்த்து பல இந்து அமைப்பு கட்சிகளாலும், இந்து அமைப்புகளாலும் தடைகள் பல தந்து வருகிறார்கள்.
அனைத்து இந்துக்கள் அர்ச்சகர் போராட்டத்தில், கருவறை தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் இதுவரையிலான கோரிக்கை என்பது அனைத்து இந்துக்களும் அதாவது அனைத்து ஆண்களும் அர்ச்சகராக வேண்டும் என்பதுதான். தற்போது நிகழ்ந்துள்ள மாபெரும் புரட்சி என்னவென்றால் அர்ச்சகர் நியமனத்தில் பாலின பேதமும் தகர்க்கப்பட்டுள்ளது என்பதே. 3 மாணவிகள் மாபெரும் கனவோடு அர்ச்சகர் படிப்பை முடித்துள்ளனர்.
அடுத்து அர்ச்சகர்களாக நியமிக்க காத்திருக்கிறார்கள். பெண்கள் அர்ச்சகராக நியமிக்கப்பட்டால் இந்திய வரலாற்றிலே, ஏன் உலக வரலாற்றிலேயே மாபெரும் சமத்துவ புரட்சியாக நிலைத்து நிற்கும். ஆனால் ஆலயங்களில் சமத்துவத்தை விரும்பாத ஏற்கனவே கோயில்களை தங்களின் சொந்த சொத்தாகக் கருதும் பார்ப்பன அர்ச்சகர்கள் இந்த மாபெரும் சமத்துவப் புரட்சியை ஏற்கவில்லை.கோயில்கள் மீதான தங்கள் அதிகாரம் பறிபோகும் எனக் கருதிப் பதறி உடனே மதுரை உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், அர்ச்சகர்க படிப்பு முடித்துள்ளோருக்கு கோயில்களில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று வழக்குகள் கொடுத்துள்ளனர்.
இந்த வழக்குகளை முறியடிக்க இந்து சமய அறநிலைத்துறை தீவிரமாக முயற்சித்து வருகிறது. எல்லோரும் இந்துக்கள், எல்லா இந்துக்களும் சமம், சனாதன தர்மம் எல்லா இந்துக்களையும் சமமாக கருதுகிறது என்றெல்லாம் பேசும் ஆர்எஸ்எஸ் பாஜக விசுவ இந்து பரிசத், சங் பரிவார அமைப்பினர் குறிப்பாக மோடி, அமித்ஷா, அண்ணாமலை போன்றோர் ஆலயங்களில் அனைத்து இந்துக்களும், குறிப்பாக இந்து பெண்கள் அர்ச்சகராவதற்கு என்றாவது பேசியுள்ளார்களா? சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை இன்று வரை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்கும் சனாதான வாதிகள் தான் ஆர்எஸ்எஸ் பாஜகவினர்.
தமிழகத்தில் மதுரை, ஸ்ரீரங்கம், திருச்செந்தூர் ,பழனி, திருவண்ணாமலை உள்ளிட்ட பெரிய கோயில்களில் இன்று வரை தமிழர்கள் குறிப்பாக கவுண்டர், தேவர், வன்னியர், செட்டியார் ,நாடார், கோனார், தேவேந்திரர் ஆதிதிராவிடர், அருந்ததியர் உள்ளிட்ட எவரும் அர்ச்சகராக முடியவில்லை என்ற நிலை சுதந்திரம் பெற்று, அரசியல் சட்டம் வந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் நீடிப்பது அவமானகரமானது. இந்த அவமானத்தை தமிழ் சமூகத்தின் மீது சுமத்தும் கூட்டம் 1000 ஆண்டு காலமாக கோயில்களை தங்கள் அதிகார பீடமாக வைத்திருக்கும் பார்ப்பன அர்ச்சகர்கள் தான்.
அரசிடம் சம்பளம் பெறும் இவர்கள்தான் இன்றும் இந்து சமய அறநிலைத்துறையை இயங்கவே விடாமல் நூற்றுக்கணக்கான வழக்குகள் போட்டு தடுத்து நிறுத்தி வைத்திருப்பவர்கள். தந்தை பெரியார் பிறந்த இந்நன்னாளில், தமிழக மக்கள் ஆர்எஸ்எஸ், பாஜக, பார்ப்பன கூட்டத்தின் இரட்டை வேடத்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்து பெரும்பான்மை மக்களின் நலனுக்காக இட ஒதுக்கீடு முதல் கோயில் அர்ச்சகர் வரையிலான திட்டங்களை செயல்படுத்தி வருவது திராவிட இயக்கங்கள் தான் குறிப்பாக திராவிட முன்னேற்ற கழகம் தான்.
ஆலயங்களில், சாதி, பாலின சமத்துவத்திற்கு, அரசியல் சட்டம் வலியுறுத்தும் சமத்துவ சமுதாயத்திற்காக, குறிப்பாக அரசியல் சட்டத்தில் பிரிவு 25 2(b)யின் அடிப்படையில் இந்து சமய மத நிறுவனங்களை எந்த வேறுபாடும் இன்றி அனைத்து மக்களுக்கும் திறந்து வைக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், இந்து சமய அறநிலை துறை அமைச்சர் திரு பி.கே. சேகர்பாபு அவர்களுக்கும், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலர் திரு. மணிவாசன், இ.ஆ.ப., சிறப்புப்பணி அலுவலர் திரு. ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப., மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு க.வீ. முரளிதரன், இ.ஆ.ப., மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர் அனைவருக்கும் தந்தை பெரியார் பிறந்த நாளில் அர்ச்சகர் மாணவர்கள் சங்கம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக மக்களின் வரிப்பணத்திலும், உழைப்பிலும், கட்டிடக்கலை அறிவிலும் செதுக்கப்பட்ட தமிழகத்தின் பெரும் திருக்கோயில்களில் தமிழக பெண்களை அர்ச்சகராக நியமிக்கும் மாபெரும் அரசியல் சட்ட திட்டத்தினை வைத்து தமிழக அரசு நிறைவேற்ற கூடாது. தமிழகத்தில் கோயிலுக்குச் செல்லும் அனைத்து பக்தர்களும் ஆலயங்களில் சமத்துவத்தை நிறைவேற்ற, தமிழில் வழிபாடு செய்ய, தமிழக அரசுக்கு கோரிக்கை எழுப்ப வேண்டும். நம்மைத் தடுக்கும் பார்ப்பனக் கூட்டத்தையும், சனாதனக்கூட்டத்தையும் ஒழித்துக்கட்டி, உங்கள் வீட்டுப் பிள்ளைகளாய் உள்ள அர்ச்சகர் பயின்ற மாணவர்களுக்கு தமிழ் மக்கள் அனைவரும் பெருமளவு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நம் தந்தை பெரியார் பிறந்தநாளில் ஆலய சமத்துவத்தை நிலை நாட்ட தமிழக மக்கள் அனைவரும் உறுதி ஏற்போம்!”” என அறிக்கையில் வா.ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று அர்ச்சகர் சான்று பெற்றுள்ள ரஞ்சிதா, கிருஷ்ணவேணி, ரம்யா ஆகியோரை சந்தித்து ஸ்மார்ட்போன் மற்றும் தலா ரூ.25 ஆயிரம் நிதியினை வழங்கி வாழ்த்தினார்கள்.
– ஆதிரன்.