தோழர் தா.பா.வின் படத்தை” ஜனசக்தி” காலண்டரில் இருந்து நீக்கம் ? ஏன் என்று கேட்க கூடாதா ?
தோழர் தா.பா.வின் படத்தை” ஜனசக்தி” காலண்டரில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்? பிப்ரவரி 26 ,தோழர் தா.பா.வின் நினைவுநாள் என்ற வாசகம் இருந்து வந்ததையும் நீக்கியிருக்கிறார்கள்?
இது, அநியாயம் இல்லையா? அக்கிரமம் இல்லையா? இது,அறியாமல் செய்த பிழை என்று சொல்ல இயலாதே?(எழுத்துப் பிழை இல்லையே இது?) இதனை யார் செய்தார்கள்? ஏன்?
செய்தார்கள்? எதற்காக இதனைச் செய்தார்கள்? தோழர் தா.பா.படம் இருப்பது, ஜனசக்தி”க்கு இடையூறாகவோ,இழுக்காகவோ எந்த வகையில் இருக்கிறது ?
தோழர் தா.பா.எழுதிய 40க்கும் மேற்பட்ட நூல்களும், எண்ணற்ற சிறு பிரசுரங்களும்,சண்டமாருதமாய் முழங்கியசொற்பொழிவுகளும், நெத்தியடி கேள்விகளை முன்வைத்து அவர் கொடுத்த டி வி பேட்டிகளும், “ஜனசக்தி”யில் எழுதிய சாட்டையடி எழுத்துகளும்…..இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்செங்கொடியை மேலும் சிவப்பாக்க வில்லையா?
ஆகச் சிறந்த ‘ஜீனியஸ்’என்று புகழப்படத்தக்கவர்கள், நமக்குச் சொல்லாததை,எழுதாததை “பொதுவுடமையரின் வருங்காலம்”நூலில், தோழர் தா.பா.சிந்தித்திருக்கிறார்; சொல்லியிருக்கிறார்; எழுதியிருக்கிறார்
கம்யூனிஸ்ட் கட்சியின் பின்னடைவுக்கான காரணங்களை மட்டுமே அவர் பேசு பொருளாக்கவில்லை. எதிர்காலத்தில் முன்னேறிச் செல்வதற்கான வழி வகைகளையும் பட்டியலிட்டிருக்கிறார்!
புதிய உலகமயச் சூழலில், உலகில், இந்தியாவில், தமிழகத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும், மாறிய சூழலில் நம் செல்வழியில் செய்திட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் ஆழமாக ஆய்வு செய்திருக்கிறார்.
(இதில் பல கருத்துக்கள் பலருக்கு வரலாம், இருக்கலாம்.இருக்கும்) தனது அனுபவ பிழிவாக மட்டுமல்லாது,அனுபவம் மிக்க, அறிவுமிக்க சான்றோர்கள் பலரின் கருத்துகளின் சாரத்தையும் ஒரு பிழிவாக கொடுத்துவிட்டு இயற்கையோடு கலந்திருக்கிறார்!
மறைந்த அந்த மாபெரும் தோழருக்கு மரியாதை தராவிடினும்,அவமரியாதை ஏன் செய்ய வேண்டும்?
(கட்சி அமைப்பில்,பொறுப்புகளில் இருக்கும் தோழர்கள் ‘இது ஏன் ‘என்று
கேட்கக்கூடாதா?)
-வீ.வெள்ளிங்கிரி.