சாதிக்கத் துடிக்கும் பெண்களா நீங்கள்? இரண்டு கைகளே மூலதனம் – சுயதொழில் புரிய பொன்னான வாய்ப்பு !
சாதிக்கத் துடிக்கும் பெண்களா நீங்கள்? இரண்டு கைகளே மூலதனம் – சுயதொழில் புரிய பொன்னான வாய்ப்பு !
சுயதொழில் புரிய வேண்டும் என்ற ஆர்வம் உள்ள பெண்களா நீங்கள்? வீட்டிலிருந்தபடியே எளிதாக சுய சம்பாத்தியம் மேற்கொள்ள அருமையான வாய்ப்பை வழங்குகிறது எக்ஸெல் அக்ரோ நிறுவனம்.
திருச்சி எக்ஸெல் குழும நிறுவனத்தின் ஓர் அங்கமான எக்ஸெல் அக்ரோ நிறுவனம் மத்திய அரசின் நிறுவனமான மத்திய மருத்துவ மற்றும் நறுமண பயிர்களின் ஆராய்ச்சி (CSIR-CIMAP) நிறுவனத்துடன் இணைந்து அரோமா மிஷனின் கீழ் பயன்படுத்தப்பட்ட மலர்களிலிருந்து ஊதுபத்திகள் மற்றும் நறுமண கூம்புகள் தயாரிப்பதற்கான பயிற்சியினை வழங்குகிறார்கள்.
கடந்த செப்டம்பர்-16 ஆம் தேதி திருச்சி, திருவெறும்பூர், ஜெய் நகர் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், மத்திய மருத்துவ மற்றும் நறுமண பயிர்களின் ஆராய்ச்சி (CSIR-CIMAP) நிறுவனமும் எக்ஸெல் அக்ரோ நிறுவனமும் கூட்டாக இணைந்து “ஊதுபத்தி தயாரிப்பு தொழில்நுட்ப பரிமாற்ற ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன.
இந்த நிகழ்வில் மத்திய அரசு நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானிகளான டாக்டர் அலோக் கல்ரா, டாக்டர் சுடரேசன், டாக்டர் சஞ்சய் யாதவ், டாக்டர் ராஜேஷ் குமார், டாக்டர் ரமேஷ்குமார், டாக்டர் பிரியங்கா, CSIR-CIMAP நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் டாக்டர் ராம் ராஜசேகரன் மற்றும் திருச்சி எக்ஸெல் குழும நிறுவனத்தின் தலைவர் M.முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“இந்த பயிற்சி மற்றும் செயல் விளக்கத்தின் மூலம் பயன் பெற்ற இந்த பகுதியில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு, எக்ஸெல் அக்ரோ மூலமாக தொடர்ந்து ஊதுபத்தி தயாரிப்பதற்கான பணிகள் வழங்கப்பட்டு அவர்கள் சுயமாக சம்பாதிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காக எக்ஸெல் குழுமம் துணை நிற்கும்” என்றார், எக்ஸெல் குழும தலைவர் M.முருகானந்தம் .
பயிற்சி முறை குறித்து இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வித்யா அவர்களிடம் பேசினோம். “கோயில்களில் தினம்தோறும் நூற்றுக்கணக்கான மாலைகள் குவிகின்றன. பயன்படுத்திய பிறகு அவை குப்பைகளில் கொட்டப்படுகின்றன. அல்லது வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்ட மாலைகள் ஆறுகளில் வீசப்படுகின்றன. இவற்றை நாங்கள் முறையாக கோயில் நிர்வாகத்தை அணுகி பயன்படுத்தப்பட்ட மாலைகளை சேகரிக்கிறோம். பின்னர், அவற்றிலிருந்து மலரின் இதழ்களை மட்டும் தனியே பிரித்தெடுத்து உலர்த்தி பக்குவப்படுத்தி மூலப்பொருட்களாக மாற்றுகிறோம். இதனுடன், செயற்கை மணமூட்டிகள் கலந்து ஊதுபத்திகளாக நறுமண கூம்புகளாக உருவாக்குகிறோம்.
தற்போதுதான் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதால், பயிற்சியளிப்பது என்ற நிலையில் இருக்கிறோம். இதன்பிறகு, படிப்படியாக அவர்களுக்கு போதுமான பயிற்சிகளை வழங்கி எங்களது இடத்திற்கு வந்து அல்லது அவர்களது வீட்டிலிருந்தபடியே பொருட்களை தயாரிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறோம். கூடவே, இவற்றுக்கான சந்தை வாய்ப்புகளையும் நாங்களே ஏற்படுத்திக் கொடுக்கிறோம். தொழில் முனைவராக வேண்டுமென்ற ஆர்வம் மட்டும் இருந்தால் போதுமானது. இதற்காக பெரிய அளவில் முதலீடு செய்ய வேண்டிய அவசியமுமில்லை.
வீட்டில் அமர பயன்படுத்தப்படும் மரத்தாலான மணக்கட்டை ஒன்றும் இரண்டு கைகள் போதுமானது. நாங்கள் வழங்கும் பயிற்சிக்கென்று தனியே கட்டணம் வசூலிப்பதில்லை. முற்றிலும் இலவசமாகவே பயிற்சியை வழங்குகிறோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கான சிறந்த தொழில் வாய்ப்பாக இது அமையும். ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயிற்சியை பெற்றுக்கொள்ளலாம்.” என்கிறார், அவர்.
அப்புறம் என்ன ? ஆர்வமும் வாய்ப்பும் உள்ளவர்கள் முயற்சித்துத்தான் பாருங்களேன்! இந்த பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் வித்யா அவர்களை 98409 68882 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
வே.தினகரன்.