அங்குசம் பார்வையில் ‘பணி’ திரைப்படம் ஓர் அலசல்
தயாரிப்பு : ‘அப்பு பது பப்பு’ & ஸ்ரீகோகுலம் மூவிஸ், அட்ஸ் ஸ்டுடியோஸ்’ எம்.ரியாஸ் ஆடம், சிஜோ வடக்கன். டைரக்ஷன் : ஜோஜு ஜார்ஜ். நடிகர்-நடிகைகள் : ஜோஜு ஜார்ஜ், அபிநயா ஆனந்த், சுஜித் சாகர், சீமா சசி, சாந்தினி ஸ்ரீதரன், ஜுனைஸ், அபயா ஹிரண்மயி, அஷ்ரப் மல்லிசேரி, ரஞ்சித் வேலாயுதம், ஒளிப்பதிவு : வேணு & ஜிண்டோ ஜார்ஜ், இசை : விஷ்ணு விஜய் & சாம் சி.எஸ்., எடிட்டிங் : மனு ஆண்டனி. பி.ஆர்.ஓ. : யுவராஜ்.
மலையாளத்தில் ஐந்து வாரங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்துள்ள ‘சம்பவம்’ என்ற படத்தை ‘பணி’ என்ற பெயரில் தமிழில் ரிலீஸ் பண்ணியிருக்கிறார்கள். பொதுவாக மலையாள சினிமாக்களை தமிழில் ரிலீஸ் பண்ணும் போது வசனங்களை தாறுமாறுமாகப் பேசி நம்மைப் பாடாய்படுத்துவார்கள், டென்ஷனாக்குவார்கள்.
ஆனால் இந்த ‘பணி’யில் தமிழ்ப்பணியை சிறப்பாகவே செய்ததற்காக, முதல்முறையாக டைரக்டராக வெளிப்பட்டிருக்கும் மலையாள சினிமாவின் ஹீரோ ஜோஜு ஜார்ஜ்ஜை பாராட்டலாம்.
தாதாக்கள்—போலீஸ்—சின்ன ரவுடிகளுக்கிடையே நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம், வெட்டுக்குத்து, ரத்தம் தான் இந்த ‘பணி’யின் ஒன்லைன். ஆனால் அதை திரைக்கதையில் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொண்டு போனதால் இரண்டு மணி நேரம் இருபது நிமிடங்கள் நம்முடைய செல்போன் பணியில் கவனம் செலுத்தவிடாமல் செய்கிறது இந்த ‘பணி’.
கேரள மாநிலம் திருச்சூர் தான் கதைக்களம். மெக்கானிக்காக இருக்கும் இரண்டு பொடியன்கள், நிலப்பிரச்சனை ஒன்றில் கூலிக்காக ஒருவரை ஏடிஎம்மில் வைத்து கழுத்தை அறுத்துக் கொல்கிறார்கள். கொஞ்ச நேரம் கழித்து அவர்களே பிணத்தைப் பார்த்து அலறி நடித்து போலீசுக்கும் சொல்கிறார்கள். அந்த நகரின் போலீஸ் கமிஷனர் ரஞ்சித் வேலாயுதம், தாதா கிரி ( ஜோஜு ஜார்ஜ் ) கும்பலைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் தான் இந்தக் கொலை நடக்கிறது. இந்தக் கொலையை விசாரிக்க ஜோஜு ஜார்ஜின் உறவினரான போலீஸ் அதிகாரி சாந்தினி ஸ்ரீதரனை நியமிக்கிறார் கமிஷனர்.
ஏடிஎம் கொலையாளிகளை போலீசும் தேடுகிறது, ஜோஜு ஜார்ஜ் குரூப்பும் தேடுகிறது. இந்த சமயத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஜோஜுவின் மனைவி அபிநயாவிடம் சில்மிஷம் பண்ணுகிறார்கள் அந்தக் கொலையாளிகள். இதனால் டென்ஷனாகும் ஜோஜு, அங்கேயே அவர்களைப் பொளந்துகட்டுகிறார். இதனால் வெறியாகும் அந்த ரவுடிகள், ஜோஜுவின் வீட்டுக்குள்ளேயே புகுந்து அபிநயாவை சீரழிக்கின்றனர்.
இதன் பின் நடக்கும் க்ரைம் த்ரில்லர் ஆட்டம் தான் இந்த ‘பணி’.
நம்ம தமிழ் சினிமாவில் அடிக்கடி பார்த்து பழகி, புளித்துப் போன கதை தான். ஆனால் இந்த ‘பணி’யில் ஹீரோயிசத்தை நம்பாமல் திரைக்கதையை நம்பி களம் இறங்கிய டைரக்டர் ஜோஜுவை பாராட்டலாம். ஆள் பார்க்க ஆறடி உயரத்தில் வாட்டசாட்டமா, தாதாக்களின் தலைவன் கேரக்டருக்கு நச்சென ’மேட்ச்’ சாகியிருக்கிறார். இவருக்கு மனைவியாக வரும் அபிநயா ஆனந்த் [ நம்ம ஊரு ‘நாடோடிகள்’ படத்தின் ஹீரோயின் தான் ] அழகாவும் இருக்கார், அனுதாபத்தையும் அள்ளுகிறார்.
கயவர்களால் சீரழிக்கப்பட்டு, அபிநயா படுத்தபடுக்கையாக கிடக்கும் போது, “அவனுகளப் பார்த்தா உடனே சிதைச்சிரு” என ஜோஜுவிடம் சீமா சீறும் இடம் அறச்சீற்றம். அவர் சொன்னது போலவே அந்தக் கயவர்களை கட்டித் தொங்கவிட்டு சிதைக்கிறார் ஜோஜு ஜார்ஜ். அபிநயாவுக்கு நடந்த கொடுமைக்குப் பின், க்ளைமாக்ஸ் வரை ஒரு டயலாக் கூட பேசாமல் நடிப்பில் அசத்திவிட்டார் ஜோஜு ஜார்ஜ்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஜோஜுவின் கூட்டாளிகளாக வரும் அனைவருமே சரியான செலக்ஷன். பார்ப்பதற்கு சின்னப் பையன்கள் போல இருந்தாலும் ஏடிஎம் கொலையாளிகளாகவும் ஜோஜுவுக்கு குடைசல் கொடுப்பவர்களாகவும் அந்தப் பொடிப் பயலுகளும் சபாஷ் போட வைக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரியாக வரும் சாந்தினி ஸ்ரீதரனும் கனகச்சிதமாக இருக்கிறார். வேணு & ஜிண்டோ ஜார்ஜ் கூட்டணியின் ஒளிப்பதிவுப் பணியும் க்ரைம் த்ரில்லருக்கும் கூடுதல் எஃபெக்ட் கொடுக்கிறது.
‘பணி’ நல்ல கூட்டணியின் சிறப்பான ‘பணி’.
–மதுரை மாறன்.