எல்.கணேசனுக்காக காகிதப்பூ நாடகம் நடத்திய கலைஞர்!
சசிகலாவின் கணவர் நடராசனும் எல்.கணேசனும் ஆரம்பகால நண்பர்கள். நடராசனும் மற்ற மாணவர்களும் சேர்ந்து தஞ்சையில் 1966-ம் ஆண்டு நடத்திய இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணா பங்கேற்றார். அண்ணா உரையாற்றுவதற்கு முன்பு எல்.கணேசன் உரையாற்றினார். அப்போது அண்ணாவே எதிர்பார்க்காத ஒரு செய்தியை நடராசன் சொன்னார். ‘’வருகிற சட்டமன்றத் தேர்தலில் பேரறிஞர் அண்ணாவின் அனுமதியோடு போட்டியிடக்கூடிய எல்.கணேசன், அடுத்து உரையாற்றுவார்’’ என அறிவித்தார். அண்ணாவும் எந்த ரியாக்ஷனையும் காட்டவில்லை.
அந்த மாநாடு முடிந்ததும் ஆயிரம் ரூபாயை எல்.கணேசனின் சட்டைப் பாக்கெட்டில் திணித்தார் நடராசன். ‘‘எதுக்கு’’ என எல்.கணேசன் கேட்க… ‘‘மாநாட்டில் உரையாற்றிய பலருக்கும் தந்தது போல உங்களுக்கும் வழிச் செலவுக்குத் தர நினைத்தேன். அந்தப் பணம்தான் இது’’ என்றார் நடராசன். ‘‘எனக்கு வேண்டாம்’’ என எல்.கணேசன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க.. ‘‘பணத்தை வாங்கத் தயக்கமாக இருந்தால், அண்ணா எப்படியும் உங்களைத் தேர்தலில் நிற்க வைப்பார். தேர்தல் செலவுக்கு எங்களின் முதல் நன்கொடையாக வைத்துக் கொள்ளுங்கள்’’ என்றார் நடராசன். ‘‘சரி’’ என அவரும் பெற்றுக் கொண்டார்.

இந்தி எதிர்ப்பு மாநாடு முடித்த சில மாதங்களிலேயே பி.எஸ்.ஸி பட்டதாரியான நடராசன் தஞ்சை பேராவூரணியை அடுத்த பெருமகளூர் ஊரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் வேலைக்கு போனார். அப்போதுதான் 1967 சட்டசபைத் தேர்தல் வந்தது. இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அறிவிக்கப்பட்ட எல்.கணேசனுக்கு ஒரத்தநாடு தொகுதியில் ‘சீட்’ கொடுத்தார் அண்ணா. ஒரத்தநாட்டில் தேர்தல் அலுவலகத்தின் திறப்பு விழா நடைபெற்றபோது நடராசன் பங்கேற்றார். பெருமகளூர் உயர்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக வேலை செய்து கொண்டே விடுமுறை நாட்களில் ஒரத்தநாட்டுக்கு வந்து எல்.கணேசனுக்குத் தேர்தல் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனாலும் நடராசன் மீது எல்.கணேசனுக்கு வருத்தம்.
ஒரு நாள் திடீரென்று கோபத்தை நடராசன் மீது காட்டினார் எல்.கணேசன். ‘‘மம்பட்டியை எடுத்து வந்து என் தலையில் மண்ணை வாரிக் கொட்டிவிட்டு போங்க… என்னைத் தேர்தலில் நிற்கத் தூண்டிவிட்டு இப்ப நீங்க ஆசிரியர் வேலையைப் பார்க்க பெருமகளூரிலே உட்கார்ந்து கொண்டால் தேர்தல் வேலைகளை எல்லாம் யார் பார்ப்பார். எப்படி ஓட்டுக் கேட்பது.. தேர்தல் செலவுக்கு எங்கே நிதி திரட்டுவது’’ எனக் கொதித்தார் எல்.கணேசன். உடனே, ‘ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்கிறேன்’ என விலகல் கடிதத்தை எழுதி அனுப்பிவிட்டு எல்.கணேசனுடன் தேர்தல் வேலைகள் பார்க்க ஆரம்பித்தார்.
