மாணவர்கள் சக்தியைக் காட்டும் ”பராசக்தி” – சிவகார்த்திகேயன் பெருமிதம்!
ஆகாஷ் பாஸ்கரனின் ‘டான் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் சுதா கொங்கரா டைரக்ஷனில் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா உட்பட பலர் நடித்து தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி ஜனவரி.10-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது ‘பராசக்தி’. இதன் முதல் புரமோ நிகழ்ச்சி டிசம்பர் மாதம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.
இந்த 2026 ஜனவரி.03—ஆம் தேதி மாலை சென்னை தாம்பரம் அருகே உள்ள சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரியில் டிரெய்லர் வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடந்தது.
தனது சிஷ்யை சுதா கொங்கராவின் தனித்திறமை குறித்து பெருமிதம் பொங்க பேசிய டைரக்டர் மணிரத்னம், சிவகார்த்திகேயனின் அபார வளர்ச்சி, கதைத் தேர்வு குறித்து புகழ்ந்து பேசினார்.
ரவிமோகன்,
“இந்த ஆண்டின் மிகச் சிறந்த படமாக பராசக்தி இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சகோதரர் சிவகார்த்திகேயன் இந்த உயரத்திற்கு வந்துள்ளார். அதற்குண்டான எல்லாத் தகுதியும் உள்ள சிவா, இன்னும் பெரிய பெரிய மேடைகளில் ஏற வேண்டும்”.
ஸ்ரீலீலா,
“இந்த மாதிரியான கதாபாத்திரத்திற்குத் தான் காத்திருந்தேன். அதற்காக சுதா மேடமுக்கும் சிவாவுக்கும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
ஜி.வி.பிரகாஷ்,
“இந்த பராசக்தியில் முக்கியமான விசயத்தை ஒளித்து வைத்து, அதை பொத்திப் பொத்தி பாதுகாத்து வருகிறோம். படம் பார்த்த பிறகு அது என்னன்னு உங்களுக்குத் தெரியும்”.
சுதா கொங்கரா,
“பராசக்தியை உருவாக்க துணை நின்ற பல சக்திகளுக்கு நன்றி. படம் பார்த்த பிறகு நீங்கள் பேசுவது தான் எனது பேச்சாக இருக்க வேண்டும்”.
அதர்வா முரளி,
“சிலரின் வளர்ச்சியைப் பார்க்கும் நம் மனசுக்கு நெருக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அப்படிப்பட்டவர் தான் சிவகார்த்திகேயன்”.
சிவகார்த்திகேயன்,
“படத்தின் ஸ்கிரிப்டை ஆங்கிலத்தில் தான் கொடுத்தார் சுதா கொங்கரா. கொஞ்சம் டயம் எடுத்து படிச்சுட்டு மனசுக்கு திருப்தி ஏற்பட்டதும் ஓகே சொன்னேன். இதுக்கடுத்து ஷூட்டிங்கிலும் சீன்களை ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில் தான் சொல்ல ஆரம்பிச்சார். மேடம்னு நான் இழுத்ததும் தமிழ்ல சொல்ல ஆரம்பிச்சார். பராசக்தி என்ற பெயரே வலிமை கொண்டது. 1960-களுக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் ஆற்றல் இந்த பராசக்திக்கு உண்டு. மாணவர்கள் எப்போதுமே வலிமை கொண்டவர்கள். அவர்களின் வலிமை எப்படிப்பட்டது, சக்தி எப்படிப்பட்டது என்பதை இப்படம் அழுத்தமாகப் பேசும். பலரின் தியாகங்களை நேர்மறையாகவும் மரியாதையாகவும் பதிவு செய்துள்ளோம்.
நான் காலேஜ்ல படிக்கும் போது ரவிமோகனின் ரசிகன். இப்போது பெரிய ஹீரோவாக இருந்தாலும் இதில் வில்லன் ரோல் பண்ண ஒத்துக் கொண்ட அவரின் பெருந்தன்மைக்கு நன்றி. இதில் பவர்ஃபுல் வில்லன் அவர். படத்தைப் பற்றி என்னைப் பற்றி ஒரு கூட்டமே சேர்ந்து தாறுமாறாக கும்மியடிக்குது. அதையெல்லாம்…அவர்களையெல்லாம் நான் கண்டு கொள்வதேயில்லை. நான் எப்போதும் தமிழ்ட்நாடு மக்களையும் எனது ரசிகர்களையும் நம்பி எனது பயணத்தைத் தொடர்கிறேன். பெரிய நடிகர்-நடிகைகள் பட்டாளம், முழுக்க முழுக்க 1960 களின் செட், ஒன்றரை ஆண்டுகள் ஷூட்டிங் எல்லாத்தையும் திறம்பட கையாண்டு இந்த பராசக்தியைத் தயாரித்த ஆகாஷ் பாஸ்கரன் சார் எங்க எல்லோருக்கும் மகாசக்தி”
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.