பாராசிட்டமால் … இதை மட்டும் செய்யாதீங்க !
சமீபத்தில் கிளினிக்கில் தாய் தனது தனையனுடன் என்னை சந்திக்க வந்திருந்தார். மகனுக்கு வயது ஆறு முடிந்து ஆறு மாதங்கள் கடந்திருக்க எடை 20 கிலோ கிராம் இருந்தான். காலையில் இருந்து காய்ச்சல், மூக்கொழுகல், மூக்கடைப்பு, இருமல், தொண்டை வலி, உடல் வலி, தலை வலி, உடல் சோர்வு என சீசனல் வைரஸ் ஜுரத்திற்கான பொருத்தத்தில் பத்தில் எட்டு பச்சக் என்று அவனிடம் பொருந்தி இருந்தன.
“காலையில் இருந்த காய்ச்சல் அடிக்குது சார். பெரியாஸ்பத்திரி ( அரசு மருத்துவமனை) காய்ச்சல் மாத்திரை வீட்ல இருந்துச்சு. காலைல ஒன்னு கொடுத்தேன். கேக்கல மதியம் பாதி கொடுத்தேன். சாயந்தரம் பாதி கொடுத்தேன் அதுவும் கேக்கல. அதான் கூட்டியாந்துட்டேன் ( அழைத்து வந்து விட்டேன்) ”
“காலைல ஒரு மாத்திரை கொடுத்துருக்கீங்க.. அப்பறம் மதியம் எத்தனை மணிக்கு அரை மாத்திரை கொடுத்தீங்க.. அதுக்கப்பறம் சாயங்காலம் அரை மாத்திரை எத்தனை மணிக்கு கொடுத்தீங்க?”
“காலைல பதினோரு மணிக்கு ஒரு மாத்திரை சார். மதியம் கொஞ்சம் ரசம் சோறு சாப்டக் குடுத்துட்டு ரெண்டு மணிக்கு அரை மாத்திரை … காய்ச்சல் கொறையல.. அதனால திரும்ப நாலு மணிக்கு அரை மாத்திரை கொடுத்துருக்கேன்”
“அம்மா… காய்ச்சல் மாத்திரையை ஓவர் டோஸ் பண்ணத் தெரிஞ்சீங்க பையனுக்கு.. புரியுற மாதிரி சொல்றேன் நல்லா கவனிங்க..
குழந்தைகள் சிறுவர் சிறுமியரைப் பொருத்தவரை ஒரு டோஸ் பாராசிட்டமால் என்பது அவுங்க ஒவ்வொரு கிலோகிராம் எடைக்கும் 15 மில்லிகிராம் என்ற அளவில் இருக்க வேண்டும். இப்போ உங்க பையன் எடை 20 கிலோ இருக்கான்னா அவனோட எடையை 15 ஆல பெருக்கணும். பெருக்குணா என்ன கிடைக்குது?”
“20அ 15ஆல பெருக்குணா 300 வருது சார்”

“கரெக்ட்டு.. இந்த 300 மில்லிகிராம் தான் உங்க பையனுக்கான பாராசிட்டமால் டோஸ். இப்ப நீங்க காலைல பதினோரு மணிக்கு ஒரு முழு பாராசிட்டமால் மாத்திரை கொடுத்துருக்கீங்க. அது 500 மில்லிகிராம் மாத்திரை. ஓவர் டோஸ் தானே?”
“அட ஆமா சார்.. அதிகமாக கொடுத்துட்டேனே ஒன்னும் ஆகாதுல்ல சார்”
“அடுத்து இன்னும் இருக்கு.. ஒரு தடவ பாராசிட்டமால் மாத்திரை/ டானிக்/ சொட்டு மருந்து கொடுத்துட்ட பிறகு அந்த மருந்து கல்லீரல்ல வளர்சிதை மாற்றத்துக்கு உள்ளாகி பிறகு சிறுநீரகங்களால் வெளியேற்றப்பட நான்கு முதல் ஆறு மணிநேரங்கள் ஆகும். எனவே, காய்ச்சலுக்கு பாராசிட்டமால் கொடுக்கும் போதும் கூட அதற்குண்டான இடைவெளி என்பது நான்கு முதல் ஆறு மணிநேரங்கள். சிறுவர்களைப் பொருத்தவரை பாதுகாப்பான இடைவெளி – ஆறு மணிநேரங்கள்”
“அப்படியா சார். நான் பதினோரு மணில இருந்து நாலு மணிக்குள்ள மூணு தடவ மாத்திரை கொடுத்துருக்கேன்.”
மொத்தம் ஐந்து மணிநேரத்துக்குள்ள 1000 மில்லி கிராம் கொடுத்துருக்கீங்க. இது தப்பு தான் இனிமே செய்யாதீங்க.
ஓவர் டோஸ் செய்யும் போது கல்லீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு இருக்கு. இதுமாதிரி ஒரு நாள் முழுவதும் அல்லது ரெண்டு நாளைக்கு கொடுத்துருந்தா தீவிர கல்லீரல் அழற்சி ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தாகி போயிரும்”
“ஐயோ .. அப்டியா சார்.. நல்லவேளை சொன்னீங்க. இல்லனா நைட் பூரா இதே மாதிரி அடிக்கடி மாத்திரை கொடுத்துருப்பேன்.. ஒரு நாளைக்கு எவ்வளவு மாத்திரை சார் கொடுக்கலாம்?”

எப்பவும் மனசுல வச்சுக்குங்க. ஒரு டோஸ் பாராசிட்டமால் என்பது எடை × 15. ஒரு நாளுக்கான அதிகபட்ச பாராசிட்டமால் என்பது எடை × 60 . இரு பாராசிட்டமால் டோஸ்களுக்கு இடையேயான பாதுகாப்பான இடைவெளி நேரம் – 4 முதல் 6 மணிநேரங்கள்.
இடையில் காய்ச்சல் இருந்தால் உடல் முழுவதும் குளிர்ந்த நீரால் ஒத்தி எடுக்க வேண்டும். இதன் மூலம் காய்ச்சல் குறையும். கண்டிப்பாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். பாராசிட்டமால் என்பது மிகவும் பாதுகாப்பான காய்ச்சல் மருந்து. ஆனால், அதிலும் கூட கவனக்குறைவு ஏற்பட்டால் அதிலும் குழந்தைகள் விசயத்தில் ஓவர் டோஸ் செய்தால் பின்விளைவுகள் மோசமாக அமையும் . விழிப்புணர்வு பெறுவோம்.
— Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.