எல்.கணேசனை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நின்றவர் தண்டாயுதபாணி. பெரும் பணக்காரர். எல்.கணேசன் நிலை அவருக்கு நேரெதிர். அதனால், தேர்தல் செலவுக்கு நிதி திரட்டும் வேலைகளிலும் நடராசன் இறங்கினார். தி.மு.க-வின் பொருளாளரான கலைஞர் கருணாநிதி, ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று கட்சியின் தேர்தல் நிதியை தி.மு.க வேட்பாளர்களுக்கு அளித்து வந்தார். அப்படி ஒரத்தநாடு தொகுதிக்கு வந்தபோது பிரச்னை ஏற்பட்டது. எல்.கணேசனை அழைத்த கலைஞர்கருணாநிதி, ‘‘தலைமை அலுவலக மேனேஜர் சண்முகத்திடம் 30 ஆயிரம் ரூபாய் தேர்தல் செலவுக்கு வாங்கிக் கொள்ளுங்கள்’’ என்றார். இந்த விஷயத்தை நண்பர்கள் நடராசன், ராஜமாணிக்கம், ஜெகதீசன் ஆகியோரிடம் சொன்னார் எல்.கணேசன்.
எல்.கணேசனைவிட நடராசனுக்கு ஆத்திரம் அதிகரித்தது. ‘‘மற்ற தொகுதி வேட்பாளர்களுக்கு எல்லாம் 50 ஆயிரம் ரூபாய். நமக்கு 30 ஆயிரமா? கலைஞர் ஓரவஞ்சனை செய்கிறார். ஒரத்தநாடு தொகுதியில் ஜெயிக்கப் போகிறோம். ‘கட்சிப் பணத்தில் ஜெயிச்சோம்’ என்கிற பெயர் எதற்கு? பணத்தை வாங்க வேண்டாம். அதைவிட இரண்டு மடங்கு நிதியை நாம் திரட்டலாம்’’ என நடராசன் சொல்ல… அதை எல்.கணேசன் ஏற்றுக் கொண்டார்.
‘பணம் வேண்டாம்’ என்பதைச் சொல்ல, கலைஞர் கருணாநிதியைச் சந்திக்கப் போனார்கள். ‘‘கட்சியில் நிதியில்லை. இழுபறி தொகுதிகளுக்குக் கூடுதலாகவும், நிச்சய வெற்றி கிடைக்கும் தொகுதிகளுக்குக் குறைவாகவும் கொடுக்கலாம் என அண்ணா முடிவு செய்திருந்தார். அதனால், அவரைக் கேட்காமல் நான் ஒன்றும் செய்ய முடியாது’’ என்றார் கலைஞர் கருணாநிதி. உடனே நடராசன், ‘‘வெற்றியோ தோல்வியோ எந்தத் தொகுதியாக இருந்தாலும், சில அடிப்படை செலவுகளைச் செய்துதான் ஆக வேண்டும். குறைச்சலான நிதியைப் பெற்றுக்கொண்டு மனச்சங்கடத்தோடு வேலை செய்வதைவிட, நாங்களே முடிந்த அளவுக்கு நிதியைத் திரட்டிச் சமாளித்துக் கொள்கிறோம்’’ என்றார்.
உடனே கலைஞர் கருணாநிதி, ‘‘உங்களுக்குச் சங்கடம் வேண்டாம். உங்க தொகுதியில் ‘காகிதப் பூ’ நாடகம் போட்டு நடித்துக் கொடுக்கிறேன். அதை வைத்து நிதியை நீங்கள் திரட்டிக் கொள்ளலாம்’’ என்றார். சொன்னபடியே ‘காகிதப் பூ’ மேடையேறியது. அதில் கிடைத்த 30 ஆயிரம் ரூபாயை எல்.கணேசனிடம் கொடுத்தார் கலைஞர் கருணாநிதி.
சட்ட மேலவை, சட்டசபை, மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர் என நான்கு வகையான பதவிகளையும் வகித்தவர் எல்.கணேசன், மொழிப்போர் தளபதி என அழைக்கப்பட்டவர். அவசரநிலை காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைதானவர். வயது மூப்பு காரணமாக உயிரிழந்த எல்.கணேசனுக்கு ஆழ்ந்த இரங்கல்.
— எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி








Comments are closed, but trackbacks and pingbacks are open.