அன்று ஏகலைவனுக்கு நேர்ந்த கொடுமைதான் இன்று நீட் தேர்வில் நிகழ்த்தப்படுகிறது ! – பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு.
திராவிடர் இயக்க செயல்வீரர்- பெரியாரிய நெறியாளர் திருவரங்கம் ந.அன்பழகன் நினைவு தொடர் சொற்பொழிவின் தொடக்க விழா, மே-17 மாலை, திருவரங்கம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் க.செகநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் த.பானுமதி, தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் வழக்கறிஞர் கென்னடி, திராவிடர் கழகத்தின் திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்யராஜ், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கை பரப்பு செயலர் சீனி.விடுதலை அரசு பெரியார் பாசறை புரவலர் அ.ஆசைத்தம்பி மற்றும் சமூக நல ஆர்வலர் க.காமராஜ் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இந்நிகழ்வில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எழுதி வெளியான புதிய கல்விக்கொள்கை எனும் மதயானை என்ற நூல் அறிமுக விழாவில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஏற்கெனவே இந்நிகழ்வில் பங்கேற்பதாக ஒப்புக்கொள்ளப்பட்டதால் அந்நிகழ்வை தவிர்த்துவிட்டு திருச்சி நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்.
அவர் ஆற்றிய சிறப்புரையில், “கல்வியை பற்றியே பேசாத கல்விக்கொள்கை -2020 ஐ எதிர்க்கிறோம். இதற்கு முன்னர், 1968, 1986, 1992 ஆகிய ஆண்டுகளில் புதிய கல்விக்கொள்கைகள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கும் இப்போதைய 2020 கல்விக்கொள்கைக்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது. 1980 வரையில், உலக வங்கியிடம் கடன் வாங்காதவர்களாக இருந்தார்கள். அவசர காலத்திற்கு பிறகு, 1982 வாக்கில் இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் உலக வங்கியிடம் கடன் வாங்கினார்கள். கடன் கொடுத்தவன் கண்டிஷன் போடும் நிலை உருவானது. மாணியத்தை நிறுத்து என்றான். கல்விக்கு நிதி ஒதுக்காதே என்றான். தனியார்மயத்தின் தொடக்கம் அதுதான்.
அந்த பின்புலத்தில் 1986 கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் அது கல்விக்கான கட்டமைப்பை சிதைக்கவில்லை. அதுவரை அரசு செய்து வந்ததை, நிறுத்திக் கொண்டு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதனைதொடர்ந்து, 1992 இல் உலக வர்த்தக கழகம் உருவானது. காட் ஒப்பந்தம் போடப்பட்டது. காட்ஸ் அமலுக்கு வந்தது. அந்த பின்புலத்தில் 1992 கல்விக்கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதும் அதனை எதிர்த்தோம். ஆனால், கொள்கையை முற்றாக நிராகரிப்போம் என்பதாக சொல்லவில்லை.
ஆனால், 2020 கல்விக்கொள்கையை மட்டும்தான். முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்கிறோம். விமர்சனம் வைப்பது வேறு. முற்றிலும் நிராகரிப்பது வேறு. இது இரண்டாம் வகையை சேர்ந்தது. காரணம். கல்வியைப் பற்றி பேசாத ஆவணம் இது. மனிதனை சிறந்த மனிதனாக மாற்றுவதே கல்வி என்பார்கள். நல்ல குணங்களை மேம்படுத்துவதே கல்வி. பகுத்தறிவையும், மனித உரிமையையும், சக இனக்குழுவின் விடுதலைக்காக ஆதரவு தரும் பக்குவம் அத்தனையையும் சேர்ந்ததுமான பக்குவத்தை வழங்குவதே சிறந்த கல்வி. ஆனால், அவற்றையெல்லாம் சிதைத்து, வெறுமனே எண்ணறிவு, எழுத்தறிவு, வேலைத்திறன் என்பதாக கல்வியை சுருக்கிவிட்டார்கள்.
பிச்சைக்காரர்கள் இல்லாத நாடு எது? சூரியன் அஸ்தமிக்காத நாடு என்று மார்தட்டிக் கொள்ளப்படும் பிரிட்டனில் பிச்சைக்காரர்களே இல்லையா? எல்லா நாடுகளிலும் பிச்சைக்காரர்கள் இருக்கவே செய்கிறார்கள். அவர்களுக்கு என்றேனும் ஒருநாள் அதிர்ஷ்டவசமாக லாட்டரி அடித்துவிட்டால் அவர்கள் இலட்சாதிபதியாகிவிடுவார்கள். ஆனால், சமூகத்தால் கல்வி மறுக்கப்பட்டவனின் நிலை முற்றிலும் வேறானது. எந்த வகையிலும் இதனோடு ஒப்பிட முடியாதது. சமூகத்தில் கல்வி மறுக்கப்பட்ட தலைமுறைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்; வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென்றுதான் இட ஒதுக்கீடு என்று பேசுகிறோம். அது சலுகையல்ல; அவர்களின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை இந்த கல்விக் கொள்கை மறுக்கிறது.
அன்று ஏகலைவனுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிதான், இன்று புதிய கல்விக்கொள்கை 2020 இன் வாயிலாக நிகழ்த்தப்படுகிறது. தன்னிடம் முறையாக வில் வித்தை கற்றுத்தேறாத, அதே சமயம் தன்னைவிட திறமையானவானாக ஏகலைவன் இருந்தான் என்பதற்காகவே, அவனை தேடி இழுத்து வந்து கட்டை விரலை வெட்டி எடுத்தார்கள். நீட் தேர்வு விவகாரத்தோடு பொருத்திப்பாருங்கள். அன்று ஏகலைவனுக்கு நேர்ந்ததுதான், இன்று கிராமப்புற ஏழை சமூகரீதியில் ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கிறது.

ஏகலைவனின் அம்பு யாரையும் கொல்லாது. எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் மயக்கத்தை ஏற்படுத்தும். அந்த வாய்ப்பை பயன்படுத்தி இவனும் தப்ப முடியும். அந்த விலங்கும் மயக்கம் தெளிந்து தன் இருப்பிடம் திரும்ப முடியும். ஆனால், துரோனாச்சாரியிடமிருந்தது, கொலை ஆயுதம். எதிரியை நிலைகுலைய வைத்து கொல்லக்கூடியது. அதுபோலத்தான், இந்த கல்விக்கொள்கையும் அமைந்திருக்கிறது.” என்பதாக, புதிய கல்விக்கொள்கை-2020 குறித்து விரிவான விளக்கவுரையை சாமானியரும் புரிந்துகொள்ளும்படியாக எடுத்துரைத்தார், பிரின்ஸ் கஜேந்திரபாபு.
கொட்டும் மழையிலும், அரங்கம் நிறைந்த நிகழ்வாக நிறைவுற்றது.
— இளங்கதிர்.