பெட்டிக்கடையில் பஞ்சாயத்து ! கடைக்காரருக்கும் எஸ்.ஐ.க்கும் இடையே நடந்த மல்லுக்கட்டு !
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முக சிகாமணி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ். இவர் பசுவந்தனை சாலையில் கடை நடத்தி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்தினம் இரவு கடையில் ஜெகதீஷ் அவரது மனைவி முத்துச்செல்வி மற்றும் அவர்களது குழந்தைகள் இருந்துள்ளனர்.
அப்போது எப்போது வென்றான் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணி பெறக்கூடிய அந்தோணி திலிபன் என்பவர் சிகரெட், தீப்பெட்டி உள்ளிட்ட சில பொருட்களை வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது வாங்கிய பொருட்களுக்கான பணம் ரூ.170 தருமாறு முத்து செல்வி கேட்டதாகவும், அதற்கு உதவி ஆய்வாளர் அந்தோணி திலிப் உங்கள் கடையில் எல்லா பொருட்கள் விலையும் அதிகமாக உள்ளது. நான் 69 ரூபாய் தான் தருவேன் என்று கூறி பேடிஎம் இல் பணம் செலுத்தி உள்ளார். மீதி பணத்தை தர வேண்டும் என்று முத்துச்செல்வி கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தான் வாங்கிய சிகரட்டுக்கு நீங்கள் அதிகமாக பணம் வசூலித்துள்ளீர்கள், உங்கள் மீது நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து கேஸ் போட்டுவிடுவேன் என்று கூறியுள்ளார்.
அப்போது கடையில் இருந்த ஜெகதீஸ் மற்றும் முத்து செல்வி இருவரும் மற்ற கடையில் என்ன விலைக்கு விற்பனை செய்கிறார்களோ அதைத்தான் நாங்களும் விற்க்கிறோம். என்று கூற , உதவி ஆய்வாளர் அந்தோணி திலிப் தனது செல்போன் மூலமாக அவர்கள் பேசுவதை வீடியோ எடுக்க, பதிலுக்கு அவர்களும் வீடியோ எடுக்க இரு தரப்புக்கிடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
உதவி ஆய்வாளர் அந்தோணி திலிபன் ஜெகதீஷ் மற்றும் முத்துச்செல்வியை அவதூறாக பேசியது மட்டுமின்றி, அவரின் குழந்தைகளை அழைத்து இருவரையும் பற்றியும் தவறாக பேசியதாக கூறப்படுகிறது. உதவி ஆய்வாளர் அந்தோணி திலிபன் பேசுவதை அப்பகுதியில் நின்றிருந்த ராஜேஷ் கண்ணா என்பவர் வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்த உதவி ஆய்வாளர் அந்தோணி திலிபன் அவரது செல்போனை பறித்து அவரையும் திட்டியுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் இரு தரப்பையும் சமாதானப்படுத்தியது மட்டுமின்றி, உதவி ஆய்வாளர் அந்தோணி திலிபன் பிடுங்கிய செல்போனை வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த பிரச்சனை நடந்து கொண்டிருந்தபோதே முத்துச்செல்வி தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜானனை தொடர்பு கொண்டு இங்கு நடந்த விவரங்களை கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள், நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து முத்துச்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க சென்றுள்ளனர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் மற்றும் சில அரசியல் பிரமுகர்கள் சமாதானமாக செல்லும்படி கூறியுள்ளனர்.
தொடர்ந்து தனது கடைக்கு வந்து உதவி ஆய்வாளர் அந்தோணி திலிபன் பிரச்சனை செய்து வருவதாகவும்; அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத்துச்செல்வி உறுதியாக தெரிவித்துள்ளார். இதையடுத்து இரவு வரை காக்க வைத்து அதன் பின்னர் சி எஸ் ஆர் நகலை மட்டும் கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இது குறித்து புகார் அளித்துள்ள முத்துச்செல்வி கூறும் போது ”கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போன்று தனது கடைக்கு வந்து அந்தோணி திலிபன் பிரச்சனை செய்வதாகவும்; தற்போது மீண்டும் நேற்று முன்தினம் இரவு வந்து பிரச்சனை செய்துள்ளதாகவும்; கடந்த 18 ஆண்டுகளாக இப்பகுதியில் தாங்கள் கடை நடத்தி வருவதாகவும், எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும்; ஆனால் உதவி ஆய்வாளர் அந்தோணி திலிப் திட்டமிட்டு பிரச்சனை ஏற்படுத்தி வருவதாகவும்; போட்டு பார்த்துவோம் என்று மிரட்டி வருவதாகவும்; இதனால் தானும் தனது குடும்பத்தினரும் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளதாகவும், பொங்கிய சாப்பாட்டை கூட சாப்பிட முடியவில்லை என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இப் பிரச்சனை குறித்து உதவி ஆய்வாளர் அந்தோணி திலிபனிடம் கேட்ட போது ”அதிக விலைக்கு சிகரெட் விற்பனை செய்தது குறித்து தான் கேட்டேன், அங்கு வந்திருந்த சிகரெட் சப் டிலரிடமும் இது பற்றி கேட்டேன். அதை மிகைப் படுத்தி தன் மீது புகார் தெரிவித்து இருப்பதாக” கூறினார்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு இதேபோன்று கடைக்கு சென்றபோது பிரச்சனை ஏற்பட்டதையும் உதவி ஆய்வாளர் அந்தோணி திலிபன் ஒத்துக் கொண்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
-மணிபாரதி.